இலங்கை வீரர்களின் தயார்நிலை குறித்து மிக்கி ஆத்தர்

131
Mickey Arthur

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான மிக்கி ஆத்தர், ThePapare.com இற்கு வழங்கிய நேர்காணலில், இலங்கை வீரர்கள் குறித்தும், கொரோனா வைரஸ் தருணத்தில் அவர்களுக்கான பயிற்சிகள் குறித்தும் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

சுகாதார அறிவுரைகளுடன் பயிற்சிகளை தொடரவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் கிரிக்கெட் போட்டிகள் முழுமையாக..

ThePapare.com ஆனது மிக்கி ஆத்தருடன், நேரலை (Live) மூலம் ஒரு பிரத்தியேக நேர்காணல் ஒன்றை புதன்கிழமை (13) ஒழுங்கு செய்திருந்தது. இந்த நேர்காணலில் மிக்கி ஆத்தரிடம் இலங்கை கிரிக்கெட் அணியின் இரசிகர்கள் உள்ளடங்களாக ThePapare குழுவினர் மூலமும் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த கேள்விகளுக்கு பதில் தரும் போதே, மிக்கி ஆத்தர் இலங்கை வீரர்கள் தொடர்பிலும், அவர்களுக்கு வழங்கி வரும் பயிற்சிகள் தொடர்பிலும் கருத்து வெளியிட்டிருந்தார்.

கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக நாட்டில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டமையைத் தொடர்ந்து இலங்கை அணியின் வீரர்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருந்தனர். தற்போது, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இலங்கை வீரர்களும் சுகாதார அறிவுறுத்தல்களுடன் படிப்படியாக பயிற்சிகளில் ஈடுபட தயாராகுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த விடயம் தொடர்பில் ஆத்தர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். 

“நாங்கள் எங்கள் வீரர்களை முடிந்தளவு வேகமாக பயிற்சிகளுக்கு தயாராக்க எதிர்பார்க்கின்றோம். இதில், பந்துவீச்சாளர்கள் முக்கியமானவர்கள். அவர்களை வேகமாக தயாராக்க வேண்டியிருப்பதோடு, பெளதீக ரீதியிலும் அவர்களை தயார்படுத்த வேண்டியிருக்கின்றது. இதனால், பந்துவீச்சாளர்கள் மீது எமது கரிசணை இருக்கின்றது. இதேநேரம், எங்களது அனைத்து வீரர்களையும் முடிந்தளவு வேகமாக பயிற்சிகளுக்காக எடுக்கவிருக்கின்றோம். நாம் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதோடு, எமது சிரேஷ்ட மருத்துவ உத்தியோகத்தரும்  பயிற்சிகளை வேகமாக மேற்கொள்ள உதவுகின்றார். எமது வீரர்கள் அனைவரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் முழுமையான பயிற்சிகளில் ஈடுபடுவார்கள் என நம்புகின்றோம்.”  என்றார். 

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ஆசைப்படும் திசர பெரேரா

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 2009ம் ஆண்டு அறிமுகமாகியிருந்த இலங்கை..

சர்வதேச கிரிக்கெட் உள்ளடங்கலாக அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளும் கடந்த இரண்டு மாதங்களாக தடைப்பட்ட நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நீண்ட நாட்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சிகளை ஆரம்பிக்கும் போது எப்படி இருப்பார்கள் என்பது பற்றியும் மிக்கி ஆத்தர் குறிப்பிட்டிருந்தார்.

“நான் தொடர்ச்சியாக எங்களது வீரர்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றேன். அவர்கள் பயிற்சி பெறுவதோடு, தங்களால் முடிந்த அளவிற்கு அவர்கள் தங்களை உடல்ரீதியாகவும் தயார்படுத்திக் கொள்கின்றனர். நான் அஞ்செலோ மெதிவ்ஸ், டிக்வெல்ல, தசுன் ஷானக்க மற்றும் தினேஷ் சந்திமால் போன்றோரின் (பயிற்சி) வீடியோ காணொளிகளை பார்வையிட்டிருக்கின்றேன். இப்போதைக்கு உலகில் இருக்கும் அனைத்து விளையாட்டு  வீரர்களும் பழைய நிலைக்கு திரும்ப முடிந்த முயற்சிகளை செய்து கொண்டே இருப்பர். நாங்களும் எங்களது வீரர்களை மிக விரைவில் மீண்டும் தயார்படுத்தி கொண்டுவரவுள்ளதோடு, அதற்காக அவர்கள் போதிய அளவு தயராக இருப்பார்கள் என்றும் நம்புகின்றோம். 

