இந்திய – தென்னாபிரிக்க T20 தொடர் ஒகஸ்டிலா??

61

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை (CSA), எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியினர் அவர்களது மண்ணில் வைத்து இந்திய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்திருக்கின்றது.  

கேன் வில்லியம்சனின் தலைவர் பதவிக்கு ஆபத்தா?

கொரோனா வைரஸ் ஆபத்து காரணமாக உலகில் இடம்பெற்ற அனைத்து கிரிக்கெட் தொடர்களும் இரத்துச் செய்யப்பட்டிருந்தன. இதில், இந்திய அணி மார்ச் மாதம் தென்னாபிரிக்க அணியுடன் விளையாடவிருந்த ஒருநாள் தொடரும் அடங்கும். 

தற்போது இந்த வைரஸின் ஆபத்து குறைந்துவரும் நிலையில், நாடுகள் கிரிக்கெட் போட்டிகளினை மீள ஆரம்பிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருகின்றன. 

அதன் அடிப்படையிலேயே தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, ஐ.சி.சி. இன் எதிர்காலச்சுற்றுத்தொடர் (FTP) அட்டவணைக்குள் வராத T20 தொடர் ஒன்றை ஒகஸ்ட் மாதம் இந்திய கிரிக்கெட் அணியுடன் விளையாட எதிர்பார்க்கின்றது. 

இந்த ஜூன் மாதம் இலங்கையுடன் விளையாடவிருந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்களை கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைத்த தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, நடைபெறாமல் போன கிரிக்கெட் தொடர்கள் மூலம் இழந்த வருமானத்தினை இந்திய அணியுடனான T20 தொடர் மூலம் பெற்றுக் கொள்ளும் நோக்கத்திலும் காணப்படுகின்றது.

இந்த T20 தொடர் பற்றி கருத்து வெளியிட்ட தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் இயக்குனரான கிரேம் ஸ்மித், தென்னாபிரிக்க – இந்திய அணிகள் இடையிலான போட்டிகளை சுகாதார அறிவுரைகளுடன் நடாத்த திட்டங்கள் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார். 

”நாங்கள் அவர்களுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். அதோடு, மூன்று T20 போட்டிகளை நடாத்துவதற்கான பிரயத்தனங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.”

”இன்னும் சில விடயங்களை கணிக்க வேண்டியிருக்கின்றது, உண்மையில் ஒகஸ்டின் இறுதியில் விடயங்கள் எப்படி இருக்கும் என்பதை யாருக்கும் சொல்ல முடியாது.”

”ஆனால், நாங்கள் சமூக இடைவெளி பேணப்படும் விளையாட்டு ஒன்றை நம்புகின்றோம். எனவே, எங்களுக்கு அதனை பார்வையாளர்கள் அற்ற மைதானங்களில் நடாத்த முடியும்.”

மேலும் கருத்து வெளியிட்ட கிரேம் ஸ்மித், தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இந்திய வீரர்களுடனான T20 தொடரில் விளையாட முன்னர், மேற்கிந்திய தீவுகளுடன் விளையாட ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் தொடர்களுக்கான திகதிகளை தீர்மானிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தார். 

அப்ரிடி ஒரு மோசமான தலைவர் – டேனிஷ் கனேரியா

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுகளுடன் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவிருக்கின்றது.  

”நாங்கள் அனைத்து வழிமுறைகளையும் பார்க்கின்றோம். விளையாட்டினை ஒரு நிறுவனம் நடாத்தும் நிகழ்ச்சிகள் போல் அல்லாமல் தற்போது வியாபாரம் போன்று பார்க்க வேண்டியிருக்கின்றது. நாங்கள் அனைவரும் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் கொண்டுவருவதற்கு ஒன்றிணைய வேண்டிய நிலையில் காணப்படுகின்றோம்.”

”நாங்கள் தனிமைப்படுத்தல் விதிகள் போன்ற பல விடயங்களை புரிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது. இன்னும் பல விடயங்களும் இருக்கின்றன. ஆனால், முக்கியமான விடயம் (கிரிக்கெட் போட்டி ஒன்று மீள ஆரம்பமாகும் போது) எமது தயார் நிலையாகும்.”

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<