தன் வாயால் அபராதத்திற்குள்ளாகிய ஸ்டுவர்ட் ப்ரோட்

148

சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய ஒழுக்க விதிமுறையை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ரோட் மீது ஐ.சி.சி போட்டி ஊதியத்திலிருந்து அபராத தொகை விதித்துள்ளதுடன், ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளியும் தண்டனையாக விதித்துள்ளது.

முழு உலகையும் உலுக்கிய கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் சவாலுக்கு மத்தியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருதரப்பு தொடரில் ஆடி வருகிறது. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச ஆகிய இரு தொடர்களில் இரு அணிகளும் மோதவுள்ளன. 

மீண்டும் பிற்போடப்பட்டது லங்கன் ப்ரீமியர் லீக்

குறித்த இருதரப்பு தொடரின் முதல் தொடரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த சனிக்கிழமை (08) நிறைவுபெற்ற நிலையில், அப்போட்டியில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்நிலையில் குறித்த போட்டியின் இறுதி நாளான சனிக்கிழமை பாகிஸ்தான் அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடும் வேளையில் போட்டியின் 45 ஆவது ஓவரின் இறுதிப்பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் முக்கிய சுழல் பந்துவீச்சாளர் யாஸிர் ஷாஹ் 33 ஓட்டங்களை பெற்று ஸ்டுவர்ட் ப்ரோட்டின் பந்துவீச்சில் விக்கெட்காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 

இதன் போது வேகமாக துடுப்பெடுத்தாடிய யாஸிர் ஷாஹ்வை ஆட்டமிழக்க செய்த குதூகலத்தில் ஸ்டுவர்ட் ப்ரோட், அவரை நோக்கி தகாத வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இது வெளிச்சத்திற்கு வர போட்டியின் களநடுவர்களாக செயற்பட்ட ரிச்சர்ட் கெட்டில்பேர்ஹ், ரிச்சர்ட் இல்லிங்வேர்த், மூன்றாம் நடுவர் மிட்செல் கொஹ் மற்றும் நான்காம் நடுவர் ஸ்டீவ் ஓ ஷோக்னெஸ்லி ஆகியோரினால் போட்டி மத்தியஸ்தரிடம் குறித்த சம்பவம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. 

குமார் சங்கக்காரவுக்கு விருப்பமான துடுப்பாட்ட வீரர்கள்

இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய விதிமுறையில் வீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த நடத்தை கோட்பாடுகளை உள்ளடக்கும் இலக்கம் 2.5 இன்படி சர்வதேச போட்டியொன்றின் போது உபயோகிக்கக்கூடாத வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தியதன் அடிப்படையில் ஸ்டுவர்ட் ப்ரோட் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி போட்டி மத்தியஸ்தரான கிறிஸ் ப்ரோட் மூலமாக போட்டி ஊதியத்திலிருந்து 15 சதவீத தொகையும், ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளியும் குறித்த சம்பவத்திற்கான தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 24 மாத (இரண்டு வருட) காலப்பகுதியில் ஸ்டுவர்ட் ப்ரோட் மூன்றாவது தகுதி இழப்பீட்டு புள்ளியை பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. 

2018 ஆகஸ்ட் 19 ஆம் திகதி ட்ரெண்ட் பிரிட்ஜில் இந்திய அணியுடன் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும், இவ்வருடம் ஜனவரி 27 ஆம் திகதி தென்னாபிரிக்க அணியுடன் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இதே குற்றத்திற்காக தண்டனை பெற்றமை குறிப்பிடத்தக்கது. சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் (13) சவுதம்டணில் நடைபெறவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<