சுதந்திரக் கிண்ண T-20 தொடரின் ஆறாவது போட்டியில் பங்களாதேஷ் அணியினர் இலங்கை அணியினை கிண்டல் செய்யும் விதமாக பாம்பு நடனம் ஆடியது, இலங்கை வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மைதானத்தினை விட்டு வெளியேறுவது போன்று அச்சுறுத்தல் விடுத்தது, ஓய்வறைக் கதவின் கண்ணாடி உடைக்கப்பட்டது போன்றவை கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.  

இது மாதிரியாக கடந்த காலங்களிலும் இலங்கை அணியுடனும், இலங்கை வீரர்களுடனும் ஏனைய நாட்டு அணிகளும், வீரர்களும் முறுகல் நிலையினை தோற்றுவித்த சம்பவங்கள் பல இருக்கின்றன.

அப்படியாக கடந்த காலங்களில் ஏனைய நாட்டு வீரர்கள் இலங்கை அணியுடன் சச்சரவுகள் செய்த சில சந்தர்ப்பங்களை மீட்டிப் பார்ப்போம்.

  • ரொட் டக்கர், 1990

1990களில் கத்துக்குட்டிகளாக வலம் வந்த இலங்கை அணி, அப்போது அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் முக்கோண ஒரு நாள் தொடர் என்பவற்றில் விளையாடியிருந்தது.

கிரிக்கெட் உலகிற்கு மோசமான நடத்தைகளை வெளிக்காட்டிய பங்களாதஷ் வீரர்கள்

கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு…

இந்த சுற்றுப் பயணத்தின் போது முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் பெரிய அனுவபத்தைக் கொண்டிராத இலங்கை வீரர்கள், அவுஸ்திரேலியாவில் பிரபல்யமாக காணப்பட்ட உள்ளூர் அணிகளுடன் தமது திறமைகளை வளர்த்துக்கொள்ள முதல்தரப் போட்டிகளில்  பங்கேற்றிருந்தனர்.

அந்த வகையில் தஸ்மேனியா அணியுடன் மூன்று நாட்கள் கொண்ட போட்டியொன்றில் (பதில் தலைவரான) அரவிந்த டி சில்வாவின்  கீழான இலங்கை அணி மோதியிருந்தது. இப்போது மிகவும் பிரபல்யமான போட்டி நடுவர்களில் ஒருவராக இருக்கும் ரொட் டக்கர் குறித்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளராக தஸ்மேனிய அணிக்கு ஆடியிருந்தார்.

போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் இலங்கை அணியின் அரவிந்த டி சில்வாவுடன், டக்கர் வேண்டுமென்றே வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்தது பெரும் சர்ச்சையினை கிளப்பியிருந்தது. பின்னர், இந்த விடயம் பெரும் பூதகரமாக மாற, டக்கர் தனது மோசமான செயலுக்காக மன்னிப்புக் கோரினார். இலங்கை அணி வீரருடன் எதிரணி வீரர் ஒருவர் மோதலில் ஈடுப்பட்ட ஆரம்ப சம்பவங்களில் ஒன்றாக இது அமைந்தது.

Courtesy – Getty Images

அதோடு, இந்த சுற்றுப் பயணத்தில் ஆஸி. அணியுடன் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸி. வீரர்கள், இலங்கையின் இளம் வீரர்களை இனரீதியாக சிறுமைப்படுத்தும் வார்த்தைகளை உபயோகித்ததாக இலங்கை அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க ஐ.சி.சி யிடம் புகார் கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை மட்டுமல்லாது ஆஸி. அணியினர் இன்னும் சில அணிகளையும் இன ரீதியாக சிறுமைப்படுத்திய சம்பவங்கள் நிறையவே வரலாற்றில் பதிவாகி இருக்கின்றன.

  • செளரவ் கங்குலி, 2002

2002ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதியிருந்தன. கொழும்பில் இடம்பெற்றிருந்த இந்தப் போட்டியில் முதலில் இலங்கை அணி துடுப்பாடியிருந்தது.

மோசமான நடத்தைக்கு வருந்திய பங்களாதேஷ் கிரிக்கெட் சபை

சுதந்திரக் கிண்ண T20 முத்தரப்பு…

போட்டியின் 40ஆவது ஓவரின் இறுதிப் பந்து வீசப்பட்டிருந்த போது அதனை இலங்கை வீரரான ரசல் ர்னல்ட் எதிர்கொண்டிருந்தார். குறித்த பந்துக்கு ஓட்டம் ஒன்றினை பெற முயற்சித்த ர்னல்ட் ஓட்டம் பெற ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே அம்முயற்சியினை கைவிட்டார்.  

Courtesy – Getty Images

அப்போது, விக்கெட் காப்பாளரான ராகுல் ட்ராவிட் இந்திய அணியின் தலைவரான செளரவ் கங்குலியுடன் சிறிது நேரம் பேசியதன் பின்னர் ஆர்னல்ட் (இந்த ஓட்டத்தின் போது) இலங்கை அணியின் சுழல் வீரர்களுக்கு சாதகமாக மைதானத்தில் பாதக்குறியீடுகளை உருவாக்குகின்றார் என கங்குலி ஆர்னல்டுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறிது நேரம் ஆர்ப்பரித்த இந்த நிகழ்வு நடுவர்களின் தலையீட்டினால் சுமூக நிலைக்கு கொண்டு வரப்பட்டது.