எடுத்துக்காட்டாக நாம் (ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்தில்) அஞ்செலோ, திசர உள்ளிட்ட சில வீரர்கள் அவர்களது வீடுகளில் என்ன செய்ய முடியும் என்பதைப் பொறுத்து தனிநபர் பயிற்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருந்தோம். இத்தருணத்தில் பயிற்சிகளுக்காக எமது வீரர்கள் காட்டிய ஈடுபாடு பிரம்மிக்க வைக்கும் வகையில் இருந்தது. எனவே, அவர்கள் வேறு எந்த தேவைகளும் இல்லாமல் தயாராகி இருப்பார்கள் எனவும் நம்புகின்றேன். ஆக, நாம் நீங்கள் வாருங்கள் என்று அழைக்கும் போது எமது வீரர்கள் முழுமையாக தயாராக இருப்பார்கள்.” 

இதேநேரம் குசல் மெண்டிஸ், திமுத் கருணாரத்ன, குசல் பெரேரா மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் போன்ற இலங்கை  வீரர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும் என்பது கருத்து வெளியிட்ட ஆத்தர் அவர்களுக்கு போதிய அளவு ஆதரவு வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.  

“நான் பயிற்றுவித்த ஒவ்வொரு வீரர்களையும் அவர்களது சிறந்த நிலை எதுவோ அதனை வெளிப்படுத்தும் வகையிலேயே பயிற்றுவித்திருக்கின்றேன். ஒருவர் சிறப்பாக செயற்பட அவருக்கு அடிமட்டத்தில் இருந்து பயிற்சிகள் தரப்பட வேண்டும். அடிமட்டம் எனப்படும் போது நுணுக்கங்களே வீரர் ஒருவரை சிறந்தவராக மாற்றும். 

அடுத்தது வீரர் ஒருவரை அவரது இயல்பு நிலையில் விளையாட அனுமதிக்க வேண்டும். அதாவது அவர்களால் எந்த அளவிற்கு சுதந்திரமான முறையில் விளையாட முடியுமோ அந்த அளவிற்கு அனுமதிக்க வேண்டும். நான் மூன்று வகைப் போட்டிகளுக்குமான அணிகளை பார்த்த நிலையில் அவற்றில் மாற்றங்கள் செய்ய வேண்டியது தெரியவருகின்றது. இந்த மாற்றங்களின் முடிவு அணிகளின் தரவரிசையில் தெரிய வரும். 

வீரர்கள் அவர்களுக்காக மாத்திரம் விளையாடக் கூடாது. உண்மையில்,  வீரர்களுக்கு அவர்களுக்கு அவர்களது திறமை மீதும் நம்பிக்கை வர வேண்டும். அதோடு, அவர்களுக்கு தேவையான ஆதரவும் தரப்பட வேண்டும். இதேநேரம் அவர்கள் தோல்வியடையும் சந்தர்ப்பங்களைப் பார்க்காது, அவர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். 

நான் இலங்கை அணியின் தேர்வாளர் அசந்த டி மெல், அணித்தலைவர்கள் என அனைவரும் ஒரு அடிப்படை வீரர்கள் தொகுதியினை இனங்கண்டிருக்கின்றோம். குறித்த அடிப்படை வீரர்கள் தொகுதிக்கு அவர்களின் சிறந்ததை வெளிப்படுத்த போதுமான ஆதரவு வழங்கப்படுகின்றது. எனவே, அந்த வீரர்கள் எதிர்வரும் காலங்களில் சிறந்த பெறுபேறுகளை காட்டுவார்கள் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். ஏனெனில், அவர்கள் அனைவரிடமும் திறமை இருக்கின்றது.” எனத் தெரிவித்தார். 

>> மேலும்  பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<