அரையிறுதிக்கு தகுதிபெற்ற யுபுன்! ; காலிறுதிக்கு முன்னேறிய ருக்மால், சஞ்சீவனி!

Commonwealth Games 2022

84
 

இங்கிலாந்தின் பேர்மிங்ஹமில் நடைபெற்றுவரும் 2022 பொதுநலவாய விளையாட்டு  விழாவின் ஐந்தாவது நாள்  நிறைவில், இலங்கை அணி மெய்வல்லுனர் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளில் சிறந்த திறமையை வெளிப்படுத்தியிருந்தது.

இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தின் முதல் சுற்றில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றதுடன், கயந்திகா அபேரட்ன தேசிய சாதனையை பதிவுசெய்தார். அதேநேரம் குத்துச்சண்டை போட்டிகளை பொருத்தவரை ருக்மால் பிரசன்ன மற்றும் சஞ்சீவனி குரே ஆகியோர் காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளனர்.

இறுதிப்போட்டி வாய்ப்பை தவறவிட்ட கங்கா!

ஐந்தாவது நாளில் இலங்கை வீரர்கள் பங்கேற்ற போட்டிகளின் முடிவுகள்

மெய்வல்லுனர்

இன்றைய தினம் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் முதல் சுற்றில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் முதலிடத்தை பிடித்துக்கொண்டார்.

முதல் சுற்றின் 6வது கட்டத்தில் (Heat) போட்டியிட்ட யுபுன் அபேகோன் போட்டித்தூரத்தை 10.06 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தை பிடித்துக்கொண்டார். அதுமாத்திரமின்றி, பங்கேற்ற 70 வீரர்களில் குறைந்த நேரத்தில் போட்டித்தூரத்தை கடந்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துக்கொண்டார்.

இதேவேளை இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தின் முதல் சுற்றின் இரண்டாவது கட்டத்தில் பங்கேற்ற கயந்திகா அபேரட்ன இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தவறிவிட்டுள்ளார்.

இவர் போட்டித்தூரத்தை 2:01.20 நிமிடங்களில் கடந்து 5வது இடத்தை பிடித்துக்கொண்டதன் மூலம் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு கிட்டவில்லை. எனினும், இவர் தன்னுடைய தேசிய சாதனையை புதுப்பித்துள்ளார். இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதம் 2:01.44 நிமிடங்களில் போட்டித்தூரத்தை கடந்து தேசிய சாதனையை பதிவுசெய்திருந்த நிலையில், இன்றைய தினம் குறித்த சாதனையை முறியடித்துள்ளார்.

ஜூடோ

இலங்கை ஆடவர் அணிசார்பாக 73 கிலோகிராம் எடைப்பிரிவின், காலிறுதிப்போட்டியில் சாமர ரிபியல்லகே தோல்வியடைந்துள்ளார். இன்று நடைபெற்ற  இறுதி 16 வீரர்களுக்கான போட்டியில் போட்ஸ்வானா வீரர் டிரெலோ லீகோகொவை வீழ்த்தி சாமர ரிபியல்லகே காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றிருந்தார்.

எனினும், இன்று நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் காம்பியா வீரர் பெயா ஜீயிடம் தோல்வியடைந்து அரையிறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தவறவிட்டிருந்தார்.

இதேவேளை ஆடவர் 81 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டிருந்த ராஜித புஷ்பகுமார இறுதி 16 வீரர்களுக்கான சுற்றில் நியூசிலாந்து வீரர் எலியொட் கொனலியிடம் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Photos – St. Joseph’s College Vs St Anthony’s College – Dialog Schools Rugby League 2022

குத்துச்சண்டை

இலங்கை குத்துச்சண்டை அணியை பொருத்தவரை ஆண்களுக்கான 51-54 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட ருக்மால் பிரசன்ன மற்றும் பெண்களுக்கான 54-57 எடைப்பிரிவில் போட்டியிட்ட சஞ்சீவனி குரே ஆகியோர் காலிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்.

இறுதி 16 வீரர்களுக்கான போட்டியில் கென்யா வீரர் ஷபி பகாரி ஹசனை 3-2 என வீழ்த்தி ருக்மால் பிரசன்ன தன்னுடைய காலிறுதி வாய்ப்பை தக்கவைத்ததுடன், சஞ்சீவனி பாகிஸ்தான் வீராங்கனை மெஹரீனை 5-0 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

ருக்மால் பிரசன்ன நாளைய தினம் (04) நடைபெறவுள்ள காலிறுதிப்போட்டியில் கானா வீரர் ஆப்ரஹாம் மெனஸை எதிர்கொள்ளவுள்ளதுடன், சஞ்சீவனி குரே தன்னுடைய காலிறுதிப்போட்டியில் தென்னாபிரிக்காவின் பிவகுலே ஸ்பசிஸிவேயை எதிர்கொள்ளவுள்ளார்.

