மொரோக்கோவை போராடி சமன் செய்த ஸ்பெயின்: போர்த்துக்கலுக்கு மற்றொரு அதிர்ச்சி முடிவு

531

போட்டி நிறைவை நெருங்கும் நேரத்தில் இயாகோ அஸ்பாஸ் போட்ட கோல் மூலம் மோரோக்கோவிடம் தோல்வியை தவிர்த்துக்கொண்ட ஸ்பெயின் அணி உலகக் கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு வலுவான நிலையில் முன்னேறியுள்ளது.

அதேபோன்று, ஈரானுடனான தீர்க்கமான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமன் செய்த போர்த்துக்கல் அணி மயிரிழையில் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. கடைசி நேரத்தில் பதில் கோல் புகுத்திய ஈரான் அணி வெறும் ஒரு புள்ளி வித்தியாசத்தில் அடுத்த சுற்று வாய்ப்பை கோட்டைவிட்டது.

ஸ்பெயின் எதிர் மொரோக்கோ

மொரோக்கோவுக்கு எதிராக 2-2 என்ற கோல் வித்தியாசத்தில் சமநிலை செய்த ஸ்பெயின் அணி B குழுவில் மொத்தம் 5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. இதன்மூலம் அந்த அணி நொக் அவுட் சுற்றில் A குழுவில் இரண்டாவது இடத்தை பிடித்த ரஷ்யாவை எதிர்கொள்ளவுள்ளது. காலிறுதிக்கு முன்னேறுவதற்கான இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி வரும் ஜூலை முதலாம் திகதி மொஸ்கோவில் நடைபெறவுள்ளது.

கொஸ்டாவின் அதிஷ்ட கோல் மூலம் ஈரானை வென்ற ஸ்பெயின்

ஈரானின் பாதுகாப்பு அரணை மீறி தியாகோ கொஸ்டா பெற்ற..

கலினின்கிரேட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஏற்கனவே உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறி இருந்த மொரோக்கோ அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

14அவது நிமிடத்தில் அன்ட்ரெஸ் இனியெஸ்டா மற்றும் செர்ஜியோ ராமோஸ் இடையே பந்தை பரிமாற்றிக் கொள்வதில் ஏற்பட்ட குழப்பத்தை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட காலிஸ் பௌதைப் பந்தை பறித்து நேராக கோலை நோக்கி தனியே கொண்டு சென்று வலைக்குள் புகுத்தினார்.

எனினும் ஐந்து நிமிடங்கள் கழித்து, செய்த தவறை திருத்திக்கொள்ளும் வகையில் இனியெஸ்டா எதிரணி பெனால்டி எல்லைக்குள் பந்தை கடத்தி சென்று இஸ்கோவுக்கு வழங்க அவர் அதனை கோலாக மாற்றினார்.

முதல் பாதி: ஸ்பெயின் 1 – 1 மொரோக்கோ

இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் மாறி மாறி வாய்ப்புகள் வந்தபோதும் 81 ஆவது நிமிடத்தில் மொரோக்கோ அதிர்ச்சி கோல் ஒன்றை பெற்றது. பைசல் பஜர் உதைத்த கோனர் கிக்கை யூசுப் என் நெசிரி தலையால் முட்டி கோலாக்கினார்.

போட்டி முடியும் தருவாயை நெருங்கி இருப்பதால் ஸ்பெயின் அணி பதில் கோல் புகுத்த அவசரம் காட்டியது. இதனால் எதிரணி கோல் கம்பத்தை அவ்வணியினர் தொடர்ந்து ஆக்கிரமித்தனர்.

இதன் பலனாக, போட்டியின் 91 ஆவது நிமிடத்தில் வைத்து டானி கர்வஜால் கீழால் பரிமாற்றிய பந்தை இயாகோ அஸ்பாஸ் வலைக்குள் புகுத்தினார். இந்த கோல் நடுவரால் ஆரம்பத்தில் மறுக்கப்பட்டபோதும் வீடியோ உதவி தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்கப்பட்டது.  

இதன்மூலம் ஸ்பெயின் அணி தொடர்ந்து 23 ஆவது போட்டியிலும் தோல்வியுறாத அணியாக தனது சாதனையை நீடித்துக் கொண்டது.

