முதல் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடம் யாருக்கு?

ICC Test Championship 2021

154
ICC

கிரிக்கெட் பல்வேறு விதத்தில் பரிணாமம் பெற்றாலும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கென்ற அழகும், தனித்துவமும் எப்போதும் மறைந்து போவதில்லை. 

சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் உலகக் கிண்ணம், T20I உலகக் கிண்ணம் என சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப்போட்டிகள் உருவாக்கப்பட்டிருந்த போதும், டெஸ்ட் கிரிக்கெட்டில் யார் ஜாம்பாவான் என்ற கேள்விக்கு டெஸ்ட் தரவரிசை மாத்திரமே பதிலாக இருந்தது.

அமெரிக்க கிரிக்கெட் தொடரில் ஒன்பது இலங்கை வீரர்கள்

ஆனால், இத்தனை காலமும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கென்றே உளாவிய தனியான ரசிகர் பட்டாளத்துக்கு, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மிகப்பெரிய பரிசாக மாறியுள்ளது.

ஒருநாள் போட்டிகளுக்கான முதல் உலகக் கிண்ணத்தை மேற்கிந்திய தீவுகள் வென்றது, முதல் T20I உலகக் கிண்ணம் இந்திய அணி வசமானது. இப்போது, உலகின் முதல் டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இறுதிப்போட்டியில் பலம் மிகுந்த இந்திய அணியை, நியூசிலாந்து அணி எதிர்கொள்ளவுள்ளது.

உலக கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால், இந்திய கிரிக்கெட்டுக்கான ரசிகர்கள் ஏராளம். அதேபொன்று, நியூசிலாந்து கிரிக்கெட்டை விரும்பாத ரசிகர்களும் இல்லை. எனவே, இந்த இறுதிப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் தீயாய் பரவிவருகின்றது.

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் பயணம்

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் நீண்ட நாள் கனவு பயணமாக இருந்த ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் 2019ம் ஆண்டு ஆஷஷ் தொடருடன் ஆரம்பமாகியது. டெஸ்ட் தரவரிசையில் முதல் 9 இடங்களில் உள்ள அணிகள் ஏனைய அணிகளுடன், டெஸ்ட் தொடர்களில் மோதும் வகையில், அமைக்கப்பட்ட இந்த தொடர் 2021ம் ஆண்டு நிறைவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இதில், தொடர்கள் அனைத்தும் நிறைவடையும் போது, புள்ளிப்பட்டியில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும் என்ற அறிவிப்பும் வெளியாகியது.

மிகவும் பரந்த எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் சில தொடர்கள் நடத்தப்பட்ட போதும், 2020 மார்ச் மாதத்தில் ஏற்பட்ட கொவிட் 19 தொற்றின் தாக்கம் காரணமாக சில தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டதுடன், சில தொடர்கள் முற்றுமுழுதாக விளையாடப்படவில்லை.

இதன் காரணமாக அணிகளின் வெற்றி சதவீதத்தை வைத்து புள்ளிப்பட்டியல் உருவாக்கப்பட்டதுடன், மீதமுள்ள தொடர்களை வைத்து முதல் இரண்டு இடங்கள் தீர்மானிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

புதிய புள்ளிப்பட்டியலின் பின்னர், இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இருந்த போதும், தென்னாபிரிக்க அணிக்கு எதிராக தொடரை அவுஸ்திரேலிய அணி விளையாடாததன் காரணமாக, நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைத்ததுடன், ஆஸி அணிக்கான வாய்ப்பு வெகுவாக குறைந்தது.

இதனைத்தொடர்ந்து தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணிக்கு, இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு கிடைத்ததுடன், குறித்த தொடரின் முதல் போட்டியில் சிறந்த வெற்றியை பதிவுசெய்தும், இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது. எனவே, இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் பெற்றுக்கொண்டன.

முதல் இரண்டு இடங்களுக்கு மேற்குறித்த நான்கு அணிகள் போட்டியிட்ட போதும், இலங்கை, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இந்த போட்டியிலிருந்து முற்றுமுழுதாக வெளியேற்றபட்டிருந்தன.

இந்தியா அணியின் இறுதிப்போட்டிக்கான பயணம்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஆரம்பித்த ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இந்திய அணியின் பயணம், நியூசிலாந்துக்கு எதிரான தொடர்வரை ஒரு வழி பயணமாகவே அமைந்திருந்தது. மே.தீவுகள், தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான தொடர்களில் இந்திய அணிக்கு ஒரு தோல்வியும் இல்லை.

