டெல்லி கெப்பிடல்ஸ் அணியில் ஒருவருக்கு கொரோனா தொற்று

192
Delhi Capitals

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் விளையாடுகின்ற முக்கிய அணிகளில் ஒன்றான டெல்லி கெப்பிடல்ஸ் அணியின் துணை பிசியோதெரபிஸ்டுக்கு (உடற்பயிற்சி நிபுணர்) கொவிட் – 19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இம்மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள .பி.எல் தொடரில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ளன.  

>> IPL தொடரில் விளையாட முஸ்தபிசூர் ரஹ்மானுக்கு அனுமதி மறுப்பு

அனைத்து .பி.எல் அணி வீரர்கள், ஊழியர்கள், முதல் வாரம் முழுவதும் சுய தனிமைப்படுத்தலில் இருந்தனர். அப்போது சென்னை சுப்பர் கிங்ஸ் முகாமில் மட்டும் 13 பேருக்கு கொவிட் – 19 வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும், அதன் பிறகு சென்னை அணியில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் அந்த அணி பயிற்சியையும் ஆரம்பித்துள்ளது

இந்த நிலையில், டெல்லி கெப்பிடல்ஸ் அணியில் ஒருவருக்கு கொவிட் – 19 வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

அந்த அணியின் உதவி பிசியோதெரபிஸ்ட்டுக்கு கொவிட் – 19 வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது டுபாயில் சுய தனிமைப்படுத்தலில் இருக்கிறார் என அணி நிர்வாகம் கூறி உள்ளது

முன்னதாக அவரது முதல் இரண்டு பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது

ஆனால், மூன்றாவது பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் இன்னும் அணி வீரர்கள் மற்றும் உதவியாளர்கள் யாரையும் சந்திக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால், டெல்லி கெப்பிடல்ஸ் அணியினர் திட்டமிட்டபடி பயிற்சிகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> IPL தொடரின் லீக் சுற்று போட்டி அட்டவணை அறிவிப்பு

தற்போது பாதிக்கப்பட்ட நபர் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். அதன் முடிவில் எடுக்கப்படும் இரண்டு பி.சி.ஆர் பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அவர் மீண்டும் டெல்லி அணியுடன் இணையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை, அவர் வீரர்களில் யாரையாவது சந்தித்து இருந்தால் நிலைமை மோசமாக மாறி இருக்கும். மொத்த டெல்லி கெப்பிடல்ஸ் அணியும் தனிமையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கும். அது குறித்து தான் .பி.எல் அணிகள் இடையே அச்சம் நிலவி வருகிறது.

இதனிடையே டெல்லி அணி, எதிர்வரும் 20ஆம் திகதி தமது முதலாவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பன்ஞாப் அணியை சந்திக்கவுள்ளது.

இதுஇவ்வாறிருக்க, டுபாயில் உள்ள பிசிசிஐ மருத்துவக் குழு உறுப்பினர் ஒருவருக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று இருப்பதாக கடந்த 3ஆம் திகதி உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் இருந்து டுபாய்க்கு விமானத்தில் சென்றபோது அவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

அத்துடன், பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் அகடமியில் இரண்டு பேருக்கு கொவிட் – 19 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<