LPL தொடரின் பிரதான அனுசரணையாளராக My11Circle

340

லங்கா ப்ரீமியர் லீக் (LPL) T20 கிரிக்கெட் தொடரின் பிரதான அனுசரணையாளர்களாக (Title Sponsor) மைலெவன்சர்க்கிள் (My11Circle) நிறுவனம் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கொழும்பு, தம்புள்ளை அணிகளுக்கு புதிய பயிற்றுவிப்பாளர்கள்!

அந்தவகையில் மைலெவன்சர்க்கிள் நிறுவனம், பல கோடி ரூபாய்கள் பெறுமதியான ஒப்பந்தத்துடன் லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் பிரதான அனுசரணையாளர்களாக மாறியிருக்கின்றனர்.  

கடந்த 2019ஆம் ஆண்டு தொடக்கம் தமது பயனர்களுக்கு இணையவழி விளையாட்டுக்களை (Online Games) வழங்கி வருகின்ற மைலெவன்சர்க்கிள் நிறுவனம் ”Play with Champions” என்கிற தொனிப்பொருளில் பிரபல்யமடைந்துருகின்ற ஒரு முன்னணி விளையாட்டுத்தளமாக காணப்படுகின்றது.

அதேநேரம், இந்த நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக (Brand Ambassador) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இந்த நிலையில் மைலெவன்சர்க்கிள் நிறுவனம் லங்கா ப்ரீமியர் லீக் தொடருக்கு அனுசரணை வழங்குவது தொடர்பில் கருத்து வெளியிட்ட அந்த நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் நிர்வாகிகளில் ஒருவரான அவிக் டாஸ் கனுன்கோ, லங்கா ப்ரீமியர் லீக் தொடருக்கு அனுசரணை வழங்குவதில் மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டு, லங்கா ப்ரீமியர் லீக் தொடர் எதிர்காலத்தில் மிகப் பிரபல்யமான கிரிக்கெட் தொடர்களில் ஒன்றாக மாறுவதற்குரிய ஆற்றல் வளங்களை கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

IPL தொடரில் பந்துவீச்சில் மிரட்டிய வீரர்கள்

இதேநேரம், லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் தொடர் இயக்குனரும் இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதி தலைவருமான ரவீன் விக்ரமரட்ன மைலெவன்சர்க்கிள் நிறுவனத்தின் மூலம் கிடைத்திருக்கும் அனுசரணை லங்கா ப்ரீமியர் லீக் தொடருக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் எனக் குறிப்பிட்டார். 

மறுமுனையில் மைலெவன்சர்க்கிள் நிறுவனத்தின் அனுசரணை கிடைத்திருப்பதால் லங்கா ப்ரீமியர் லீக் தொடர், இனி மைலெவன்சர்க்கிள் லங்கா ப்ரீமியர் லீக் தொடர் (My11Circle LPL) என அழைக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

மொத்தம் 15 நாட்கள் கொண்ட கிரிக்கெட் திருவிழாவாக நடைபெறவிருக்கும் லங்கா ப்ரீமியர் லீக் தொடர், இம்மாதம் 26ஆம் திகதி தொடக்கம் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவிருப்பதோடு இந்த தொடரில் கிரிக்கெட் ஜாம்பவன்களான லசித் மாலிங்க, சஹீட் அப்ரிடி மற்றும் இர்பான் பதான் போன்ற பல வீரர்கள் பங்கெடுக்கவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<