IPL ஏலத்தில் வாங்கப்பட்ட இலங்கையின் மூன்று வீரர்கள்!

IPL Auction 2024

329

டுபாயில் இன்று (19) நடைபெற்று முடிந்த 2024ம் ஆண்டுக்கான IPL ஏலத்தில் இலங்கை அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வாங்கப்பட்டுள்ளார். இவருக்கு நிர்ணயிக்கப்பட்ட 1.5 கோடி ரூபா அடிப்படை விலைக்கு வாங்கப்பட்டுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியிலிருந்து விலகிய இளம் வீரர்

கடந்த இரண்டு ஆண்டுகளாக வனிந்து ஹஸரங்க றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்த நிலையில், முதன்முறையாக IPL தொடரில் புதிய அணியில் விளையாடவுள்ளார்.

அதேநேரம் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான டில்ஷான் மதுஷங்க மற்றும் நுவான் துஷார ஆகியோரை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.

டில்ஷான் மதுஷங்க மும்பை அணிக்காக 4.6 கோடி ரூபாவுக்கு (இந்திய ரூபாய்) வாங்கப்பட்டதுடன், நுவான் துஷார 4.8 கோடி ரூபாவுக்கு (இந்திய ரூபாய்) வாங்கப்பட்டுள்ளார்.

குறித்த மூன்று வீரர்கள் அணிகளால் வாங்கப்பட்டதுடன் தசுன் ஷானக, குசல் மெண்டிஸ், லஹிரு குமார, துஷ்மந்த சமீர மற்றும் சரித் அசலங்க ஆகியோரை எந்த அணிகளும் வாங்க முன்வரவில்லை.

இதேவேளை இம்முறை நடைபெற்ற IPL ஏலத்தில் அவுஸ்திரேலியாவின் இரண்டு வீரர்கள் அதிகூடிய தொகைக்கு வாங்கப்பட்டிருந்தனர். IPL ஏல வரலாற்றில் அதிகூடிய தொகையான 24.75 கோடிக்கு மிச்சல் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியதுடன், பெட் கம்மின்ஸை சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 20.50 கோடி ரூபாவுக்கு வாங்கியது.

இவர்கள் இருவரும் அதிகூடிய விலைக்கு வாங்கப்பட்ட நிலையில், டெரைல் மிச்சல் 14 கோடி (சென்னை சுபர் கிங்ஸ்), ஹர்ஷல் படேல் 11.75 கோடி (பஞ்சாப் கிங்ஸ்), அல்ஷாரி ஜோசப் 11.50 கோடி (றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்) மற்றும் ஸ்பென்சர் ஜோன்சன் 10 கோடி (குஜராத் டைட்டன்ஸ்) என அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டனர்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<