முழு நேரம்: ஸ்பெயின் 2 – 2 மொரோக்கோ

கோல் பெற்றவர்கள்

ஸ்பெயின் – இஸ்கோ 19, இயாகோ அஸ்பாஸ் 90’+1
மொரோக்கோ – காலிஸ் பௌதைப் 14′, யூசுப் என் நெசிரி 81′

>> காணொளிகளைப் பார்வையிட <<

ஈரானின் அதிர்ச்சி கோலை மீறி போர்த்துக்கல் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

B குழுவுக்கான அனைத்து போட்டிகளும் முடிவுற்றிருக்கும் நிலையில் 5 புள்ளிகளுடன் அந்த குழுவில் இரண்டாவது இடத்தை பிடித்த போர்த்துக்கல் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உருகுவே அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான 16 அணிகள் சுற்று போட்டி வரும் சனிக்கிழமை (30) சொச்சியில் நடைபெறவுள்ளது.

சரன்ஸ்கில் ரஷ்ய நேரப்படி திங்கட்கிழமை (25) நடைபெற்ற போட்டியில் ஈரானுக்கு அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருந்தபோதும் போர்த்துக்கல் அணியே அட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

போட்டி முழுவதிலும் போர்த்துக்கல் அணி மொத்தம் 508 தடவைகள் பந்தை பரிமாற்றியபோது ஈரான் அணி 131 தடவைகளே பந்தை கடத்திச் சென்றது. எனினும் முதல்பாதி ஆட்டத்தின் கடைசி நேரத்தில் ரிகார்டோ குவாரெஸ்மா, மேல் மூலையில் இருந்து பந்தை அழகாக உதைத்து பெற்ற கோல் மூலம் போர்த்துக்கல் அணி வெற்றி வாய்ப்பை அதிகரித்துக் கொண்டது.

முதல் பாதி: போர்த்துக்கல் 1 – 0 ஈரான்

இரண்டாவது பாதி ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே வீடியோ உதவி மூலம் ரொனால்டோவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டபோதும் அவர் அதனை கீழால் உதைக்க ஈரான் கோல்காப்பாளர் அலிரேசா பெய்ரன்ட்வான்ட் பந்தைத் தடுத்தார்.

இந்த போட்டியில் தவறிழைத்த ரொனால்டோ மஞ்சள் அட்டை பெற்றதோடு சிவப்பு அட்டை பெறும் நெருக்கடியை தவிர்த்துக் கொண்டார்.

கேள்விக்குறியாகியுள்ள மெஸ்சியின் உலகக் கிண்ண கனவு

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் முதல் இரண்டு..

போர்த்துக்கல் வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் வேளையில் மேலதிக நேரத்தின் 3 ஆவது நிமிடத்தில் ஈரான் அதிர்ச்சி கொடுத்தது. சர்தார் அஸ்மவுன் தலையால் முட்டிய பந்து செட்ரிக் சோரஸின் கையில் பட்டதை அடுத்து ஈரான் அணிக்கு வீடியோ தொழில்நுட்ப உதவி மூலம் பெனால்டி வழங்கப்பட்டது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் பெனால்டி வழங்கப்படாத போதும் ஈரானுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. அதனை பயன்படுத்தி கரிம் அன்சாரிபார்த் பந்தை வலைக்குள் செலுத்த போட்டி 1-1 என சமநிலையானது.

தொடர்ந்து சில நிமிடங்களே இருக்கும் நிலையில் 95 ஆவது நிமிடத்தில் பந்தை பெற்ற ஈரான் வீரர் மெஹ்தி டரமி அதனை கோலை நோக்கி உதைக்க அந்த பந்து வலையின் பக்கவாட்டியில் பட்டதால் போர்த்துக்கல் அதிர்ஷ்டவசமாக தப்பித்துக்கொண்டது.  

முழு நேரம்:  போர்த்துக்கல் 1 – 1 ஈரான்

கோல் பெற்றவர்கள்

போர்த்துக்கல் – ரிகார்டோ குவாரெஸ்மா 45′
ஈரான் – கரிம் அன்சாரிபார்த் 90’+3 (பெனால்டி)

எகிப்தை வீழ்த்தி சவூதிக்கு ஆறுதல் வெற்றி

Image Courtesy – Global Look Press

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் ஆரம்ப சுற்றுடனேயே வெளியேறும் எகிப்து மற்றும் சவூதி அரேபியாவுக்கு இடையிலான போட்டியில் சவூதி அணி 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி ஒன்றை பெற்றதோடு எகிப்து இம்முறை உலகக் கிண்ணத்தில் எந்த ஒரு வெற்றியையும் பெறாமல் நாடு திரும்புகிறது.

