மலேசியா அணிக்கு எதிராக திரில் வெற்றிபெற்ற இலங்கை!

Asian Netball Championship 2022

150

ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பின் இரண்டாவது சுற்றின் முதல் போட்டியில் விளையாடிய இலங்கை மகளிர் அணி 55-53 என்ற புள்ளிகள் கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தி திரில் வெற்றிபெற்றுள்ளது.

இரண்டாவது சுற்றின் குழு Eயில் இடம்பெற்றுள்ள இலங்கை அணியானது, பலம் மிக்க மலேசிய அணியை இன்று செவ்வாய்க்கிழமை (06) எதிர்கொண்டது.

ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் அடுத்தச்சுற்றில் இலங்கை

இலங்கை அணி முதல் சுற்றில் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் அணிகளை இலகுவாக வீழ்த்தி வெற்றியை பதிவுசெய்திருந்த நிலையில், மலேசிய அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆரம்பத்தில் சற்று தடுமாறியிருந்தது.

ஆட்டத்தின் முதல் கால்பகுதியில் மலேசிய அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 15-13 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையை பெற்றுக்கொண்டது. பின்னர் நடைபெற்ற இரண்டாவது கால்பகுதியில் இலங்கை அணி சற்று முன்னேற்றம் கண்டு 17 புள்ளிகளையும், மலேசிய அணி 13 புள்ளிகளையும் பெற ஆட்டம் 30-30 என்ற புள்ளிகள் கணக்கில் சமனிலையானது.

எனினும் அடுத்த கால்பகுதியில் இலங்கை அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, மலேசிய அணிக்கு சவாலை கொடுத்தது. இலங்கை அணி மேலும் 15 புள்ளிகளை பெற்று, 45-38 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையை பெற்றுக்கொண்டது.

எனினும், இறுதி கால்பகுதியில் மலேசிய அணி கடுமையான போட்டியை கொடுத்து இலங்கை அணிக்கு சவால் கொடுத்த போதும், 55-53 என்ற 2 புள்ளிகள் கணக்கில் இலங்கை அணி வெற்றியை தக்கவைத்தது. இந்தப்போட்டியில் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணியானது தங்களுடைய அடுத்தப்போட்டியில் சிங்கபூர் அணியை புதன்கிழமை (07) எதிர்கொள்ளவுள்ளது.

இரண்டாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்

  • இலங்கை 55 – 53 மலேசியா
  • சிங்கபூர் 56 – 46 ஹொங் கொங்
  • இந்தியா 79 – 14 ஜப்பான்
  • பிலிப்பைன்ஸ் 59 – 41 மாலைத்தீவுகள்
  • புரூனே எதிர் தாய்லாந்து – போட்டி நடைபெறவில்லை

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<