கொழும்பு கிங்ஸ் தலைமை பயிற்றுவிப்பாளருக்கு கொவிட்-19 தொற்று

526
Colombo Kings head coach Kabir Ali

லாங்கா ப்ரீமியர் லீக் (LPL) T20 கிரிக்கெட் தொடரில், கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இங்கிலாந்தின் முன்னாள் வீரரான கபீர் அலி கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

லங்கா ப்ரீமியர் லீக் நடைபெறுவதற்கு இன்னும் 9 நாட்கள் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில், இன்னும் அணிகள் தங்களுடைய குழாத்தை முழுமையாக்கவில்லை. குறிப்பாக வெளிநாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் சிலர் நாட்டை வந்தடையவில்லை.

>> LPL தொடரின் பிரதான அனுசரணையாளராக My11Circle

அதேநேரம், கொழும்பு கிங்ஸ் மற்றும் தம்புள்ளை வைக்கிங்ஸ் அணிகள் ஒப்பந்தம் செய்திருந்த டேவ் வட்மோர் மற்றும் ஜோன் லிவிஸ் ஆகிய பயிற்றுவிப்பாளர்கள் இலங்கை வரமறுத்திருந்தனர். இதன் காரணமாக கபீர் அலி மற்றும் உவைஸ் ஷா ஆகியோரை மாற்று பயிற்றுவிப்பாளராக நேற்று முன்தினம் அணிகள் அறிவித்திருந்தன.

இவ்வாறான நிலையில், கபீர் அலிக்கு இலங்கை வருவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் (PCR) பரிசோதனையில், அவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே, இவர் இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கொழும்பு கிங்ஸ் அணி குறுகிய கால இடைவெளி மாத்திரமே உள்ள நிலையில், புதிய பயிற்றுவிப்பாளர் ஒருவரை நியமிக்கவேண்டிய கட்டாயத்துக்கு முகங்கொடுத்துள்ளது. அதேநேரம், கொழும்பு கிங்ஸ் அணி தங்களுடைய புதிய பயிற்றுவிப்பாளரை தேடி வருவதாகவும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

>> Video – அடுத்த T20i திருவிழா தயார்: நவம்பர் 26இல் ‘LPL’ |Sports RoundUp – Epi 139

அதுமாத்திரமின்றி கொழும்பு கிங்ஸ் அணி இணைத்திருந்த, மேற்கிந்திய தீவுகளின் அதிரடி துடுப்பாட்ட வீரர் அன்ரே ரசல் இதுவரை அணியுடன் இணையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அன்ரே ரசல் இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவரும், லங்கா ப்ரீமியர் லீக் பணிப்பாளருமான ரவின் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

லங்கா ப்ரீமியர் லீக் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் டிசம்பர் 16ஆம் திகதிவரை ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<