உளரீதியான பிரச்சினைகளை எதிர்கொண்ட கிரிக்கெட் வீரர்கள்

132

கிரிக்கெட் விளையாட்டில் வீரர் ஒருவர் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் எண்ணிலடங்காதவை. அப்படியாக கிரிக்கெட் வீரர்கள் எதிர்கொள்ளும் முக்கிய அழுத்தங்களில் ஒன்றாக அவர்களின் உள ஆரோக்கியம் (Mental Health) தொடர்பான பிரச்சினைகள் இருக்கின்றது. 

அவ்வாறாக உளரீதியான பிரச்சினைகளை எதிர்கொண்ட கிரிக்கெட் வீரர்கள் சிலரை நோக்குவோம்.

நஷீம் ஷாவின் அபார பந்துவீச்சுடன் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

சுற்றுலா இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு……….

கிளென் மெக்ஸ்வெல்

©AFP

T20 போட்டிகளுக்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்த ஆண்டு (2019)  அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. மூன்று போட்டிகள் கொண்டதாக அமைந்திருந்த இந்த T20 தொடரில் இரண்டாவது போட்டி நிறைவடைந்த பின்னர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி சகலதுறை வீரரான கிளேன் மெக்ஸ்வெல் தனக்கு உள ஆரோக்கியம் சரி இல்லை எனக்கூறி இலங்கை அணியுடனான தொடரில் இருந்து  காலவரையற்ற ஓய்வினையும் எடுத்திருந்தார். 

மெக்ஸ்வெல் தற்போது கிரிக்கெட் விளையாட்டிற்கு திரும்பிய போதிலும் அவரது அப்போதைய காலவரையற்ற ஓய்வு கிரிக்கெட் இரசிகர்களுக்கு பாரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது. 

©AFP

அதேநேரம், மெக்ஸ்வெலின் ஓய்வினை அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் உள்வாங்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட அவுஸ்திரேலியாவின் 21 வயது நிரம்பிய துடுப்பாட்ட வீரர் வில் புக்கோவ்ஸ்கியும் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்காலிக ஓய்வினை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மார்க்கஸ் த்ரேஸ்கொத்திக்

©Getty Images

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான மார்க்கஸ் த்ரேஸ்கொத்திக், கடந்த 2006ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற இந்திய சுற்றுப்பயணத்தின் போது தனக்கு உளரீதியான பிரச்சினைகள் இருப்பதனை உறுதி செய்திருந்தார். 

தனக்கு அதிகமாக பதட்ட உணர்வு உள்ளதாக குறிப்பிட்ட மார்க்கஸ் த்ரேஸ்கொத்திக் குறித்த பிரச்சினைகளை சரி செய்து கிரிக்கெட் விளையாட்டிற்கு மீண்ட போதும் அவருக்கு மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் எதிர்பார்த்த அளவிற்கு ஜொலிக்க முடியாது போயிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஜொனதன் ட்ரொட்

தென்னாபிரிக்காவில் பிறந்து கடந்த 2009ஆம் ஆண்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக ஆடிய முன்வரிசை துடுப்பாட்ட வீரரான ஜொனதன் ட்ரொட்டும் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் உளரீதியான பிரச்சினைகளை எதிர்கொண்ட முக்கிய நபராக இருக்கின்றார். 

ஜொனதன், தனக்கு இருந்த உளரீதியான பிரச்சினைகளை 2013-14ஆம் ஆண்டின் பருவகாலத்தில் இடம்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் வெளிப்படுத்தி குறித்த டெஸ்ட் தொடரில் இருந்தும் விலகினார். 

இதனை அடுத்து சில காலம் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய ஜொனதன் ட்ரொட் 2015ஆம் ஆண்டில் தான் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஆடிய டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

என்ட்ரூ பிளின்டோப் 

©PA Photos

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான என்ட்ரூ பிளின்டோப் கிரிக்கெட் விளையாட்டில் உளரீதியான பிரச்சினைகளை எதிர்கொண்ட மிக முக்கியமான வீரராக கருதப்படுகின்றார். 

சனத் ஜெயசூரியவின் 22 வருட சாதனையை தகர்த்த ரோஹிட் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் உபதலைவரும் அதிரடி …………

கடந்த 2005ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆஷஸ் தொடர் வெற்றியின் பின்னர் புகழின் உச்சத்திற்கு சென்ற பிளின்டோப், அடுத்த ஆஷஸ் தொடரில் தனது தரப்பு தோல்வியடைந்த காரணத்தினால் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி பல உளரீதியான பிரச்சினைகளை சந்தித்திருந்தார்.  

பிளின்டோப் சந்தித்த உளரீதியான பிரச்சினைகளை, தான் வழங்கிய செவ்வி ஒன்றின் மூலம் உலகிற்கு வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

ஸ்டீவ் ஹேர்மிஸன்

©Harmison

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக சுமார் 7 வருடங்களுக்கு மேல் கிரிக்கெட் போட்டிகளில் ஆடியிருந்த வேகப் பந்துவீச்சாளரான ஸ்டீவ் ஹேர்மிஸனும் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் உளரீதியான பிரச்சினைகளை எதிர்கொண்ட மற்றுமொரு வீரராக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஹேர்மிஸன் தனது சக அணி வீரரான ஜொனதன் ட்ரொட் போன்று பதட்ட உணர்வு காரணமாக தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதிலும் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறியிருந்தார்.

டேவிட் பெயர்ஸ்டோவ் 

©Getty Images

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரும் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஜொன்னி பெயர்ஸ்டோவின் தந்தையுமான டேவிட் பெயர்ஸ்டோவ்வும் உள ஆரோக்கியத்தினால் பாதிக்கப்பட்ட பிரதான வீரர்களில் ஒருவராக இருக்கின்றார். 

கிரிக்கெட் போட்டிகளுக்கு விடுகை கொடுத்த பின்னர் 1990ஆம் ஆண்டில் வானொலி கிரிக்கெட் வர்ணனையாளராக தான் வாழ்க்கையை தொடர்ந்த பெயர்ஸ்டோவ் தனது மனைவியின் மறைவு காரணமாக மிகவும் ஆழ்ந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி இறுதியில் 1998ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

சராஹ் டெய்லர்

©Getty Images

கிரிக்கெட் வீரர்கள் ஒருபுறமிருக்க, கிரிக்கெட் விளையாட்டில் பிரபல்யமாக இருந்த வீராங்கனைகள் சிலரும் தாம் உளரீதியாக பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பதாக கூறியிருக்கின்றனர். அதில் முக்கியமாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட்காப்பு  வீராங்கனையான சராஹ் டெய்லரை குறிப்பிட முடியும். 

சராஹ் டெய்லர் தனக்கும் பதட்ட உணர்வு இருப்பதனை 2016ஆம் ஆண்டில் வெளிப்படுத்தியிருந்ததோடு, குறித்த பதட்ட உணர்வு காரணமாக 2018ஆம் ஆண்டில் இடம்பெற்ற மகளிர் T20 உலகக் கிண்ணத்தில் இருந்தும் விலகியிருந்தார். அதோடு, சராஹ் அண்மைய மகளிர் ஆஷஸ் டெஸ்ட் தொடரிலிருந்தும் இதே பிரச்சினை காரணமாக பங்கேற்காமல் போயிருந்தது குறிப்பிடத்தக்கது.. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<