SLC ரெட்ஸ் அணியை இலகுவாக வீழ்த்திய SLC புளூஸ்!

Dialog-SLC Invitational T20 League 2021

556

டயலொக் – SLC அழைப்பு T20 லீக் தொடரில் இன்று (13) நடைபெற்ற இரண்டாவது போட்டியில், SLC ரெட்ஸ் அணியை எதிர்கொண்ட SLC புளூஸ் அணி 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பதிவுசெய்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற புளூஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அணியின் தலைவர் தனன்ஜய டி சில்வா முதலிரண்டு போட்டிகளிலும் விளையாடமாட்டார் என்பதால், அஞ்செலொ பெரேரா தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அழைப்பு T20 தொடரின் முதல் போட்டியில் கிரேய்ஸ் அணிக்கு திரில் வெற்றி

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய புளூஸ் அணி மிகவும் மந்தமான முறையில் ஓட்டங்களை பெற்றதுடன், இடைக்கிடையில் விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் 120 ஓட்டங்களை கடக்குமா? என்ற கேள்வி எழுந்த போதும், அஷேன் பண்டார மற்றும் செஹான் ஆராச்சிகே ஆகியோரது சிறந்த இணைப்பாட்டத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இறுதி பந்துவரை துடுப்பெடுத்தாடிய அஷேன் பண்டார 25 பந்துகளுக்கு 45 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, ரன்-அவுட் மூலம் ஆட்டமிழந்தார். இவருக்கு அடுத்தப்படியாக குறைந்த ஓட்டவேகத்துடன், துடுப்பெடுத்தாடிய செஹான் ஆராச்சிகே 31 பந்துகளில் 36 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ரெட்ஸ் அணி சார்பாக பந்துவீச்சில் அகில தனன்ஜய 3 விக்கெட்டுகளையும், சீகுகே பிரசன்ன 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

புளூஸ் அணி நிர்ணயித்த 149 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய ரெட்ஸ் அணி 3 ஓவர்களில் 30 ஓட்ட ங்களை கடந்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. எனினும், புளூஸ் அணியின் தலைவர் அஞ்செலோ பெரேரா, தன்னுடைய பந்துவீச்சாளர்களை சிறப்பாக கையாள ஆரம்பித்தார்.

அதன்படி, பிரவீன் ஜயவிக்ரம அணிக்காக மிகச்சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி, முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன். லக்ஷான் தனன்ஜய, டில்ஷான் மதுசங்க மற்றும் அஞ்செலோ பெரேரா ஆகியோரும் சிறந்த நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்காரணமாக ரெட்ஸ் அணி 17 ஓவர்கள் நிறைவில் 92 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ரெட்ஸ் அணிசார்பாக இளம் ஆரமபத் துடுப்பாட்ட வீரர் நிபுன் தனன்ஜய 14 ஓட்டங்களையும், அணித் தலைவர் தினேஷ் சந்திமால் 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இவர்களை தவிர்த்து எந்த வீரரும், இரட்டை இலக்க ஓட்டங்களை பெறவில்லை.

புளூஸ் அணி சார்பாக பந்துவீச்சில் அஞ்செலோ பெரேரா, பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஷிரான் பெர்னாண்டோ, தனன்ஜய லக்ஷான், டில்ஷான் மதுஷங்க மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதேவேளை, SLC புளூஸ் அணி தங்களுடைய முதல் வெற்றியினை பதிவுசெய்துள்ள நிலையில், நாளைய தினம் (14) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் SLC ரெட்ஸ் மற்றும் SLC கிரேய்ஸ் அணிகள் மோதவுள்ளதுடன், இரண்டாவது போட்டியில் SLC புளூஸ் மற்றும் SLC கிரீன்ஸ் அணிகள் மோதவுள்ளன. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<