DCL16 – கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் அபார வெற்றி, ரினொன் மற்றும் விமானப்படையும் வெற்றியைப் பதிவு செய்தது

235
DCL16

டயலொக் சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் 3 போட்டிகள் இவ்வாரம் சனிக்கிழமை 2ஆம் திகதி நடைபெற்றது. இப்போட்டிகளில் கொழும்பு கால்பந்தாட்டக் கழகம், விமானப்படை கழகம், மற்றும் ரினொன் கழகம் ஆகியன வெற்றிபெற்றன

கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் மற்றும் நீர்கொழும்பு இளைஞர் கழகம் இடையிலான போட்டி

கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் மற்றும் நீர்கொழும்பு இளைஞர் கழகம் இடையிலான போட்டி கொழும்பு நகர கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றது. ஆரம்பத்தில் வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும்  நீர்கொழும்பு இளைஞர் அணியினரால் எந்த ஒரு கோலையும் போட முடியவில்லை ஆரம்பத்தில் வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தாத பொழுதும் 44 ஆவது நிமிடத்தில் சிறந்த முறையில் பந்தைப் பகிர்ந்து ஜப்பான் நாட்டவரான டேன் ஈடோ கொழும்பு கால்பந்தாட்டக் கழகத்திற்காக முதலாவது கோலை அடித்தார். போட்டியின் முதல் பாதி 1-0 என்ற நிலையில் முடிவுற்றது .

இரண்டாம் பாதியில் ஆரம்பத்தில் இருந்தே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய கொழும்பு கால்பந்தாட்டக் கழக அணியினருக்கு 50ஆவது நிமிடத்தில் பந்தைக் கையால் ஆடியமைக்காக பெனல்ட்டி  கிடைக்கப்பெற்றது. தமக்குக் கிடைத்த வாய்ப்பை வீணாக்காத மோமஸ் யாப்போ கோல் அடித்து கொழும்பு கால்பந்தாட்டக் கழகத்தை 2-0 என்று முன்னிலைப்படுத்தினார். இரண்டாவது கோல் அடித்து அடுத்த 3ஆவது நிமிடத்திலேயே அபிஸ் ஒலயாமி இன்னொரு கோல் அடித்து தமது அணியினை 3-0 என்று முன்னிலைப்படுத்தினார். இன்னொரு கோலையும் அடிக்க அதிக நேரம் எடுக்காத கொழும்பு கால்பந்தாட்டக் கழக அணியின் நாகூர் மீரா 55ஆவது நிமிடத்தில் கோல் அடித்து கொழும்பு அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிக்கொண்டது.


விமானப்படை மற்றும் சோண்டர்ஸ் அணிகளுக்கிடையிலான  போட்டி

விமானப்படை மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக சென்ற இப்போட்டியில் இரு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்டன. விமானப்படை அணியின் கவிந்து இஷான் 12ஆவது நிமிடத்தில் முதலாவது கோல் அடித்து விமானப்படையை முன்னிலைக்கு அழைத்துச் சென்றார். சோண்டர்ஸ் அணியினால் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்க முடியாத நிலையில் முதல் பாதி 1-0 என்ற நிலையில் விமானப்படைக்கு சாதகமாக அமைந்தது.

இரண்டாவது பாதியிலும் போட்டி விறுவிறுப்பாக நடைபெற விமானப்படையின் டில்ஷான் பெர்னாண்டோ 66ஆவது நிமிடத்தில் கோல் அடித்து விமானப்படையின் வெற்றியை உறுதி செய்தார். 68ஆவது நிமிடத்தில் விமானப்படையின் வீரர் டிமுத்து லக்மால் சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார். 10 வீரர்களுடன் விமானப்படை விளையாடிய பொழுதும் சோண்டர்ஸ் அணியால் கோல் எதுவும் அடிக்க முடியாத நிலையில் போட்டியை விமானப்படை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிக்கொண்டது.


ரினோன் மற்றும் சூப்பர் சன் அணிகளுக்கிடையிலான போட்டி

ரினோன் மற்றும் சூப்பர் சன் அணிகளுக்கிடையிலான போட்டி களனி கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றது. ஆரம்பம் முதலே இரு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்டன. சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய ரினொன் அணியின் மொஹம்மட் ரிப்னாஸ் 29ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.தொடர்ந்து 43ஆவது நிமிடத்தில் அபாம் அர்கம் கோல் அடிக்க ரினொன் அணியானது போட்டியின் முதல் பாதியில் 2-0 என்று முன்னிலையில் காணப்பட்டது.

சூப்பர் சன் அணியினர் கோல் அடிக்க முயன்ற பொழுதும் இரண்டாம் பாதியில் முதல் சில நிமிடங்களில் கோல் அடிக்க முடியவில்லை.போட்டியின் இறுதி சில நிமிடங்களான  83ஆவது நிமிடத்தில் சப்ராஸ் கைஸ் கோல் அடித்து  சூப்பர் சன் அணியிற்கு நம்பிக்கை கொடுத்த பொழுதும் 85ஆவது நிமிடத்தில் ஜாப் மைக்கல் ரினொன் அணியிற்காக கோல் அடித்து ரினொன் அணியின் வெற்றியை உறுதி செய்தார். போட்டியை  3-1 என்ற நிலையில் ரினோன்  கழகம் வெற்றிகொண்டது.