Gettyimages

எனினும், தற்போது எதிரில் நிற்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என தோல்விக்கண்டது. இந்த தோல்வியை தொடர்ந்து ஆஸி மண்ணில் சாதித்த இந்திய அணி 2-1 தொடரை கைப்பற்றியதுடன், இறுதியாக தங்களுடைய சொந்த மண்ணில் 3-1 என இங்கிலாந்தை வீழ்த்தி 520 புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்கான கதவை திறந்துக்கொண்டது.

நியூசிலாந்து அணியின் இறுதிப்போட்டிக்கான பயணம்

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான நியூசிலாந்து அணியின் பயணம் அவ்வளவு இலகுவானதாக அமையவில்லை. இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே தோல்வி. குறித்த தொடரை போராட்டத்தின் மத்தியில் 1-1 என சமப்படுத்தியது. தொடர்ந்து, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில், 3 போட்டிகளிலும் படுதோல்வி. எனவே, நியூசிலாந்து அணிக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி இருந்தது.

எனினும், இந்திய அணிக்கு முதல் தோல்வியை பரிசாக வழங்கிய நியூசிலாந்து அணி, ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முதல் தொடர் வெற்றியை பலம் மிக்க அணிக்கு எதிராக பெற்றுக்கொண்டது.

Gettyimages

பலம் பொருந்திய அணியை வீழ்த்திய சக்தியுடன், மே.தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடரை முற்றுமுழுதாக கைப்பற்றிய நியூசிலாந்து அணி, அவுஸ்திரேலிய அணியால் கிடைத்த சிறு வாய்ப்பையும் பயன்படுத்தி இறுதிப்போட்டியில் காலடி எடுத்து வைத்துள்ளது.

இறுதிப்போட்டிக்கான மோதல்

இங்கிலாந்தின் சௌதெம்டனில் உள்ள ரோஸ் போவ்ல் மைதானத்தில் ஜூன் 18ம் திகதி ஆரம்பமாகவுள்ள மாபெரும் இறுதிப்போட்டி 22ம் திகதிவரை நடைபெறுகிறது. ஒருநாள் உலகக் கிண்ணம் T20I உலகக் கிண்ணம், சம்பியன்ஸ் கிண்ணம் போன்ற தொடர்களின் இறுதிப்போட்டியின் முடிவுகள் ஒரே நாளில் கிடைக்கும் போதே மைதானம் களைக்கட்டும். ஆனால், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி 5 நாட்கள் நடைபெறவுள்ளன. இந்த மோதல் கிரிக்கெட்டின் உச்சபட்ச கொண்டாட்டமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

அதிலும், இரண்டு அணிகளும் ஒருவருக்கொருவர் சளைத்த அணிகள் இல்லை. இரண்டு அணிகளின் டெஸ்ட் சாதனைகளை பார்க்கும் போது, இந்திய அணி தொடர் வெற்றிகளில் முதல்வனாக இருக்கலாம். ஆனால், கடந்த 7 ஆண்டுகால மோதல்களை பார்க்கும் போது, மூன்றில் இரண்டு தொடர்களில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றிருக்கிறது. எனவே, இந்திய அணி பலம் மிக்க அணியாக இருந்தாலும், நியூசிலாந்து அணியை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது.

டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இரண்டு அணிகளின் முதல் மோதலில் நியூசிலாந்து அணி வெற்றி வாகை சூடியுள்ளது. எனவே, இந்திய அணி பதில் கொடுக்க வேண்டிய தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. அதுமாத்திரமின்றி, 2019ம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் அரையிறுதியில் பெற்ற தோல்விக்கும் பதில் கூறுமா? என்ற கேள்விகளும் உலாவுகின்றன. 

சம பலத்தை காண்பிக்கும் அணிக்குழாம்கள்

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இரண்டு குழாம்களும் பெயரிடப்பட்டுள்ளன. இரண்டு அணிகளிலும் இடம்பெற்றுள்ள வீரர்கள், போட்டியின் முடிவை தீர்மானிக்கக்கூடியவர்கள். ஒவ்வொருவரும், வெற்றியாளர்கள். எனவே போட்டியை பொருத்தவரை அனைவருமே ஒவ்வொரு விதத்திலும் அணிக்கு தேவையானவர்கள்.