.

  • யூனுஸ் கான்,  2009

2009ஆம் ஆண்டில் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், ஒரு போட்டி கொண்ட T-20 தொடர் ஆகியவற்றில் விளையாடியிருந்தது.   

முரளிக்காக அர்ஜுனா, அர்ஜுனாவுக்காக கதிர்காமர்

பந்தை சேதப்படுத்திய சர்ச்சை இன்று…

குறித்த சுற்றுப் பயணத்தில் ஒரு நாள் தொடரினை 3-1 என இலங்கை தரப்பினர் கைப்பற்றியிருந்தனர். இந்நிலையில், கொழும்பில் இடம்பெற்ற ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் தரப்பின் தலைவர் யூனுஸ் கானுக்காக, 35ஆவது ஓவரில் ஆட்டமிழப்பு வேண்டுகோள் ஒன்றை விக்கெட் காப்பாளரான இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்கார கோரியிருந்தார். தான் எடுத்த பிடி எடுப்புக்காகவே குறித்த வேண்டுகோள் சங்கக்காரவினால் விடுக்கப்பட்டது.  

Courtesy – AFP

பந்து மட்டையில் பட்ட சத்தம் ஒன்றினை உறுதியாக உணர்ந்தே ஆட்டமிழப்பினை சங்கா கோரியிருந்த போதிலும், கள நடுவரான காமினி சில்வா அது ஆட்டமிழப்பு என அறிவிக்கத் தவறினார்.

இதனால், யூனுஸ் கான் – சங்கக்கார இடையே வாக்குவாதம் தொடங்கியது. சங்கக்கார யூனுஸுக்கு கடும் தொனியில் ஆலோசனை வழங்க, யூனுஸ் கான் அதனை நகைத்தவாறு கேட்டுக் கொண்டார். இந்த வாக்குவாதம் சுமுகமாக நீண்ட நேரம் தேவைப்பட்டிருந்தது.   

போட்டி நடைபெற்று முடிந்த பின்னர் பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவரான இன்திகாப் அலம், “சங்கா-யூனுஸ்” இடையில் அப்படி கடுமையான விடயங்கள் எதுவும் நடைபெறவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

  • மைக்கல் கிளார்க், 2011

2011ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்திருந்த  அவுஸ்திரேலிய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணியுடன் விளையாடியிருந்தது.  

குறித்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பாடிக் கொண்டிருந்த இலங்கை அணியில், மஹேல ஜயவர்தன அரைச்சதம் கடந்து தனது தரப்பினை வலுப்படுத்திக் கொண்டிருந்த போது, ட்ரென்ட் கொப்லான்டின் பந்துவீச்சில் ஸ்லிப் களத்தடுப்பாளராக இருந்த அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கல் கிளார்க்கிடம் சந்தேகத்திற்கு இடமான  பிடி ஒன்றினை அவர் கொடுத்திருந்தார்.

Courtesy – AFP

குறித்த பிடியெடுப்பில் சந்தேகம் கொண்ட மஹேல, மூன்றாம் நடுவரின் உதவிக்காக காத்திருந்த போதிலும் மைக்கல் கிளார்க் அது 100% ஆட்டமிழப்புத்தான் என சத்தமாக குறிப்பிட்டு மஹேலவை ஆடுகளத்தினை விட்டு வெளியேறலாம் எனக் கூறினார்.

இந்த விடயத்தினை மிகவும் சாதுர்யமாக கையாண்ட மஹேல, நீங்கள் இதில் கோபப்பட ஒன்றும் இல்லை. முடிவு தெரியும் வரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என கிளார்க்கிற்கு பதில் தந்தார். மாறி மாறி இருவரின் பேச்சுக்களினாலும் சலசலப்புக்கு உள்ளான இந்த விடயம் மஹேல ஆட்டமிழந்தது உறுதி செய்யப்பட முடிவுக்கு வந்தது.

  • கிளேன் மெக்ஸ்வெல்,  2013

2013ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணி அங்கு டெஸ்ட் தொடர், ஒரு நாள் தொடர், T-20 தொடர் ஆகியவற்றில் விளையாடியிருந்தது.

இந்த சுற்றுப் பயணத்தில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 3-0 என அவுஸ்திரேலியா கைப்பற்ற, ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 2-2 என சமநிலை அடைந்திருந்தது.

Source – AAP

இதனையடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட T-20 தொடரில் அவுஸ்திரேலிய அணியுடன் மோதிய இலங்கை அணி தொடரின் முதல் போட்டியில் வெற்றியீட்டி 1-0 என்கிற முன்னிலையுடன் இரண்டாவது போட்டியில் ஆஸி. வீரர்களினை எதிர் கொண்டிருந்தது.

