திமுத் கருணாரத்னவின் தலைமையில் வெற்றியை சுவைத்த இலங்கை A அணி

6478
Karunaratne leads Sri Lanka ‘A’ to commanding win

இலங்கை A அணித்தலைவர் திமுத் கருணாரத்ன முதல் இன்னிங்சுக்காக பெற்ற சதம் மற்றும் இரண்டாம் இன்னிங்ஸில் ஆட்டமிழக்கமால் பெற்ற 39 ஓட்டங்களின் உதவி மற்றும் பந்து வீச்சாளர்களின் சிறந்த திறமை என்பவற்றால் மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான முதலாவது நான்கு நாள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இலங்கை A அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் A அணிகும் இலங்கை A அணிக்குமிடையிலான நான்கு நாள் கொண்ட முதலாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளான இன்று மேற்கிந்திய தீவுகள் A அணியின் இறுதி விக்கெட்டை 175 ஓட்டங்களுக்கு வீழ்த்தியதுடன், 20.3 ஓவர்களில் வெற்றி இலக்கான 66 ஓட்டங்களை இலங்கை A அணி பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் A அணி 165 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 55 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில் நேற்றைய நாள் ஆட்டம் நிறைவடைந்திருந்தது. தொடர்ந்து இன்று ஆட்டத்தை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் A அணி, மேலும் 10 ஓட்டங்களை பெற்றுக்கொண்டு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 175 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டது

இரண்டாம் இன்னிங்சில் கேன் ஜோசப், இலங்கை பந்து வீச்சாளர்களை சவாலுக்குட்படுத்தி மொத்தமாக 73 பந்துகளுக்கு முகம் கொடுத்து ஆட்டமிழக்காமல் 12 ஓட்டங்களை பெற்று போராடினாலும், அவரது போராட்டம் இறுதியில் ஏமாற்றமளித்தது.

அதேபோன்று இலங்கை அணி சார்பாக, இறுதியாக ஜூன் மாதத்தில் தனது டெஸ்ட் போட்டியை விளையாடிருந்த லஹிரு திரிமான்னெ, இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாட்ட வரிசையில் உயர்த்தப்பட்டு திமுத் கருணாரத்னவுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களம் இறக்கப்பட்டார். திமுத் கருணாரத்னவுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 43 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, ராகீம் கன்வெல்லின் பந்துவீச்சில் திரிமான்னெ LBW முறையில் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்

அதனை தொடர்ந்து பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் ஜோசப், ரோஷன் சில்வா மற்றும் சரித அசலங்காவின் விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தாலும், இலங்கை அணியினர் வெற்றி இலக்கை அண்மித்ததால் மேற்கிந்திய தீவுகள் A அணியினரால் எந்தவிதமான அழுத்தங்களையும் ஏற்படுத்த முடியாமல் போனது. 

போட்டியின் சுருக்கம் 

மேற்கிந்திய தீவுகள் A அணி: 276 மற்றும் 175 (79.2) – VJ சிங் 46, மோட்டி கனை 34, சமர் ப்ரூக்ஸ் 28, சண்டகன் 51/4 

இலங்கை A அணி: 386 மற்றும் 67/3 (20.3) – திமுத் கருணாரத்ன 39*, லஹிரு திரிமான 21,ஜோசப் 17/2

போட்டி முடிவு – 7 விக்கெட்டுகளால் இலங்கை அணி வெற்றி 

இரண்டாம் போட்டி இம்மாதம் 11ஆம் திகதி பல்லெகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.