எனினும் உலகத் தரம் வாய்ந்த எகிப்து நட்சத்திர வீரர் மொஹமட் சலாஹ் தனது திறமையை வெளிக்காட்டும் வகையில் அசத்தல் கோல் ஒன்றைப் பெற்றார்.

ரஷ்யாவின் வொல்கோகிரேட் அரங்கில் நடைபெற்ற போட்டி எகிப்தின் 45 வயது எஸ்ஸாம் அல் ஹதரிக்கு முக்கியமானதாக இருந்தது. இந்த போட்டியில் களமிறங்கியதன் மூலம் அவர் உலகக் கிண்ணத்தில் ஆடிய மிக வயதான வீரராக புதிய சாதனை படைத்தார். இதன் போது 2014 உலகக் கிண்ண போட்டியில் தனது 43 வயதில் ஆடிய கொலம்பிய கோல்காப்பாளர் பரித் மொன்ட்ரகோனின் சாதனையையே அவர் முடிறியடித்தார்.

வெற்றிக்கு திரும்பிய கொலம்பியாவுக்கு அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு

இந்நிலையில் லிவர்பூல் முன்கள வீரரான சலாஹ் 22 ஆவது நிமிடத்தில் சவூதி கோல்காப்பாளர் யாசிர் அல் மொசைலமுக்கு மேலால் பந்தை தட்டிவிட்டு கோல் புகுத்தினார். இதன் மூலம் எகிப்து அணியால் ஆரம்பத்தில் முன்னிலை பெற முடிந்தது.

பின்னர் 41 ஆவது நிமிடத்தில் சவூதி வீரர் பஹத் அல் முவல்லத் உதைத்த பெனால்டியை எகிப்தின் 45 வயது கோல்காப்பாளர் அபராமாக தடுத்தார். எனினும் முதல் பாதியின் மேலதிக நேரத்தில் சவூதிக்கு மற்றொரு பெனால்டி உதை கிடைத்தபோது அவரால் தடுக்க முடியாமல் போனது. சல்மான் அல் பராஜ் சவூதிக்கு பதில் கோல் புகுத்தினார்.

முதல் பாதி: சவூதி அரேபியா 1 – 1 எகிப்து

முதல் பாதி ஆட்டத்தில் சலாஹ் வேகமாக எதிரணி கோல் கம்பத்தை பல தடவைகள் ஆக்கிரம்பித்து கோல்களை தவறவிட்டபோதும் இரண்டாவது பாதியில் அவரது வேகம் குறைந்தது. இதனால் எகிப்து தற்காப்பு ஆட்டத்திலேயே அதிக கவனம் செலுத்தியது.

பின்னர் ஆட்டம் முடியும் நேரத்தில் சவூதி வீரர் சலம் அல் டவ்சாரி கோல் ஒன்றை பெற்று சவூதி அணியை வெற்றிபெறச் செய்தார்.     

இதன்படி சவூதி அரேபியா உலகக் கிண்ணத்தில் 12 போட்டிகளின் பின் தனது முதல் வெற்றியை பதிவு செய்து கொண்டது. அந்த அணி கடைசியாக 1994 இல் பெல்ஜியத்திற்கு எதிராக 1-0 என வெற்றி பெற்றிருந்தது.

மறுபுறம் எகிப்து அணி வெற்றியின்றி உலகக் கிண்ணத்தில் ஆடிய ஏழாவது போட்டி இதுவாகும். உலகக் கிண்ணத்தில் எகிப்தை விடவும் ஹொன்டுராஸ் (9) மாத்திரமே அதிக போட்டியில் விளையாடி வெற்றி ஒன்றை சுவைக்காமல் உள்ளது.   

