டி20 போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய தென்னாபிரிக்கா

137

மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் ஒரு டி20 சர்வதேச போட்டி என விளையாடுவதற்கு அவுஸ்திரேலியாவுக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி அவுஸ்திரேலிய அணிக்கு இடையிலான இன்று (17) நடைபெற்ற டி20 போட்டியில் தென்னாபிரிக்க அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என தென்னாபிரிக்க அணி கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டி மழை காரணமாக தாமதமாக ஆரம்பிக்கப்பட்டதுடன் அணிக்கு 10 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை தென்னாபிரிக்க அணிக்கு வழங்கியிருந்தது. அந்த வகையில் அதிரடியாக தமது இன்னிங்சை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 108 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

டி-10 கிரிக்கெட் தொடரில் கேரளா கிங்ஸ் அணிக்காக உபுல் தரங்க ஒப்பந்தம்

இலங்கை கிரிக்கெட் அணியின் அனுபவமிக்க ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்க, எதிர்வரும் 21 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியாத்தில் ஆரம்பமாகவுள்ள டி-10 லீக்…

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக அணித்தலைவர் டு ப்ளெசிஸ் 27 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டதோடு குயின்டன் டி கொக் 22 ஓட்டங்களையும் ரீஸா ஹென்றிக்ஸ் 19 ஓட்டங்களையும் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு பங்காற்றியிருந்தனர். பந்து வீச்சில் அன்ட்ரு டை மற்றும் கௌடர் நைல் ஆகியோர் 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

ஒருநாள் தொடரின் தோல்வியை ஈடு செய்யும் நோக்கில் வெற்றி பெறுவதற்கு ஓவர் ஒன்றுக்கு சராசரியாக 11 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஆரோன் பின்ச் மற்றும் கிரிஸ் லின் ஆகியோர் அதிரடியாக விளையாடிய போதும் அவர்களால் நீண்ட நேரம் மைதானத்தில் நிலைத்திருக்க முடியாதளவுக்கு தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டார்கள் என்றால் அது மிகையாகாது.

இறுதியில் அவுஸ்திரேலிய அணி 10 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 87 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது. அவ்வணி சார்பாக இறுதி வரை போராடிய க்லென் மெக்ஸ்வெல் 38 ஓட்டங்களை பெற்று இறுதிப் பந்தில் ஆட்டமிழந்தார். ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது. சிறப்பாக பந்து வீசிய கிறிஸ் மொர்ரிஸ், லுங்கி நிகிடி மற்றும் அன்டைல் பெஹ்லுக்வாயோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர். 12 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்த தென்னாபிரிக்க சுழல் பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி ஆட்டநாயகனாக தெரிவானார்.

போட்டியின் சுருக்கம்

தென் ஆபிரிக்கா – 108/6 (10) – பாப் டு ப்ளெசிஸ் 27, குயிண்டன் டி கொக் 22, ரீஸா ஹென்றிக்ஸ் 19, அன்ட்ரு டை 18/2, கௌடர் நைல் 19/2

அவுஸ்திரேலியா – 87/7 (10) – க்ளென் மெக்ஸ்வெல் 38, கிறிஸ் மொர்ரிஸ் 12/2, லுங்கி இங்கிடி 16/2, அன்டைல் பெலுக்வாயோ 21/2

முடிவு – தென்னாபிரிக்க அணி 21 ஓட்டங்களால் வெற்றி

 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<