பதக்க வாய்ப்பை இழந்தது இலங்கை கடற்கரை கரப்பந்து ஜோடி

354

இந்தோனேசியாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கட்டார் அணியிடம் தோல்வியை சந்தித்த இலங்கை கடற்கரை கரப்பந்தாட்ட ஜோடி பதக்க வாய்ப்பை இழந்து முதல் சுற்றுடன் வெளியேறியது.    

தெற்கு சுமாத்திராவின் பெலம்பங் கடற்கரை கரப்பந்தாட்ட அரங்கில் இன்று (23) நடைபெற்ற தீர்க்கமான போட்டியில் இலங்கையின் மலிந்த யாபா மற்றும் அசங்க பிரதீப் குமார இருவரும் முழுமையாக சோபிக்கத் தவறியதால் புள்ளிகளை பெறாமல் B குழுவில் மூன்றாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது.

ஒரு வெற்றியுடன் ஆசிய விளையாட்டு விழாவை முடிக்கும் இலங்கை ஆடவர் கபடி அணி

தற்பொழுது இந்தோனேஷியாவின் …

இதன்போது இலங்கையை எதிர்த்து ஆடிய கட்டாரின் ஜங்கோ அஹமட் மற்றும் செரிப் சம்பா ஜோடி இலங்கை வீரர்களுக்கு எதிராக புள்ளிகளை வேகமாக குவித்து 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஜோடிக்கு போட்டியில் வெற்றி பெற 30 நிமிடங்கள் தேவைப்பட்டது.

முதல் செட்டில் இலங்கை அணியை விடவும் ஆரம்பம் தொடக்கம் அதிக புள்ளிகளை பெற்று முன்னேறிய கட்டார் வீரர்கள் அந்த செட்டை 21-12 என கைப்பற்றியது. இதற்கு கட்டார் அணிக்கு 15 நிமிடங்கள் தேவைப்பட்டது.

இரண்டாவது செட் ஆட்டத்திலும் இதே நிலை தான் ஏற்பட்டது. அந்த செட்டையும் 15 நிமிடங்களில் கைப்பற்றிய கட்டார் ஜோடி 21-11 என புள்ளிகளை பெற்றது.

ஆசிய விளையாட்டு விழாவின் கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில் இலங்கை அணி ஆடிய B குழுவில் இருந்து கட்டார் மற்றும் கசகஸ்தான் அணிகள் காலிறுதிக்கு முந்திய 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறின. இதில் இந்த இரு அணிகளும் முறையே 6, 5 புள்ளிகளை பெறும்போது இலங்கை 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இலங்கை கரப்பந்தாட்ட ஜோடி முன்னதாக கசகஸ்தான் அணியுடனான தனது முதல் போட்டியில் 0-2 என தோல்வியை சந்தித்ததோடு, தென் கொரியாவுடனான இரண்டாவது போட்டியை 2-0 என வெற்றி பெற்றது.

ஆசிய விளையாட்டு விழா நீச்சலில் மெத்யூ இறுதிப் போட்டிக்குத் தகுதி

இலங்கை அணியின் நட்சத்திர நீச்சல் வீரரான மெத்யூ …

இந்த குழுவில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்ட தென் கொரியாவும் முதல் சுற்றுடன் வெளியேறியது.

தென் கொரியாவை எதிர் இலங்கை

இதற்கு முன்னர் இடம்பெற்ற, மோதலில் இலங்கை ஆடவர் கடற்கரை கரப்பந்தாட்ட ஜோடி தென் கொரியாவுடனான போட்டியை வென்று நம்பிக்கை தந்துள்ளது.

தெற்கு சுமாத்திராவின் பெலம்பங் கடற்கரை கரப்பந்தாட்ட அரங்கில் 20ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் இலங்கையின் மலிந்த யாபா மற்றும் அசங்க பிரதீப் குமார இருவரும் தென் கொரிய ஜோடியான கிம் ஜுங்யங் மற்றும் கிம் ஹொங்சங் ஜோடியை 2-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தியது.

இதன்மூலம் ஆரம்ப சுற்றில் B குழுவில் ஆடும் இலங்கை கடற்கரை கரப்பந்தாட்ட அணி அந்த குழுவில் மொத்தம் 3 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறியிருந்தது.

இலங்கை கரப்பந்தாட்ட ஜோடி நேற்று (19) நடந்த தனது முதல் போட்டியில் நடப்புச் சம்பியனான கசகஸ்தானிடம் தோற்றபோதும் அதன்மூலம் சிறந்த நிகர புள்ளிகளைப் பெற்றது. கசகஸ்தான் தனது இரண்டாவது போட்டியில் கட்டாரிடம் 2-0 என தோல்வியை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

தென் கொரியாவுடனான போட்டியில் இலங்கை ஜோடி ஆரம்ப செட்டை 14 நிமிடங்களுக்குள் இலகுவாக கைப்பற்றியது. அந்த செட்டில் இலங்கை 21-15 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.

தொடர்ந்து இரண்டாவது செட்டில் மேலும் உத்வேகத்தோடு ஆடிய இலங்கை ஜோடி 21-10 என்ற புள்ளிகள் அடிப்படையில் அந்த செட்டையும் வெற்றி பெற்றது. இதற்கு இலங்கை ஜோடிக்கு 13 நிமிடங்களே தேவைப்பட்டது.

இலங்கை  எதிர் கசகஸ்தான்  

இத்தொடரில் 19ஆம் திகதி இடம்பெற்ற தமது முதல் மோதலில் இலங்கை ஆடவர் கடற்கரை கரப்பந்தாட்ட அணி கசகஸ்தான் அணியிடம் 0-2 என்ற செட் கணக்கில் தோல்வியை சந்தித்தது.

இலங்கை ஜோடியான மலிந்த யாபா மற்றும் அசலங்க பிரதீப் குமார இருவரும் கசகஸ்தான் ஜோடியான செர்கே பொகாடு மற்றும் டிமிட்ரி யகோலேவை எதிர்கொண்டனர்.

ஆசிய விளையாட்டில் பங்கேற்க இலங்கை கோல்ப் வீரர்களுக்கு அனுமதி மறுப்பு

கடும் போட்டி நிலவிய முதல் செட்டில் இலங்கை வீரர்கள் கடுமையாக போராடினர். கடைசிவரை விட்டுக்கொடுக்காமல் ஆடியபோதும் அந்த செட்டை கசகஸ்தான் வீரர்கள் 23-21 என கைப்பற்றினர். முதல் செட் ஆட்டம் 23 நிமிடங்கள் நீடித்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இரண்டாவது செட்டில் இலங்கை வீரர்களின் உத்வேகம் குறைந்திருந்தது. அதிக தவறுகளை இழைத்த இலங்கை ஜோடி எதிரணிக்கு அதிக புள்ளிகளை வேகமாக விட்டுக் கொடுத்தது. இதனால் 12 நிமிடங்களுக்குள் முடிவுற்ற இரண்டாவது செட் ஆட்டத்தை கசகஸ்தான் அணி 21-11 என இலகுவாக கைப்பற்றியது.

இதன்மூலம் மூன்றாவது சுற்றுக்கு செல்லாத ஆட்டத்தில் கசகஸ்தான் அணியால் நெருக்கடி இல்லாத வெற்றி ஒன்றை பெற முடிந்தது.

ஆசிய விளையாட்டு விழாவின் ஆடவர் கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியின் ஆரம்ப சுற்றில் இலங்கை ஜோடி B குழுவில் ஆடுகிறது. இந்த குழுவில் கசகஸ்தானுடன் கட்டார் மற்றும் தென் கொரிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க…