இலங்கை டி20 குழாமில் பாரிய மாற்றங்கள்

21297

இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகளை கொண்ட டி20 கிரிக்கட் தொடரின் முதலாவது போட்டி நாளை கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

2ஆவது போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 9ஆம் திகதி வெள்ளிக் கிழமை நடைபெற உள்ளது. இத்தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழாமின் தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார். தம்புள்ள மைதானத்தில் இடம்பெற்ற அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான  4ஆவது போட்டியின் போது எஞ்சலோ மெதிவ்ஸ் பின்கால் தசைப்பிடிப்பு உபாதைக்கு உள்ளாகி இருந்தார். இந்த நிலையில் அவருக்கு 1 மாத கால ஒய்வு அவசியம் என வைத்திய நிபுணர்கள் கூறி உள்ள  நிலையில் தான் அணியின் தலைமை பதவி தினேஷ் சந்திமாலிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த டி20 போட்டிகள் திலகரத்ன டில்ஷான் இலங்கை அணிக்காக விளையாடும்  இறுதி தொடராக அமைய உள்ள நிலையில் இலங்கை அணிக்கு மிலிந்த சிறிவர்தன மற்றும் சாமர கபுகெதர ஆகியோர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான 5ஆவது ஒருநாள் போட்டியில் நீக்கப்பட்ட திஸர பெரேரா, இந்த வருட ஆரம்பத்தில் இந்தியாவில் நடைபெற்ற டி20 தொடரில் கலக்கிய கசுன்  ரஜித மற்றும் சுழற்பந்து வீச்சாளர் சச்சித்ர சேனாநாயக்க ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்ரேலிய அணியுடனான ஒருநாள் தொடரில் இலங்கை அணி சார்பாக இடம் பிடித்து இருந்த  தனுஷ்க குணதிலக, எஞ்சலோ பெரேரா, உபுல் தரங்க, அவிஷ்க பெர்னாண்டோ, நிரோஷன் திக்வெல்ல, லஹிரு குமார, அமில அபோன்சோ மற்றும் டில்ருவான்  பெரேரா ஆகியோர் இந்த டி20 குழாமில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 குழாமில் இடம் பெற்று இருந்த சமிந்த பண்டார, பர்வீஸ் மஹ்ரூப்,   ரமித்  ரம்புக்வெல்ல, நுவான் பிரதீப் ஆகியோரும்  இந்த குழாமில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளனர்.

அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான  இலங்கை டி20 குழாம்

தினேஷ் சந்திமால் (தலைவர்), திலகரத்ன டில்ஷான், குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, குசல் மெண்டிஸ், மிலிந்த சிறிவர்தன, சாமர கபுகெதர , திஸர  பெரேரா, தசுன்  சானக, சச்சித்  பத்திரண, சீக்குகே  பிரசன்னா, சுரங்க லக்மால், கசுன் ராஜித, சசித்ர சேனாநாயக்க.

இலங்கை டி20 குழாம் பற்றி உங்களது கருத்து என்ன? உங்களது உத்தேச டி20 அணியை கீழே கொமெண்ட் செய்யவும்.