முழு நேரம்: சவூதி அரேபியா 2 – 1 எகிப்து

கோல் பெற்றவர்கள்

சவூதி அரேபியா – சல்மான் அல் பராஜ் 45’+6, (பெனால்டி), சலம் அல் டவ்சாரி 90’+5
எகிப்து – மொஹமட் சலாஹ் 22′

ரஷ்யாவை இலகுவாக வீழ்த்திய உருகுவே A குழுவில் முதலிடம்

உலகக் கிண்ண கால்பந்து போட்டியை இலகு வெற்றிகளுடன் ஆரம்பித்த போட்டியை நடத்தும் ரஷ்ய அணி தனது கடைசி குழு நிலைப் போட்டியில் உருகுவேயிடம் 3-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் உருகுவே அணி A குழுவில் மூன்று போட்டிகளிலும் வென்று முதலிடத்தை பிடித்துக் கொண்டது.

இந்த போட்டியில் தோல்வியுற்றபோதும் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தெரிவாகி இருக்கும் ரஷ்யா தனது குழுவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துக் கொண்டது.

இந்நிலையில் நொக் அவுட் சுற்றில் இந்த இரு அணிகளும் B குழுவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளையே எதிர்கொள்ளவுள்ளன. அது ஸ்பெயின் மற்றும் ஐரோப்பிய சம்பியன் போர்த்துக்கல்லாக அமையவுள்ளது.

சமராவில் இன்று (25) நடைபெற்ற போட்டியில் அரங்கில் இருந்த பெரும்பாலான ரசிகர்கள் தமது சொந்த அணியான ரஷ்யாவுக்கு ஆதரவை வெளிப்படுத்தியபோதும் அந்த அணியால் பலம் கொண்ட உருகுவேயுடன் சரிசமமாக ஆட முடியவில்லை. போட்டி ஆரம்பித்து 10 ஆவது நிமிடத்திலேயே பார்சிலோனா நட்சத்திரம் லுவிஸ் சுவாரஸ் ப்ரீ கிக் மூலம் பந்தை வலைக்குள் செலுத்தினார்.

வெற்றியை தவறாகக் கொண்டாடிய சுவிஸ் வீரர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

பின்னர் 23 ஆவது நிமிடத்தில் டியாகோ லக்சால்ட் பெனால்டி எல்லைக்கும் வெளியில் இருந்து கோலை நோக்கி பந்தை உதைத்தபோதும் ரஷ்ய வீரர் டெனிஸ் செரிஷெவ் அதனை திசை திருப்ப முயன்றார். ஆனால் அந்த பந்து தனது சொந்த வலைக்குள்ளேயே புகுந்து ஓன் கோலாக மாறியது.   

இந்நிலையில் தவறிழைத்து இரண்டாவது மஞ்சள் அட்டையை பெற்று ரஷ்ய வீரர் இகோர் ஸ்டொல்னிகொவ் வெளியேறியதால் 36 ஆவது நிமிடத்திலேயே ரஷ்ய அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்கு உள்ளாகியது. இது அந்த அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.

முதல் பாதி: உருகுவே 2 – 0 ரஷ்யா  

ஒரு வீரரை மேலதிகமாக கொண்டிருக்கும் உருகுவே இரண்டாவது பாதியிலும் போட்டியை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டது. போட்டியின் அரைப்பாதிக்கும் மேலான நேரம் உருகுவே அணி வீரர்களின் கால்களிலேயே பந்து சுற்றியதோடு அந்த அணி 16 தடவைகள் கோலை நோக்கி பந்தை உதைத்தபோதும் ரஷ்யாவால் 3 முறை மாத்திரமே எதிரணி கோல் கம்பத்தை ஆக்கிரமிக்க முடிந்தது.     

இந்நிலையில் 90 ஆவது நிமிடத்தில் உருகுவே தனது மூன்றாவது கோலையும் புகுத்தியது. கோனர் கிக் மூலம் வலையை நோக்கி வந்த பந்தை ரஷ்ய கோல்காப்பாளர் தடுத்தபோது அந்த பந்து மிக அருகில் இருந்த எடிசன் கவானியிடம் செல்ல அவர் அதனை கோலாக மாற்றினார்.     

இதன் மூலம் லுவிஸ் சுவாரஸிற்கு அடுத்து மூன்று உலகக் கிண்ண தொடர்களில் கோல் பெற்ற இரண்டாவது உருகுவே வீரராக கவானி பதிவானார்.

முழு நேரம்: உருகுவே 3 – 0 ரஷ்யா  

கோல் பெற்றவர்கள்

உருகுவே – லுவிஸ் சுவாரஸ் 10′, டெனிஸ் செரிஷெவ் 23′ (ஓன் கோல்), எடிசன் கவானி 90′

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<