ஜப்னா அணிக்காக சதமடித்த சமிந்த பெர்னாண்டோ

National Super League Four Day Tournament 2022

212

இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்திருக்கும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட முதல்தர கிரிக்கெட் தொடர் இன்று (23) ஆரம்பமாகியது.

ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகிய முதல் போட்டியில் சதீர சமரவிக்ரம தலைமையிலான ஜப்னா அணி, சம்மு அஷான் தலைமையிலான கொழும்பு அணியையும், காலியில் ஆரம்பமாகிய 2 ஆவது போட்டியில் தனஞ்சய லக்ஷான் தலைமையிலான காலி அணி, கமிந்து மெண்டிஸ் தலைமையிலான கண்டி அணியையும் எதிர்கொண்டது.

இதன்படி இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் ஜப்னா அணியின் சமிந்த பெர்னாண்டோ சதமடித்து அசத்தினார். அத்துடன், ஜப்னா அணியின் நவோத் பரணவிதான, சதீர சமரவிக்ரம மற்றும் கண்டி அணியின் லஹிரு உதார, லசித் குரூஸ்புள்ளே, கமிந்து மெண்டிஸ் மற்றும் கசுன் விதுர ஆகியோர் அரைச்சதங்களைப் பெற்று பிரகாசித்திருந்தனர்.

ஜப்னா எதிர் கொழும்பு

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா அணியின் தலைவர் சதீர சமரவிக்ரம முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

அதன்படி ஜப்னா அணியின் சார்பில் நவோத் பரணவிதான, நிஷான் மதுஷங்க ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். நிஷான் மதுஷங்க 10 ஓட்டங்களுடன் லஹிரு மதுஷங்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் 2 ஆவது விக்கெட்டுக்காக நவோத் பரணவிதானவுடன் ஜோடி சேர்ந்த சமிந்த பெர்னாண்டோ நிதானமாக ஆடி ஓட்டங்களைக் குவித்தார். இதில் 171 பந்துகளுக்கு முகங்கொடுத்த நவோத் பரணவிதான 77 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்து வந்த அணித்தலைவர் சதீர சமரவிக்ரம மற்றும் சமிந்த பெர்னாண்டோ ஆகிய இருவரும் 3 ஆவது விக்கெட்டுக்காக 115 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று வலுச்சேர்த்தனர். இதில் ஜப்னா அணிக்காக சதமடித்து அசத்திய சமிந்த பெர்னாண்டோ 241 பந்துகளில் 141 ஓட்டங்களை எடுத்து பிரபாத் ஜயசூரியவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல்தரப் போட்டிகளில் சமிந்தவின் இரண்டாவது சதம் இதுவாகும்.

இதனையடுத்து அணித்தலைவர் சதீர சமரவிக்ரம 58 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்ப, இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஜப்னா அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

கல்ஹார சேனாரட்ன 8 ஓட்டங்களுடனும், துனித் வெல்லாலகே 2 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

கொழும்பு அணியின் பந்துவீச்சில் லஹிரு மதுஷங்க மற்றும் பிரபாத் ஜயசூரிய ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

ஜப்னா அணி – 311/4 (90) – சமிந்த பெர்னாண்டோ 141, நவோத் பரணவிதான 77, சதீர சமரவிக்ரம 58, லஹிரு மதுஷங்க 2/47, பிரபாத் ஜயசூரிய 2/89

காலி எதிர் கண்டி

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கமிந்து மெண்டிஸ் தலைமையிலான கண்டி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்த அணிக்காக லஹிரு உதார மற்றும் லசித் குரூஸ்புள்ளே ஆகிய இருவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கியதுடன், முதல் விக்கெட்டுக்காக 169 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று வலுச்சேத்தனர்.

இதில் லசித் குரூஸ்புள்ளே 93 ஓட்டங்களை எடுத்து நிமேஷ் விமுக்தியின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, லஹிரு உதார 92 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இதனையடுத்து 3 ஆவது விக்கெட்டுக்காக ஓஷத பெர்னாண்டோ மற்றும் கமிந்து மெண்டிஸ் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 59 ஓட்டங்களை சேர்த்தனர். எனினும், ஓஷத பெர்னாண்டோ 35 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஓய்வறை திரும்பினார்.

தொடர்ந்து வந்த கசுன் விதுர மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் 4 ஆவது விக்கெட்டுக்காக சத இணைப்பாட்டமொன்றை முன்னெடுத்து 121 ஓட்டங்களை எடுத்து வலுச்சேர்த்தனர். இதில் 58 ஓட்டங்களை எடுத்த கசுன் விதுர சானக ருவன்சிறியின் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

எனவே, தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் கண்டி அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 373 ஓட்டங்களைப் பெற்று காணப்படுகின்றது.

கண்டி அணியின் தலைவர் கமிந்து மெண்டிஸ் 90 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்க, காலி அணியின் பந்துவீச்சில் சானக ருவன்சிறி 2 விக்கெட்டுகளையும், சங்கீத் குரே மற்றும் நிமேஷ் விமுக்தி ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தனர்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

கண்டி அணி – 373/4 (89.5) – லசித் குரூஸ்புள்ளே 93, கமிந்து மெண்டிஸ் 90*, லஹிரு உதார 92, கசுன் விதுர 58, ஓஷத பெர்னாண்டோ 35, சானக ருவன்சிறி 2/75

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<