இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், சாம் கரனுக்கு ஓய்வு

397

தென்னாபிரிக்காவுக்கு இந்த மாதம் சுற்றுப்பயணம் செய்யும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் முன்னணி வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஜொப்ரா ஆர்ச்சர், சாம் கரன் ஆகியோருக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு இம்மாதம் இறுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் முதலாம் திகதி வரை 3 T20i போட்டிகளில் விளையாடுகிறது. அதன்பின் டிசம்பர் 4 முதல் 9ஆம் திகதி வரை 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது

இயென் மோர்கன் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் குழாத்தில் இம்முறை .பி.எல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடிய பென் ஸ்டோக்ஸ், ஜொப்ரா ஆர்ச்சர் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய சாம் கரன் ஆகிய மூவருக்கும் மனநலன், உடல்நலன் கருதி ஒருநாள் தொடரில் ஓய்வு அளிப்பதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் தேர்வுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது

இங்கிலாந்து – தென்னாபிரிக்க மோதும் ஒருநாள், T20 தொடர் நவம்பரில்

எனினும், தென்னாபிரிக்கா அணியுடன் நடைபெறவுள்ள T20i தொடரில் இம்முறை .பி.எல் தொடரில் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்

அதேசமயம், இங்கிலாந்து டெஸ்ட் அணித் தலைவர் ஜோ ரூட், வேகப் பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் T20i அணியில் இடம்பெறவில்லை.

இதனிடையே, வொர்விக்ஷெயார் கழகத்தின் வேகப் பந்துவீச்சாளர் ஒல்லி ஸ்டோன், லங்கஷெயார் கழகத்தின் துடுப்பாட்ட வீரர் லியம் லிவிங்ஸ்டோன், சமரெஸ்ட் கழகத்தின் சகலதுறை வீரர் லிவிஸ் கிரிகோரி ஆகியோர் ஒருநாள் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

அத்துடன், 2015ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு இறுதியாக கடந்த ஆகஸ்ட் மாதம் அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய வேகப் பந்துவீச்சாளரான ரீஸ் டொப்ளே, ஒருநாள் மற்றும் T20i தொடருக்கான குழாத்தில் இடம்பெற்றுள்ளார்

Video – LPL இல் பயிற்சியாளராகும் இலங்கை வீரர்கள் | Sports Roundup – Epi 138

இதேநேரம், மேலதிக வீரர்களாக ஜெக் போல், டொம் பென்டன் மற்றும் டொம் ஹெல்ம் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதன்படி, தென்னாபிரிக்காவுக்கு எதிர்வரும் 16ஆம் திகதி புறப்பட்டுச் செல்லும் இங்கிலாந்து அணி, தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகு உயிர் பாதுகாப்பு வளையத்துக்கு செல்வார்கள்

அத்துடன், அனைத்து போட்டிகளும் ரசிகர்கள் இல்லாமலேயே மூடிய மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இங்கிலாந்து T20i குழாம் 

இயென் மோர்கன் (தலைவர்), மொயின் அலி, ஜோப்ரா ஆர்ச்சர், ஜோனி பேர்ஸ்டோ, சாம் கரன், ஜோஸ் பட்லர், டொம் கரன், கிறிஸ் ஜோர்டன், டாவிட் மலான், ஆடில் ரஷீத், ஜேஸன் ரோய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டொப்லே, மார்க் வுட், சாம் பில்லிங்ஸ் 

இங்கிலாந்து ஒருநாள் குழாம் 

இயென் மோர்கன் (தலைவர்), மொயின் அலி, ஜோனி பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், டொம் கரன், லீவிஸ் கிரிகோரி, லியம் லிங்ஸ்டோன், ஆடில் ரஷீத், ஜோ ரூட், ஜேஸன் ரோய், ஒல்லி ஸ்டோன், ரீஸ் டொப்லே, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<