குறித்த போட்டியில் இலங்கை அணியினால் சவாலான 162 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த போதிலும், காலநிலை சீர்கேடு காரணமாக இந்த வெற்றி இலக்கு 15 ஓவர்களுக்கு 122 ஓட்டங்கள் என மாற்றப்பட்டிருந்தது.

இப்போட்டி இலங்கை அணிக்கு சாதகமாக போய்க்கொண்டிருந்த போதிலும், அவுஸ்திரேலிய அதிரடி வீரரான கிளேன் மெக்ஸ்வெல் மிக விரைவாக ஓட்டங்கள் சேர்த்து ஆட்டத்தில் திருப்புமுனையினை உருவாக்கியிருந்தார். இதன் காரணமாக, போட்டியில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகள் கொண்ட T-20 தொடரினை 1-1 என சமநிலை ஆக்க, அவுஸ்திரேலிய அணிக்கு இறுதிப்பந்தில் நான்கு ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்டிருந்தது.  

கண்ணீருடன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வோர்னர்

கிரிக்கெட் உலகையே…

இப்படியானதொரு தருணத்தில் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்கள் இறுதிப்பந்தை வீச தயராக  இருந்த திசர பெரேராவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். முக்கிய தருணங்களில் வீரர்கள் கலந்துரையாடுவது சகஜம் என்ற போதிலும், இறுதிப் பந்தினை விரைவாக போடுமாறு மெக்ஸ்வெல் இலங்கை வீரர்களிடம் சீறிப் பாய்ந்தார்.

ஒரு மாதிரியாக இந்த விடயம் சகஜநிலைக்கு திரும்பிய பின்னர், இறுதிப்பந்தில ஒரு ஓட்டத்தினை மாத்திரமே மெக்ஸ்வெல் பெற, அவுஸ்திரேலியா அணி தோல்வி அடைந்தது. போட்டியின் பின்னர் வீரர்கள் கைகுலுக்கும் சந்தர்ப்பத்திலும் மெக்ஸ்வெல் தொடர்ந்து இலங்கை அணியுடன் மல்லுக்கு நின்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்த நிகழ்வுகளுக்காக தான் இலங்கை வீரர்களின் ஓய்வறைக்கு சென்று மன்னிப்பு கேட்டதாக மெக்ஸ்வெல் தனது டுவிட்டர் கணக்கில் பின்னர் கூறியிருந்தார்.  

  • நூருல் ஹசன் சோஹான், 2018

அண்மையில் முடிந்த சுதந்திர கிண்ண முக்கோண தொடரின் ஆறாவது போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் மோதியிருந்தன.

சுதந்திரக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட இந்தியா ஏற்கனவே தெரிவாகியிருந்த நிலையில், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான இந்த தீர்மானமிக்க மோதலில் வெல்லும் அணியே இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் என்ற நிலை இருந்தது.

குறித்த போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பாடி சவால் தரும் வெற்றி இலக்கொன்றினை நிர்ணயம் செய்த பின்னர், பங்களாதேஷ் அணி இலக்கை எட்ட பதிலுக்கு துடுப்பாடிக் கொண்டிருந்த போது ஆட்டம் ஒரு தருணத்தில் எந்த அணி வெல்லும் எனத் தெரியாத அளவுக்கு விறுவிறுப்பானது. குறித்த தருணத்தில் களத்தில் நின்ற துடுப்பாட்ட வீரர்களுக்கு குளிர்பானம் கொண்டு வந்த, பங்களாதேஷின் உதிரி வீரரான நூருல் ஹசன் சோஹான், இலங்கை அணித்தலைவர் திசர பெரேராவுடன் தேவையற்ற விதத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கிரிக்கெட் உலகுக்கு மோசமான நடத்தைகளை வெளிக்காட்டியிருந்தார்.

இதோடு குறித்த போட்டியில், பங்களாதேஷ் அணித் தலைவர் சகீப் அல் ஹசன் நடுவர் “நோபோல் (No-Ball)” அறிவிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை வைத்து, தனது அணியினை மைதானத்தினை விட்டு வெளியேறுமாறும்  அறிவுறுத்தல் விடுத்திருந்ததார்.

இந்த விடயங்களால் குறித்த போட்டி மிகவும் பரபப்பு அடைந்ததுடன், நிலைமை சீராகவும் கொஞ்ச நேரம் எடுத்திருந்தது.

போட்டியில் பங்களாதேஷ் அணி மஹ்முதுல்லாவின் சிறப்பு துடுப்பாட்டத்தில் வெற்றி பெற்ற போதிலும், பின்னர் ஐ.சி.சி. நூருலுக்கும், பங்களாதேஷ் அணித்தலைவர் சகீப் அல் ஹசனுக்கும்  நன்னடத்தை விதி மீறல் புள்ளி ஒன்றினையும் வழங்கி போட்டிக் கட்டணத்தில் 25% சதவீதத்தினையும் அபராதமாக செலுத்த வேண்டியும் நிர்ப்பந்தித்திருந்தது.