அழைப்பு T20 தொடரின் முதல் போட்டியில் கிரேய்ஸ் அணிக்கு திரில் வெற்றி

170

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் இன்று ஆரம்பித்துள்ள, டயலொக் – SLC அழைப்பு T20 லீக்கின் முதல் போட்டியில், SLC கிரீன்ஸ் அணியை எதிர்கொண்ட தசுன் ஷானக தலைமையிலான SLC கிரேய்ஸ் அணி ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கிரேய்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய கிரேய்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

MCCயின் புதிய அரங்கத்தை திறந்துவைத்த குமார் சங்கக்கார

கிரேய்ஸ் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர்களான கமில் மிஷார மற்றும் நுவனிந்து பெர்னாண்டோ ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்த போதிலும் அவர்கள் சோபிக்க தவறியிருந்தனர். 

எனினும், அணித்தலைவர் என்ற ரீதியில் தசுன் ஷானக பொறுப்பை ஏற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக ஆடியிருந்தார். இவர், இன்னிங்ஸின் 20வது ஓவர் வரையில் வேகமாக ஓட்டங்களை குவித்தார். தசுன் ஷானக வெறும் 41 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 84 ஓட்டங்களை குவித்தார். 

மறுமுனையில், சதுரங்க டி சில்வா 23 ஓட்டங்கள், மினோத் பானுக 21 ஓட்டங்கள் மற்றும் புலின தரங்க 16 ஓட்டங்கள் என பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் கிரீன்ஸ் அணி சார்பாக அணித்தலைவர் அஷான் பிரியன்ஜன் 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.

மறுமுனையில் 167 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய கிரீன்ஸ் அணி முதல் இரண்டு ஓவர்களில் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்தது. எனினும், இளம் வீரர்களான கமிந்து மெண்டிஸ் மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் நிதானமாக ஆட்டத்தை நகர்த்தினர்.

பெதும் நிஸ்ஸங்க 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதும், கமிந்து மெண்டிஸ் வேகமாக ஓட்டங்களை குவித்து அணிக்கு வெற்றிபெறும் நம்பிக்கையை கொடுத்தார். எனினும், கிரேய்ஸ் அணியின் புலின தரங்க மிகச்சிறப்பாக பந்துவீச, கமிந்து மெண்டிஸ் 48 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரின் ஆட்டமிழப்பின் பின்னர் கிரீன்ஸ் அணியின் வெற்றிக்கனவு சறுக்க தொடங்கியது. நுவான் பிரதீப் வீசிய இறுதி ஓவரில் 17 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், இஷான் ஜயரத்ன வேகமாக ஓட்டங்களை குவித்த போதும், கிரீன்ஸ் அணியால் 15 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. இதனால், அவ்வணி ஒரு ஓட்டத்தால் தோல்வியை சந்தித்தது.

இஷான் ஜயரத்ன 10 பந்துகளில் 20 ஓட்டங்களை குவிக்க, கிரேய்ஸ் அணியின் புலின தரங்க  22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், அஷைன் டேனியல் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதன்படி, முதல் போட்டியில் கிரேய்ஸ் அணி ஒரு ஓட்டத்தால் முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளதுடன், இன்றைய தினத்துக்கான இரண்டாவது போட்டியில் SLC ரெட்ஸ் மற்றும் SLC ப்ளூஸ் அணிகள் மோதவுள்ளன. இந்தப்போட்டி, இரவு 7.00 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<