இந்த தொடரினை வெற்றிகரமாக மாற்றுமா சென்னை சுபர் கிங்ஸ்?

128
Chennai Super Kings
Photo by: Vipin Pawar / Sportzpics for BCCI

இந்திய ப்ரீமியர் லீக் (IPL) தொடரின் இரண்டாவது வெற்றிகரமான அணியாக கருதப்படும் சென்னை சுபர் கிங்ஸ் அணி, 2020ஆம் ஆண்டில் தமக்கு ஏற்பட்ட ஆறாத காயத்திற்கு மருந்து தேடிய வண்ணம் இந்த ஆண்டுக்கான தொடரில் களமிறங்கவுள்ளது. 

முதல் போட்டி – எதிர் டெல்லி கெபிடல்ஸ் – (ஏப்ரல் 10, மும்பை) 

அதன்படி கடந்த ஆண்டில் மாத்திரமே தாம் விளையாடிய IPL தொடர்களில் பிளேஒப் சுற்றுக்கு முன்னேறாத சென்னை சுபர் கிங்ஸ் அணியினர், இந்த ஆண்டு அந்த தவறினை மேற்கொள்ளாத வண்ணம் இருக்கும் வகையில் காணப்படுகின்றனர். 

நடைபெற்று முடிந்த IPL தொடர்களில் இதுவரை மூன்று தடவைகள் சம்பியன் பட்டம் வென்றிருக்கும், சென்னை சுபர் கிங்ஸ் அணியினர் கடைசியாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற முடிந்த IPL தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்ததோடு, குறித்த இறுதிப் போட்டியில் ஒரு ஓட்டத்தினால் சம்பியன் பட்டத்தினை மும்பை இந்தியன்ஸ் அணியிடம் பறிகொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டிலும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி மூலம் வழிநடாத்தப்படும் சென்னை சுபர் கிங்ஸ் அணி அவர்களின் முன்னணி துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான ஷேன் வொட்சனை  இழந்த போதும், மத்திய வரிசை துடுப்பாட்ட சகலதுறைவீரரான மொயின் அலியின் கொள்வனவு மூலம் பலம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், IPL தொடரில் இந்த ஆண்டு அதிக பணம் கொடுத்து அணியொன்றினால் ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட்ட இந்திய வீரரான கிருஷ்ணப்பா கௌதமும் சென்னை சுபர் அணியின் சுழல்பந்துவீச்சுத்துறைக்கு பெறுமதி சேர்க்கின்றார். 

பலம்

குழுநிலைப் போட்டிகளில் மோசமான ஆட்டத்தினை காண்பிக்கின்ற போதும், தீர்மானம் கொண்ட போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஒப் சுற்றுக்கு தெரிவாகி தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதனை வழமையான வாடிக்கையாக கொண்டிருக்கும் அணிகளில் ஒன்றாக சென்னை சுபர் கிங்ஸ் காணப்படுகின்றது. 

அணித்தெரிவு  

சென்னை சுபர் கிங்ஸ் அணியினால் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வித்தியாசமான கொள்வனவுகளில் ஒன்றாக மாறிய டெஸ்ட் துடுப்பாட்ட நட்சத்திரம் செட்டெஸ்வர் புஜாராவின் ஆட்டமும் அனைவரினாலும் எதிர்பார்க்கப்படுகின்றது. புஜாராவினை சென்னை சுபர் கிங்ஸ் அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனி எந்த இடத்தில் விளையாடவைக்க இருக்கின்றார் என்பதிலும் சுவாரசிம் நிறைந்து காணப்படுகின்றது. 

இதேவேளை பெப் டு பிளேசிஸ், அம்பதி ராயுடு, சேம் கர்ரன், மொயின் அலி, ட்வெய்ன் ப்ராவோ மற்றும் ரவிந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் முதல் பதினொருவர் அணியில் இடம்பெறும் முன்னணி வீரர்களாக காணப்படுவார்கள் என கருதப்படுகின்றது. 

முழுமையான அணிக்குழாம்

மஹேந்திர சிங் டோனி (அணித்தலைவர்), சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயூடு, பெப் டு பிளேசிஸ், ருத்திராஜ் காய்க்கவாட், ரொபின் உத்தப்பா, ரவிந்திர ஜடேஜா, டீபக் சஹார், ட்வெய்ன் ப்ராவோ, சர்துல் தாக்கூர், இம்ரான் தாஹிர், சேம் கர்ரன், கரண் சர்மா, N. ஜகதீசன், KM. ஆஷீப், சாய் கிஷோர், லுங்கி ன்கிடி, மிச்செல் சான்ட்னர், ஜோஸ் ஹேசல்வூட், மொயின் அலி, கிருஷ்ணப்பா கெளதம், செட்டெஸ்வர் புஜாரா, M. ஹரிசங்கர் ரெட்டி, K. பகத் வர்மா, C. ஹரி நிஷாந்த்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<