இதில், இந்திய அணியின் துடுப்பாட்ட தூண் என வர்ணிக்கப்படும், செட்டேஸ்வர் புஜார அணியின் துடுப்பாட்டத்தை இறுதிவரை அழைத்துச்செல்லக்கூடியவர். இவருடன், அணித்தலைவர் விராட் கோஹ்லி, அஜின்கே ரஹானே, ரோஹித் சர்மா ஆகியோர் அனுப துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்கள். 

மற்றுமொரு குறிப்பிடத்தக்க துடுப்பாட்ட வீரர் ரிஷப் பண்ட். விக்கெட் காப்பில் எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு அழுத்தம் கொடுப்பதுடன், மத்தியவரிசையில் வேகமாக ஓட்டங்களை குவிக்கக்கூடியவர். இவருடன், ரவீந்திர ஜடேஜா துடுப்பாட்டத்திலும், சுழல் பந்துவீச்சிலும் அசத்தக்கூடியவர்.

இந்திய அணியின் டெஸ்ட் சுழல் பந்துவீச்சை தாங்கிப்பிடித்திருக்கும் அஸ்வின், இந்தப்போட்டியில் இந்திய அணியின் துறுப்புச்சீட்டாக பார்க்கப்படுவதுடன், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் ஷமி மற்றும் இசாந் சர்மா ஆகியோரின் வேகம் நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய சவால்.

Gettyimages

நியூசிலாந்து அணியும் இலகுவான அணியல்ல. இறுதியாக இங்கிலாந்து அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளனர். இந்த தொடரில் அறிமுக போட்டியில் இரட்டைச்சதம் கடந்த டெவோன் கொன்வே, நியூசிலாந்து அணியின் புதிய நம்பிக்கை.

Gettyimages

கேன் வில்லியம்ஸன், ரொஸ் டெய்லர் பிஜே வெட்லிங் மற்றும் டொம் லேத்தம் ஆகியோர் டெஸ்ட் துடுப்பாட்டத்தை கையாழும் விதம் அற்புதமானது. அனுபவம் குறைவாக இருந்தாலும், அஜாஸ் பட்டேலின் சுழல் இந்திய அணிக்கு சவால்தான்.

மறுபக்கம் வேகப்பந்துவீச்சு நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய பலம். அதிகம் பேசப்படும் கெயல் ஜெமிஸன் தொடங்கி, நெயில் வெங்கரின் பௌன்சர்கள், ட்ரெண்ட் போல்ட் மற்றும் டிம் சௌதி ஆகியோரின் அனுபவம் என்பவை இந்திய அணியை சிந்திக்க வைக்கும்.

இவ்வாறு பலம் மிக்க இரண்டு அணிகளும் சௌதெம்டனில் உள்ள ரோஸ் போவ்ல் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. மைதானத்தில் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளை கண்டிருக்கிறது. இதில், இரண்டு போட்டிகளில் இந்திய அணி விளையாடி தோல்வியை தழுவியுள்ளதுடன், நியூசிலாந்து அணி முதன்முறையாக இந்த மைதானத்தில் களம் காண்கின்றது. 

ஆடுகளம் அதிகமாக முதல் மூன்று நாட்களுக்கு துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகத்தை தந்தாலும், அடுத்த நாட்களில் ஓட்டங்களை குவிப்பதற்கு இலகுவான ஆடுகளம் அல்ல. இங்கிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும், இந்த ஆடுகளத்தில் சுழல் பந்துவீச்சுக்கும் முன்னுரிமை. எனவே, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெறும் அணி அதிகமாக முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இத்தகைய அம்சங்களுடன் இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இறுதிப்போட்டி மிகவும் சுவாரஷ்மாக அமையும் என்பதில் எந்தவித கேள்விகளும் இல்லை. 

நியூசிலாந்து அணியை பொருத்தவரை இதுவொரு கனவு பயணம். சர்வதேச ரீதியில் எந்தவொரு பெரும் கிண்ணங்களும் நியூசிலாந்து கைகளுக்கு எட்டியதில்லை. எனவே, இந்த முதல் சந்தர்ப்பம், முதல் கிண்ணமாக மாறுமா? அல்லது பெரும் கிண்ணங்களுக்கான இறுதிப் போட்டிகளில் இந்திய அணி, ஏனைய அணிகளுக்கு அதிர்ச்சிக்கொடுக்கும் அணி. எனவே, இம்முறையும் கிண்ணத்தை இந்தியா கைவசப்படுத்துமா? என்பதை பொருத்திருந்ததான் பார்க்கவேண்டும்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…