கிறிஸ் லின், ஆரோன் பிஞ்ச் டி20 குழாமிலிருந்து விலகல்

7883
Aaron Finch

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட  ஒருநாள் தொடர் நேற்று முடிவுக்கு வந்தது. இத்தொடரின் நேற்றைய இறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி இலங்கை அணியை 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டி இருந்தது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடிய போது அவுஸ்திரேலிய அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஆரோன் பின்ச் ஸ்லிப் திசையில் களத்தடுப்பு செய்து கொண்டு இருந்தார். அப்போது அவரை நோக்கி வந்த பிடியெடுப்பை அவர் பிடிக்க முயன்ற போது கைவிரலில் காயம் ஏற்பட்டு உபாதைக்கு உள்ளாகி இருந்தார்.

இதனால் நேற்றைய ஆட்டத்தில் ஆரோன் பின்ச் துடுப்பெடுத்தாட வரவில்லை. மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் படி அவரது கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் நாளை கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாக உள்ள இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகளைக் கொண்ட டி20 கிரிக்கட் தொடரின் முதலாவது போட்டி மற்றும் எதிர்வரும் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ள 2ஆவது  டி20 போட்டியிலும் அவர் பங்குகொள்ள மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

இதேவேளை க்றிஸ் லின் பயிற்சியின் போது தோள்பட்டை உபாதைக்கு உள்ளாகி இருந்ததனால் அவரும் இந்த டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான  இலங்கை டி20 குழாம்

கிரிக்கட் அவுஸ்திரேலிய இது தொடர்பில் கூறுகையில் “ஆரம்பத்தில் டி20 குழாமில் இடம்பிடிக்காத விக்கட் காப்பாளர் மெத்திவ் வேட் டி20 அணியில் இணைவார் எனவும் இவரைப் போன்று பெயர் குறிப்பிடப்படாமல் இருந்த ஒருநாள் தொடர்  ஆட்ட நாயகன் விருது பெற்ற ஜோர்ஜ் பெயிலியும் முதலாவது டி20 போட்டிக்கான அவுஸ்திரேலிய குழாமில் சேர்க்கப்பட்டுள்ளதோடு கைவிரல் உபாதைக்கு உள்ளான ஆரோன் பின்ச் தொடர்ந்து அணியுடன் இணைந்து இருந்து 12ஆவது வீரராக செயற்படுவார்” என்று கூறியுள்ளது.

உபாதைகள் தொடர்பாக அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் உடற்பயிற்சி மருத்துவர் டேவிட் பக்லே கூறுகையில் “க்றிஸ் லின் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பாய்ந்து பந்தை பிடிக்க முற்பட்ட வேளையில் இடது தோள்பட்டை உபாதைக்கு உள்ளாகி உள்ளார். இதனால் அவர் ப்ரிஸ்பெர்ன் நகரிற்கு திரும்ப உள்ளதாகவும் ஆரோன் பிஞ்சின் வலது ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுளளதாக X – Ray முடிவுகளின் படி தெரியவந்துள்ளது  ஆகையால் அவரும் டி20 தொடரை தவறவிடுவார்” என்று கூறியுள்ளார். கடந்த வாரம் இடதுகைத் துடுப்பாட்ட வீரர் சோன் மார்ஷும் கைவிரல் உபாதைக்கு உள்ளாகி அவுஸ்திரேலியாவிற்கு திரும்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அவுஸ்திரேலிய அணியின், தென்னாபிரிக்காவுக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் றயான் ஹரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஹரிஸ், தலைமைப் பயிற்றுவிப்பாளர் டரன் லீமன், உதவிப் பயிற்றுவிப்பாளர் டேவிட் ஸாகர் ஆகியோரைக் கொண்ட அவுஸ்திரேலியாவின் பயிற்றுவிப்பாளர் குழாமுடன் இணையவுள்ளார்.

கடந்தாண்டு ஜூலையில் கிரிக்கட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஹரிஸ், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இந்தியா “ஏ” அணிகளை உள்ளடக்கி, தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் முத்தரப்புத் தொடரில், தேசிய செயல்திறன் குழாமின் உதவிப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகிறார். இது தவிர, கடந்த பருவ காலத்தில், 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கட் அவுஸ்திரேலியா பதினொருவர் அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்தார்.

தனது விளையாடும் காலங்களில், காயங்களினால் அவதிப்பட்ட ஹரிஸ், வலது முழங்காலில் ஏற்பட்ட  காயத்தால், 35 வயதில் ஓய்வு பெற்றிருந்தார். ஹரிஸ் 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 113 விக்கட்டுகளைக் கைப்பற்றியதோடு, 21 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 44 விக்கட்டுகளை கைப்பற்றியிருந்தார்.