இளையோர் ஆசிய வலைப்பந்தாட்டத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

150

இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் எதிர்வரும் ஜூன் மாதம் பிற்பகுதியில் ஆரம்பமாகவுள்ள இளையோர் ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள 23 பேர் கொண்ட உத்தேச குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

11ஆவது இளையோர் ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டித் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 29ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை ஜப்பானில் நடைபெறவுள்ளது. எனினும், அதற்குமுன் இலங்கை இளையோர் வலைப்பந்தாட்ட அணி, நேற்று (08) முதல் ஆரம்பமாகி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்று வருகின்ற நான்கு அணிகள் மோதும் சர்வதேச வலைப்பந்தாட்டத் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள சிரேஷ்ட வலைப்பந்தாட்ட அணியும் பங்கேற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.  

நான்கு அணிகள் மோதும் வலைப்பந்து தொடர் நாளை ஆரம்பம்

இலங்கை, இலங்கை இளையோர், மலேசியா மற்றும்……

இதுஇவ்வாறிருக்க, 1998, 2002 மற்றும் 2015 ஆகிய வருடங்களில் நடைபெற்ற இளையோர் ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டித் தொடரில் இலங்கை அணி சம்பியனாகத் தெரிவாகியதுடன், ஐந்து தடவைகள் (2004, 2006, 2008, 2010 மற்றும் 2013) இரண்டாவது இடத்தையும் பெற்றுக் கொண்டது. இறுதியாக கடந்த 2017ஆம் ஆண்டு தென் கொரியாவில் இடம்பெற்ற ஆசிய இளையோர் வலைப்பந்தாட்டப் போட்டித் தொடரில் 4ஆவது இடத்தை இலங்கை அணி பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இளையோர் ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டித் தொடரில் பங்கேற்கும் நோக்கில் இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட தகுதிகாண் போட்டிகள் மூலம் 60 பேர் கொண்ட உத்தேச குழாம் கடந்த வருடம் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து கடந்த பெப்பரவரி மாதம் 38 வீராங்கனைகளும், இறுதியாக கடந்த வாரம் 20 பேர் கொண்ட குழாமும் வலைப்பந்தாட்ட தேர்வுக் குழுவினால் அறிவிக்கப்பட்டது.

Photo Album : Sri Lanka Youth v Malaysia | Quadrangular Netball Tournament 2019

இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனமும், விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து மலிந்து குமாரி கமகேவை இலங்கை இளையோர் வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நியமிக்க நடவடிக்கை எடுத்திருந்தது. இதில் கடந்த வருடம் நான்கு அணிகளின் பங்கேற்புடன் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச வலைப்பந்தாட்டத் தொடரில் இலங்கையின் வளர்ந்துவரும் வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர்கள் குழாத்திலும் அவர் இடம்பெற்றிருந்தார்.

இதேவேளை, இளையோர் ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டித் தொடருக்காக அறிவிக்கப்பட்ட உத்தேச குழாத்தில் கொழும்பு விசாகா கல்லூரியைச் சேர்ந்த ஐந்து வீராங்கனைகளும், தெஹிவளை ப்ரெஸ்படேரியன் மகளிர் கல்லூரி மற்றும் குருநாகல் திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடத்தைச் சேர்ந்த தலா 3 வீராங்கனைகளும், கேட்வே கல்லூரி, செலான் வங்கி ஆகிய அணிகளிலிருந்து தலா 2 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர்.  

கிளிநொச்சி விளையாட்டுத் தொகுதியை திறந்து வைத்தார் தர்ஜினி சிவலிங்கம்

நீச்சல் மற்றும் உள்ளக விளையாட்டு அரங்குகள் ….

2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய இளையோர் வலைப்பந்தாட்டப் போட்டித் தொடர் மற்றும் உலகக் கிண்ண இளையோர் வலைப்பந்தாட்டப் போட்டித் தொடர்களில் இலங்கை சார்பாக பங்குபற்றியிருந்த அனுபவமிக்க வீராங்கனைகளான தருஷி இளங்கரத்ன, நதாஷா அளுவிஹாரே, மெலெனி விஜேசிங்க, செத்மி டனோஷி, பிமன்யா ரத்னாயக்க மற்றும் கன்யா சேனாநாயக்க ஆகிய வீராங்கனைகள் இம்முறை இளையோர் உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்ட உத்தேச குழாத்தில் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

இலங்கை இளையோர் வலைப்பந்தாட்ட உத்தேச குழாம்.

தருஷி இளங்கரத்ன (விஷாகா கல்லூரி), சிரானி பெரேரா (விஷாகா கல்லூரி), டிலானி பெரேரா (விஷாகா கல்லூரி), நதாஷா அளுவிஹாரே (விஷாகா கல்லூரி), மெலெனி விஜேசிங்க (விஷாகா கல்லூரி), தருஷி பெரோ (ப்ரெஸ்படேரியன் மகளிர் கல்லூரி), காவிந்தி பெரேரா (ப்ரெஸ்படேரியன் மகளிர் கல்லூரி), செத்மி டனோஷி (குருநாகல் திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம்), சஜினி ரத்னாயக்க (குருநாகல் திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம்), தஹமி விமர்சனா (கடற்படை விளையாட்டுக் கழகம்), இமாஷா பெரேரா (கடற்படை விளையாட்டுக் கழகம்), கன்யா சேனாநாயக்க (பௌத்த மகளிர் கல்லூரி), பிமன்யா ரத்னாயக்க (பௌத்த மகளிர் கல்லூரி), விஷ்மிகா ரத்னாயக்க (கேட்வே கல்லூரி), அனீஷா பெரேரா (கேட்வே கல்லூரி), சஜாலி ஹெட்டியாரச்சி (செலான் வங்கி), டிமித்ரி குனியங்கொட (செலான் வங்கி), தெவ்னா ரந்தெனி (களுத்துறை மகளிர் கல்லூரி), லியாரா மல்மி (சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி)  

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<