இங்கிலாந்தின் பேர்மிங்ஹமில் நடைபெற்றுவரும் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவின் நான்காவது நாள் நிறைவில், துரதிஷ்டவசமான அம்சமாக நீச்சல் வீராங்கனை கங்கா செனவிரத்ன இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்துள்ளார்.
பின்னோக்கிய 200 மீற்றர் நீச்சல் போட்டியில் சிறந்த திறமையை வெளிப்படுத்தி 10வது இடத்தை பிடித்த போதும், இறுதிப்போட்டிக்கான 8 வீராங்கனைகளில் இவர், இடம்பெறும் வாய்ப்பை தவறவிட்டார். அதேநேரம் நேற்றைய தினம் (01) தினம் இலங்கை ஸ்குவாஷ், பளுதூக்கல், ஜூடோ மற்றும் குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் பங்கேற்றிருந்தது.
>> அகலங்க பிரீஸ் தேசிய சாதனை! ; அரையிறுதியை தவறவிட்ட பெட்மிண்டன் அணி!
நான்காவது நாளில் இலங்கை வீரர்கள் பங்கேற்ற போட்டிகளின் முடிவுகள்
பளுதூக்கல்
இன்றைய தினத்தில் ஆண்களுக்கான 81 கிலோகிராம் எடைப்பிரிவு பளுதூக்கல் போட்டியில் பங்கேற்ற சிந்தன விதானகே, 9வது இடத்தை பிடித்துக்கொண்டார்.
எதிர்பார்ப்புமிக்க போட்டியில் பங்கேற்ற இவர் ஸ்னெட்ச் முறையில் 127 கிலோகிராம் எடையையும், கிளீன் எண்ட் ஜெக் முறையில் 155 கிலோகிராம் எடையையும் தூக்கியிருந்தார். இதில் கிளீன் எண்ட் ஜெக் முறையில் 160 கிலோகிராம் எடையை தூக்கவில்லை என்பதுடன், மொத்தமாக 282 கிலோகிராம் எடையை இவர் தூக்கியிருந்தார்.
ஜூடோ
இலங்கை அணி சார்பாக இன்றைய தினம் இரண்டு ஜூடோ வீரர்கள் களமிறங்கியிருந்தார்கள். இதில் ஆண்களுக்கான 60 கிலோகிராம் எடையில் போட்டியிட்டிருந்த விமுக்தி பிரேமரத்ன, ஸ்கொட்லாந்து வீரர் டைலான் முன்ரோவிடம் தோல்வியடைந்தார்.
இதற்கு அடுத்தப்படியாக நடைபெற்ற பெண்களுக்கான 48 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட சமீலா மருபில்லகே, ஆஷ்லே-எனா பார்னிகலிடம் தோல்வியை சந்தித்தார்.
>> Photos – Commonwealth Games 2022 – Day 03
நீச்சல்
இலங்கையின் முன்னணி நீச்சல் வீராங்கனையான கங்கா செனவிரத்ன, பெண்களுக்கான 200 மீற்றர் பின்னோக்கிய நீச்சல் போட்டியில் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டுள்ளார்.
இறுதி 16 வீராங்கனைகளுக்கான சுற்றில் 2வது ஹீட்டில் பங்கேற்ற கங்கா செனவிரத்ன, போட்டித்தூரத்தை 2 நிமிடம் 26.63 செக்கன்களில் நிறைவுசெய்து 6வது இடத்தை பிடித்துக்கொண்டார். இதன்மூலம் ஒட்டுமொத்த வரிசையில் 10வது இடத்தை பிடித்துக்கொண்ட இவர் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்துள்ளார்.
இறுதிப்போட்டிக்கு 8 வீராங்கனைகள் தெரிவுசெய்யப்பட்ட நிலையில், கங்கா செனவிரத்ன இறுதிப்போட்டிக்கான மேலதிக வீராங்கனைகள் இருவருக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> Photos – Commonwealth Games 2022 – Day 02
ஸ்குவாஷ்
பெண்களுக்கான ஸ்குவாஷ் பிளேட் காலிறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை சுனைனா சாரா குருவில்லாவை எதிர்த்தாடிய இலங்கை வீராங்கனை சந்திமா சினாலி 0-3 என தோல்வியை சந்தித்துள்ளார்.
இந்தப்போட்டியில் ஆரம்பம் முதல் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த குருவில்லா இலகுவான வெற்றியினை பதிவுசெய்தார். மூன்று செட்களையும் 11-3, 11-2 மற்றும் 11-2 என்ற புள்ளிகள் கணக்கில் சினாலி இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குத்துச்சண்டை
இலங்கை சார்பாக நேற்றைய தினம் ஆண்களுக்கான குத்துச்சண்டைப் போட்டியில் இருவர் பங்கேற்றிருந்தனர். இதில், 48-51 கிலோகிராம் எடைப்பிரிவில் இங்கிலாந்து வீரர் கைரன் மெக்டொனால்ட்டை எதிர்கொண்ட இலங்கை வீரர் இசான் செனவிரத்ன 5-0 என தோல்வியடைந்தார்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற 54-57 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட ஜீவந்த குமார கயானா வீரர் கீவின் எல்லிகொக்கை எதிர்கொண்டு விளையாடினார். இந்தப்போட்டியில் 5-0 என ஜீவந்த குமார தோல்வியடைய, நேற்றைய தினம் இலங்கை அணிக்கு குத்துச்சண்டை போட்டியில் எந்தவொரு வெற்றியும் கிடைக்கவில்லை.
பதக்கப்பட்டியல் விபரம் (நான்காவது நாள்)
இதேவேளை பொதுநலவாய விளையாட்டு விழாவின் நான்காவது நாள் போட்டிகள் நிறைவில், 31 தங்கப்பதக்கங்கள் உட்பட 71 பதக்கங்களை வென்றுள்ள அவுஸ்திரேலியா பதக்க பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தப்பட்டியலின் இரண்டாவது இடத்தை 21 தங்கப்பதக்கங்கள் உட்பட 54 பதக்கங்களை வென்றுள்ள இங்கிலாந்தும், 7 தங்கப்பதக்கங்கள் உட்பட 24 பதக்கங்களை வென்றுள்ள நியூசிலாந்து மூன்றாவது இடத்தையும் பிடித்துக்கொண்டுள்ளன.
நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
அவுஸ்திரேலியா | 31 | 20 | 20 | 71 |
இங்கிலாந்து | 21 | 22 | 11 | 54 |
நியூசிலாந்து | 13 | 7 | 4 | 24 |
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<