இந்த ஆண்டுக்கான (2025) சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கெடுக்கும் இந்திய வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பி.சி.சி.ஐ) தெரிவுக் குழுத் தலைவர் அஜித் அகார்கர் மற்றும் இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா ஆகியோர் மும்பையில் வைத்து இந்திய வீரர்கள் குழாத்தினை இன்று (18) அறிவித்தனர். அத்துடன் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான இந்திய வீரர்கள் குழாமும் இதனுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
>>குமார் சங்கக்கார தலைமையில் இலங்கை மாஸ்டர்ஸ் கிரிக்கெட் அணி
சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான அணியில் ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் மொஹமட் ஷமி என இரண்டு முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் உபாதைக்குள்ளான பும்ரா தற்போது காயத்தில் இருந்து மீண்டுவரும் நிலையில் அவர் முழு உடற்தகுதியினை பெற்ற பின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் விளையாடுவது உறுதி செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும் பும்ராவிற்கு இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பும்ராவினை இங்கிலாந்து தொடரில் ஹர்சித் ரானா பிரதியீடு செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமுனையில் மொஹமட் சமி 2023ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரினை அடுத்து இந்திய அணிக்காக ஆடும் சந்தர்ப்பத்தினை முதல் முறையாகப் பெற்றிருக்கின்றார். இங்கிலாந்து தொடர் மற்றும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் இரண்டிலும் இந்திய ஒருநாள் அணியின் பிரதி தலைவராக முன்வரிசைத் துடுப்பாட்டவீரரான சுப்மான் கில் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.
அதேநேரம் சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான இந்திய ஒருநாள் குழாத்தில் மொஹமட் சிராஜிற்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. மொஹமட் சிராஜிற்கு உபாதைகள் ஏற்படாத போதும் அவர் பழைய பந்தினை வீசுவதில் சிக்கல்களை எதிர்கொள்வதன் காரணமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>பங்களாதேஷ் அணியிலிருந்து விலகும் நிக் போதஸ்!
அதேநேரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த சஞ்சு சாம்ஷன், இந்தியாவின் உள்ளூர் போட்டிகளில் அசத்திய கரூண் நாயர் ஆகிய இரண்டு துடுப்பாட்ட வீரர்களுக்கும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
குழு A இல் காணப்படும் இந்தியா சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் தமது முதல் போட்டியில் பங்களாதேஷினை எதிர்கொள்ளும் நிலையில், அடுத்த மாத ஆரம்பத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெறுகின்றது.
இந்திய ஒருநாள் அணி
ரோஹித் சர்மா (தலைவர்), சுப்மன் கில் (பிரதி தலைவர்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் ஷமி, அர்ஷ்தீப் சிங், ஜெய்ஸ்வால், ரிஷப் பாண்ட், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா (இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டும்)