இங்கிலாந்து சென்றடைந்த பாகிஸ்தான் வீரர்கள்

204

டெஸ்ட் மற்றும் T20i தொடர்களில் விளையாடவுள்ள அசார் அலி தலைமையிலான 20 வீரர்களைக் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தின் மன்செஸ்டர் நகரை சென்றடைந்துள்ளது. 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விளையாட்டு உலகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.   

மேலும் 7 பாக். வீரர்களுக்கு கொரோனா தொற்று

சுமார் மூன்று மாதங்களாக எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியும் நடக்காத நிலையில், இங்கிலாந்து அணி முதல் அணியாக தங்கள் நாட்டில் டெஸ்ட் தொடரை நடத்த உள்ளது.  

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகள் பங்கேற்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 8ஆம் திகதி முதல் ஆரம்பமாக உள்ளது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் முதல் பாகிஸ்தான் அணியுடன் டெஸ்ட் மற்றும் T20i தொடரில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கான பாகிஸ்தான் அணி இந்த மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட்டது

29 பேர் கொண்ட இந்த அணியில் சொந்தக் காரணங்களினால் வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் ஆமிர், துடுப்பாட்ட வீரர் ஹாரிஸ் சொஹைல் ஆகியோர் விலகிக் கொண்டனர்.

இந்த நிலையில், இங்கிலாந்து தொடருக்காக தெரிவு செய்யப்பட்ட வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 10 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று முதலில் உறுதியானது

இதனால், இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 10 வீரர்களும் தவிர்க்கப்பட்டதுடன், இதற்குப் பதிலாக 5 மாற்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்

இதனையடுத்து கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 10 வீரர்களுக்கும் கொரோனா மறுபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  

இதில் ஷிஃப் பட்டி, ஹாரிஸ் ரவூப், ஹைதர் அலி, இம்ரான் கான் ஆகிய நான்கு வீரர்களுக்கு மட்டும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் உறுதி செய்யப்பட்டது

மறுபுறத்தில் மொஹமட் ஹபீஸ், வஹாப் ரியாஸ், பகார்மான், சதாப் கான், மொஹமட் ரிஸ்வான், மொஹமட் ஹஸ்னைன் ஆகிய வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.   

இதனையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான 10 வீரர்களை தவிர்த்து மற்ற வீரர்களை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்ல பாகிஸ்தான் அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது

PSL தொடரின் எஞ்சிய போட்டிகளை நடாத்த தீர்மானம்

இந்த நிலையில் மாற்று வீரர்களான வேகப் பந்துவீச்சாளர் மூசா கான் மற்றும் விக்கெட் காப்பாளரான ரொஹைல் நசிர் ஆகியோரை பாகிஸ்தான் அணியுடன் மேலதிக வீரர்களாக இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இதன்படி, அசார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணி வீரர்கள் லாகூரிலிருந்து தனி விமானத்தில் நேற்று (28) இங்கிலாந்தின் மன்செஸ்டையர் நகரை வந்தடைந்தனர்.

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகிய அனைவரும் வொஷ்டெர்ஷெயாரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதன்பிறகு ஜூலை 13 முதல் பயிற்சியைத் தொடங்கவுள்ளார்கள்

அத்துடன், தங்களுக்குள் இரண்டு அணியாக பிரிந்து இரண்டு 4 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடவும் பாகிஸ்தான் அணி திட்டமிட்டுள்ளது.

இதுஇவ்வாறிருக்க, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வீரர்கள் லாகூரில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்கிய பின் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.   

அந்தப் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை என உறுதிசெய்யப்பட்டால் மாத்திரம் தான் இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.  

இதனிடையே, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் மன்செஸ்டர் நகரில் முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதுபற்றி இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ள இடத்தை தேர்வு செய்துள்ளோம். ஆனால் போட்டிகள் நடத்தப்படும் திகதியை நாங்கள் இன்னும் உறுதி செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது

பாகிஸ்தான் அணி 

அசார் அலி (டெஸ்ட் அணித் தலைவர்) பாபர் அசாம் (T20i அணித் தலைவர்), ஆபித் அலி, இமாம் உல்ஹக், ஷான் மசூத், அசாத் ஷபீக், பவாத் அலாம், இப்திகார் அஹ்மட், குஷ்தில் ஷா, சர்பராஸ் அஹமட், பஹீம் அஷ்ரப், மொஹமட் அப்பாஸ், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, சொஹைல் கான், உஸ்மான் ஷின்வாரி, இமாத் வசீம், யாசிர் ஷா, மூசா கான், ரொஹைல் நசீர் 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<