இதேவேளை ஆண்களுக்கான 67-71 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட கிளிநோச்சியை சேர்ந்த விட்டாலிஸ் நிக்கல்ஸ் 0-5 என சமோவா வீரர் மரியன் பாஸ்டினோவிடம் தோல்வியடைந்து தன்னுடைய காலிறுதி வாய்ப்பை தவறவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்

பொதுநலவாய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான T20I கிரிக்கெட் போட்டியில், குழு Bயில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, நியூசிலாந்திடம் தோல்வியுற்று அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளது.

இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 147/7 (20) ஓட்டங்களை பெற, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 102/8 (20) ஓட்டங்களை மாத்திரம் பெற்று 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பளுதூக்கல்

பெண்களுக்கான 87 கிலோகிராம் பளுதூக்கல் இறுதிப்போட்டியில் இலங்கை சார்பில் போட்டியிட்ட சதுரிக்கா பிரியந்தி 7வது இடத்தை பிடித்துக்கொண்டார்.

சதுரிக்கா பிரியந்தி தன்னுடைய முதல் ஸ்னெட்ச் வாய்ப்பில் 81 கிலோகிராம் எடையை தூக்கியிருந்த போதும், அடுத்த இரண்டு ஸ்னெட்ச் வாய்ப்புகளில் 86 கிலோகிராம் எடையை தூக்குவதற்கு தவறியிருந்தார்.

பின்னர் ஆரம்பித்த கிளீன் எண்ட் ஜெக் முறையில் முதல் வாய்ப்பில் 105 கிலோகிராம் எடையையும், இரண்டாவது வாய்ப்பில் 111 கிலோகிராம் எடையையும் தூக்கியிருந்ததுடன், கடைசி வாய்ப்பில் 114 கிலோகிராம் எடையை தூக்குவதற்கு தவறியிருந்தார். இதன்காரணமாக மொத்தமாக 192 கிலோகிராம் எடையை தூக்கிய சதுரிக்கா பிரியந்தி 7வது இடத்தை பிடித்துக்கொண்டார்.

Photos – Commonwealth Games 2022 – Day 04

கடற்கரை கரப்பந்தாட்டம்

ஆண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்ட போட்டித்தொடரில் குழு Aயில் இடம்பெற்றிருந்த இலங்கை அணி தங்களுடைய இரண்டாவது தோல்வியை இன்றைய தினம் சந்தித்தது.

கனடா அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்திருந்த இலங்கை அணி, இரண்டாவது போட்டியில் காம்பியா அணியை எதிர்கொண்டு 2-1 என்ற செட்கள் கணக்கில் தோல்வியடைந்தது.

முதல் செட்டை காம்பியா அணி 21-14 என கைப்பற்ற, இரண்டாவது செட்டை இலங்கை அணி 21-19 என கைப்பற்றியது. எனினும், இறுதி செட்டில் இலங்கை அணி 09-15 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது.

இதேவேளை பெண்கள் குழு Bயில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி தங்களுடைய இரண்டாவது போட்டியில், சைப்ரஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியதுடன், 2-0 என தோல்வியடைந்திருந்தது. இரண்டு செட்களையும் இலங்கை அணியானது 21-8 மற்றும் 21-10 என்ற புள்ளிகள் கணக்கில் இழந்திருந்தது.

பதக்கப்பட்டியல் விபரம் (ஐந்தாவது நாள்)

இதேவேளை பொதுநலவாய விளையாட்டு விழாவின் ஐந்தாவது நாள் போட்டிகள் நிறைவில், 41 தங்கப்பதக்கங்கள் உட்பட 104 பதக்கங்களை வென்றுள்ள அவுஸ்திரேலியா பதக்க பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தப்பட்டியலின் இரண்டாவது இடத்தை 29 தங்கப்பதக்கங்கள் உட்பட 80 பதக்கங்களை வென்றுள்ள இங்கிலாந்தும், 13  தங்கப்பதக்கங்கள்  உட்பட 26 பதக்கங்களை வென்றுள்ள நியூசிலாந்து மூன்றாவது இடத்தையும் பிடித்துக்கொண்டுள்ளன.

நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
அவுஸ்திரேலியா 41 31 32 104
இங்கிலாந்து 29 33 18 80
நியூசிலாந்து 13 7 6 26

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<