ரியெல் மெட்ரிட்டுடனான இறுதிப் போட்டிக்கு லிவர்பூல் தகுதி

346
Roma vs Liverpool

இத்தாலியின் ரோமா கழகத்திடம் இரண்டாம் கட்ட அரைறுதியில் 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த லிவர்பூல் அணி, முதல் கட்ட அரையிறுதியில் பெற்ற மிகப் பெரிய வெற்றியின் உதவியோடு ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதன்படி வரும் மே 26ஆம் திகதி உக்ரைன் தலைநகர் கீவ்வில் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் லிவர்பூல் மற்றும் ரியல் மெட்ரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

சலாஹ்வின் அபாரத்தால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை அதிகரித்த லிவர்பூல்

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கின் இந்த பருவகால…

இங்கிலாந்தின் லிவர்பூல் அணி கடந்த வாரம் நடைபெற்ற முதல் கட்ட அரையிறுதியில் 5-2 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே அந்த அணி 2007ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல்முறை இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்பாக இருந்தது. இதனால் இரண்டாவது கட்ட அரையிறுதியில் ரோமா அணி அதிர்ச்சி கொடுக்க முயன்றபோதும் லிவர்பூல் அணியால் 7-6 என்ற மொத்த கோல் வித்தியாசத்தில் இறுதிப் போட்டிக்கான இடத்தை உறுதி செய்ய முடிந்தது.

இத்தாலி தலைநகரில் உள்ள ரோமா அணியின் சொந்த மைதானமான ஸ்டாடியோ ஒலிம்பிகோவில் இலங்கை நேரப்படி இன்று (03) அதிகாலை நடைபெற்ற இரண்டாம் கட்ட அரையிறுதியில் லவர்பூல் அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.  

போட்டியின் ஒன்பதாவது நிமிடத்தில் ரொபார்டோ பெர்மினோ பரிமாற்றிய பந்தை எதிரணி பெனால்டி எல்லைக்குள் வேகமாக எடுத்துச் சென்ற சாடியோ மானே அதனை கோலாக மாற்ற லிவர்பூல் 1-0 என முன்னிலை பெற்றது.

எனினும் ஆறு நிமிடங்கள் கழித்து லிவர்பூல் வீரர் ஜேம்ஸ் மில்னர் போட்ட ஓன் கோல் மூலம் ரோமா அணியினருக்கு 1-1 என சமநிலைக்கு வர முடிந்தது. லிவர்பூல் கோல் எல்லைக்குள் ரோமா அணி வீரர் பரிமாற்றிய பந்தே எதிர்பாராமல் மில்னரின் தலையில் பட்டு தனது சொந்த வலைக்குள்ளே புகுந்தது.

இந்நிலையில் முதல் பாதி ஆட்டத்தில் அதிக நேரம் பந்தை தம் வசம் வைத்திருந்த லிவர்பூல் அணிக்கு அதற்கான பலன் 25ஆவது நிமிடத்தில் கிட்டியது. கோனர் கிக் வாய்ப்பு மூலம் ஜோர்ஜினியோ விஜ்னல்டும் தலையால் முட்டி லிவர்பூல் அணிக்காக இரண்டாவது கோலை போட்டார். இதன்மூலம் லிவர்பூல் அணி முதல் பாதி முடிவில் முதல் கட்ட அரையிறுதியையும் சேர்த்து 7-3 என்ற மொத்த கோல் வித்தியாசத்தில் பலமான முன்னிலை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதல் பாதி: லிவர்பூல் 2 – 1 ரோமா

ரோமா மற்றும் லிவர்பூல் அணிகளுக்கு இடையில் இங்கிலாந்தில் நடைபெற்ற முதல் கட்ட அரையிறுதி போட்டி முடிவில் ரசிகர்களுக்கு இடையில் கலவரம் ஏற்பட்டதால் 60,000க்கும் அதிகமான ரசிகர்கள் அரங்கில் கூடிய இந்த போட்டியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதில் காலிறுதியில் பார்சிலோனா அணியை அதிர்ச்சி தோல்வி அடைய வைத்து அரையிறுதிக்கு முன்னேறியது போல் ரோமா இந்த போட்டியில் சாகசம் நிகழ்த்தும் என்று அந்த அணியின் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.

முதல் கட்ட காலிறுதியில் பார்சிலோனா அணி 4-1 என்ற கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெற்ற நிலையிலேயே ரோமா அணியை இதே மைதானத்தில் கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி சந்தித்தது. அப்போது ரோமா 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் இரண்டாவது பாதி ஆட்டத்தில் காட்டிய வேகத்தை பார்க்கும்போது அதே பாணியில் இருந்தது. ரோமா வீரர் உதைத்த பந்தை லிவர்பூல் கோல் காப்பாளர் லொரிஸ் கரியஸ் தடுத்தபோதும் அது ரோமா வீரர் எடின் ட்செக்கோ கால்களுக்கு செல்ல அவர் அதனை வேகமாக உதைத்து கோலாக மாற்றினார்.

>> நூலிழையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ரியெல் மெட்ரிட்

இதன்மூலம் போட்டியை 2-2 என சமநிலைக்கு கொண்டுவந்த ரோமா அணி போட்டி முடிவதற்கு பத்து நிமிடங்கள் இருக்கும்போது அதிர்ச்சி கொடுக்க போராடியது. 86ஆவது நிமிடத்தில் ரட்ஜா நைன்கோலன் பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து உதைத்து கோலொன்றை போட்டதோடு மேலதிக நேரத்தில் பெனால்டி வாய்ப்பு ஒன்றை கோலாக மாற்றினார்.

இதன்மூலம் ரோமா அணியால் இந்த போட்டியில் வெற்றி பெற முடிந்தபோதும் மொத்த கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெற்ற லிவர்பூல் அணியே இறுதி விசில் ஊதப்பட்ட பின்னர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. இம்முறை சம்பியன்ஸ் லீக் பருவத்தில் லிவர்பூல் அணி சந்தித்த முதல் தோல்வி இது என்றபோதும் அதனால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

இதன்படி 2012ஆம் ஆண்டு பயென் முனிச் அணியை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய செல்சிக்கு பின்னர் பிரீமியர் லீக் கழக அணி ஒன்று முதல் முறை சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

கடைசியாக 2005ஆம் ஆண்டே ஐரோப்பிய கிண்ணத்தை வென்றிருக்கும் லிவர்பூல் அணி அதன் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பது இது எட்டாவது தடவையாகும். அந்த அணி ஆறாவது முறையாக ஐரோப்பிய சம்பியனாகும் எதிர்பார்ப்புடன் நடப்புச் சம்பியன் ரியெல் மெட்ரிட்டை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும்.  

இதில் லிவர்பூல் அணியின் கோல் இயந்திரமாக மாறியிருக்கும் மொஹமட் சலாஹ் தனது முன்னாள் அணியான ரோமாவுக்கு எதிராக கோல் போட தவறினார். முதல் கட்ட காலிறுதியில் அவரது இரண்டு கோல்களுமே லிவர்பூலுக்கு வெற்றி தேடித்தந்தமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: லிவர்பூல் 2 – 4 ரோமா

கோல் பெற்றவர்கள்

ரோமா ஜேம்ஸ் மில்னர் 15′ (ஓன் கோல்), எடின் ட்செக்கோ 52′, ரட்ஜா நைன்கோலன் 86, 90 +4 (பெனால்டி)

லிவர்பூல் சாடியோ மானே 9′, ஜோர்ஜினியோ விஜ்னல்டும் 25‘>>

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<