சம்பியன்ஸ் லீக்கில் நடப்புச் சம்பியன் லிவர்பூல் வெளியேற்றம்

72

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் 16 அணிகள் சுற்றின் இரு இரண்டாம் சுற்றுப் போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (12) நடைபெற்றன. இதில் நடப்புச் சம்பியன் லிவர்பூலை வீழ்த்தி அட்லடிகோ மெட்ரிட் மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் வெற்றியீட்டி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டன. இந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு:

லிவர்பூல் எதிர் அட்லடிகோ மெட்ரிட்

லிவர்பூல் அணிக்கு எதிராக மேலதிக நேரத்தில் அதிரடியாக மூன்று கோல்களை பெற்று 3-2 என கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய அட்லடிகோ மெட்ரிட் 16 அணிகள் சுற்றின் இரண்டு கட்டப் போட்டிகளிலும் 4-2 என்ற மொத்த கோல்கள் வித்தியாசத்தில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது. 

முதல் கட்டப் போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் தனது சொந்த மைதானமான ஆன்பில்டில் அட்லடிகோ மெட்ரிட் அணியை எதிர்கொண்ட லிவர்பூல் முதல் பாதியிலேயே கோல் பெற்று நம்பிக்கை தந்தது. 

41 ஆவது நிமிடத்தில் அலெக்ஸ் ஒக்லேட் சம்பர்லைன் பரிமாற்றிய பந்தை பெனால்டி பெட்டியின் மையத்தில் இருந்த ஜியோர்ஜினியோ விஜ்னல்டும் (Georginio Wijnaldum) தலையால் முட்டி லிவர்பூல் அணிக்கு கோல் பெற்றுக்கொடுத்தார்.

லிவர்ப்பூல் போட்டியின் முழு நேரம் முழுவதும் பந்தை அதிக நேரம் தம் வசம் வைத்து கோல் வாய்ப்புகளையும் நெருங்கி வந்தது. எனினும் ஸ்பெயின் கழகமான அட்லடிகோ மெட்ரிட் நேர்த்தியான தற்காப்பு ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்தியது.  

போட்டியின் முழு நேரம் முடியும்போது லிவர்பூல் 1-0 என முன்னிலை பெற்றபோதும் மொத்த கோல் வித்தியாசத்தில் 1-1 என இரு அணிகளும் சமநிலை பெற்றதால் 30 நிமிட மேலதிக நேரம் வழங்கப்பட்டது. 

இதன் போது 94 ஆவது நிமிடத்தில் வைத்து ரெபார்டோ பிர்மினோ பெற்ற கோல் மூலம் லிவர்பூல் 2-0 என முன்னிலை பெற்றபோதும் அதனைத் தொடர்ந்து அட்லடிகோ அணி அடுத்தடுத்து அதிர்ச்சி கோல்களை பெற்றது.   

பதில் வீரர் மார்கோஸ் லொரன்ட் பெனால்டி பெட்டிக்கு வெளியில் இருந்து அபார கோல் ஒன்றை பெற்றதோடு மீண்டும் செயற்பட்ட அவர் பெனால்டி பெட்டிக்கு வெளியில் இருந்து மற்றொரு கோலை புகுத்தினார். மேலதிக நேரம் முடியும் தருவாயில் மார்கோஸ் லொரன்டே பரிமாற்றிய பந்தை அல்வாரோ மொராடா வலைக்குள் புகுத்தி அட்லடிகோவின் வெற்றியை உறுதி செய்தார். 

இதன் மூலம் ஐரோப்பிய போட்டித் தொடர்களில் சொந்த மைதானத்தில் லிவர்பூல் அணி 25 போட்டிகளின் பின் முதல் தோல்வியை சந்தித்தது. 

இதுவரை ஐரோப்பிய சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றிராத அட்லடிகோ மெட்ரிட் அணி தொடரில் காலிறுதிக்கு முன்னேறி தனது எதிர்பார்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது. 

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் எதிர் பொரிசியா டொர்ட்முண்ட்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் இல்லாத வெற்று மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டொர்ட்முண்ட் அணியை 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 16 அணிகள் சுற்றின் இரண்டு கட்டப் போட்டிகளிலும் 3-2 என்ற மொத்த கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டி காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டது. 

பாரிஸில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மைதானத்திற்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் ஆயிரக்கணக்கானவர்கள் மைதானத்திற்கு வெளியில் ஒன்று திரண்டு போட்டியை பார்வையிட்டனர். 

இதில் அணித் தலைவர் தியாகோ சில்வா உபாதை காரணமாக இந்தப் போட்டியில் ஆடாத நிலையிலேயே PSG களமிறங்கியது. தொண்டை வலி காரணமாக ஆரம்பத்தில் இருக்கையில் அமரவைக்கப்பட்ட கைலியன் ம்பப்பே இரண்டாவது பாதியில் களமிறங்கினார். 

கடந்த மாதம் நடந்த முதல் கட்டப் போட்டியில் 2-1 என தோல்வியை சந்தித்த PSG அதனை முறியடிக்கும் நெருக்கடியுடனேயே இந்தப் போட்டியில் களமிறங்கியது. 

25 ஆவது நிமிடத்தில் எடிஸன் கவானி கோலை நோக்கி உதைத்தபோது டொர்ட்முண்ட் கோல்காப்பாளர் ரோமன் புர்கி தடுத்தார்.

இந்நிலையில் 28 ஆவது நிமிடத்தில் கோனர் கிக்கை அடுத்து அங்கெல் டி மரியா வழங்கிய பந்தை எதிரணி கோல் கம்பத்தின் மிக நெருங்கிய தூரத்தில் இருந்து நெய்மார் தலையால் முட்டி கோல் பெற்றார். இதன் மூலம் நம்பிக்கை பெற்ற பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் தொடர்ந்து ஜெர்மனி கழகத்தின் கோல் பகுதியை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. 

எனினும் போட்டியின் மேலதிக நேரத்தில் பப்லோ சரபியா வழங்கிய பந்தை ஜுவான் பெர்னட் கோலாக மாற்றியதன் மூலம் PSG 2-0 என முன்னிலை பெற்றது. 

கோல் திருப்பும் முயற்சியில் ஈடுபட்ட ஜெர்மனி கழகம் கடைசி நிமிடங்களில் வைத்து 10 வீரர்களாக குறைந்தது. நெய்மர் மீது தவறிழைத்து அவரை மைதானத்தில் தள்ளிவிட்ட எம்ரே கேன் சிவப்பு அட்டை பெற்றார். 

இதன் போது ஏற்பட்ட சச்சரவில் டி மரியா மஞ்சள் அட்டை பெற்றார். இதனால் PSG அணி ஆடும் சம்பியன்ஸ் லீக்கின் முதல் கட்ட காலிறுதியில் அவரால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   

இதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளாக ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றுடன் வெளியேறிய பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி அந்த முட்டுக்கட்டைக்கு முடிவுகட்டியுள்ளது. குறிப்பாக 2017 இல் பார்சிலோனாவுக்கு எதிராக 4-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றபோதும் இறுதியில் 6-5 என்ற மொத்த கோல்கள் அடிப்படையில் தோல்வியை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…