சம்பியன்ஸ் லீக்; மொறகஸ்முல்ல, நியூ ஸ்டார், மாத்தறை சிடி அணிகளுக்கு முதல் வெற்றி

Champions League 2022

218

வெள்ளிக்கிழமை (03) ஆரம்பமாகிய சம்பியன்ஸ் லீக் 2022 கால்பந்து தொடரின் முதல் நாள் போட்டிகளில் நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம், மாத்தறை சிடி கால்பந்து கழகம் மற்றும் மொறகஸ்முல்ல விளையாட்டுக் கழகம் என்பன வெற்றி பெற்று தொடரை சிறப்பாக ஆரம்பித்துள்ளன.

புதிதாக இணைக்கப்பட்ட அணிகள் உட்பட மொத்தம் 14 அணிகள் மோதும் சம்பியன்ஸ் லீக் 2022 கால்பந்து தொடர் 3 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பமாகி, முதல் நாளான வெள்ளிக்கிழமை மொத்தமாக 3 போட்டிகள் இடம்பெற்றன. குறித்த போட்டிகளின் சுருக்கத்தை இங்கு பார்ப்போம்.

இலங்கை போக்குவரத்து சபை வி.க (SLTB) எதிர் மொறகஸ்முல்ல வி.க

இந்தப் போட்டி கொழும்பு சுகததாஸ அரங்கில் இடம்பெறும் வகையில் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது. எனினும், சீரற்ற காலநிலையினால் சுகததாச மைதானத்தின் நிலைமை மோசமாக இருந்தமையினால் போட்டி பெத்தகானவில் உள்ள இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பயிற்சி மைய மைதானத்தில் இடம்பெற்றது.

இந்தப் போட்டியின் முதல் பாதியில் முன்னாள் தேசிய அணி வீரர் எரந்த பிரசாத் மூலம் கோல் பெற்ற மொறகஸ்முல்ல அணிக்கு இரண்டாம் பாதியில் டிலான் மதுசங்க மற்றும் எரந்த பிரசாத் மூலம் மேலும் இரண்டு கோல்கள் கிடைத்தன.

எனவே, போட்டி நிறைவில் மொறகஸ்முல்ல விளையாட்டுக் கழகம் 3-0 என்ற கோல்கள் கணக்கில் SLTB அணியை இலகுவாக வீழ்த்தி, தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது.

முழு நேரம்: SLTB வி.க 0 – 3 மொறகஸ்முல்ல வி.க

கோல் பெற்றவர்கள்

மொறகஸ்முல்ல வி.க – எரந்த பிரசாத் 10’ & 90+3’, டிலான் மதுசங்க 67’

கிறிஸ்டல் பெலஸ் கா.க எதிர் நியூ ஸ்டார் வி.க

குருனாகல் மாலிகாபிடிய அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் எந்த அணியினாலும் கோல் பெற முடியாமல் போனது.

எனினும், இரண்டாம் பாதியின் 65ஆம் மற்றும் 88ஆம் நிமிடங்களில் கெலும் பிரியன்கர பெற்றுக்கொடுத்த இரண்டு கோல்களின் உதவியுடன் போட்டி நிறைவில் நியூ ஸ்டார் அணியினர் 2-0 என வெற்றி பெற்றனர்.

முழு நேரம்: கிறிஸ்டல் பெலஸ் கா.க 0 – 2 நியூ ஸ்டார் வி.க

கோல் பெற்றவர்கள்

நியூ ஸ்டார் வி.க – கெலும் பிரியன்கர 65’ & 88’

மாத்தறை சிடி கா.க எதிர் நிகம்பு யூத் வி.க

மாத்தறை கொடவில விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டி ஆரம்பமாகி 20 நிமிடங்களில் வெளிநாட்டு வீரர் பிரின்ஸ் மாத்தறை சிடி அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.

பின்னர் இரண்டாம் பாதியின் 58ஆவது நிமிடத்தில் கமல் சில்வா நிகம்பு யூத் அணிக்கான முதல் கோலைப் பெற்று போட்டியை சமப்படுத்தினார். எனினும், அடுத்த 15 நிமிடங்களில் பிரின்ஸ் தனது இரண்டாவது கோலையும் பெற்றுக்கொடுக்க, போட்டி நிறைவில் மாத்தறை சிடி கால்பந்து கழகம் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

முழு நேரம்: மாத்தறை சிடி கா.க 2 – 1 நிகம்பு யூத் வி.க

கோல் பெற்றவர்கள்

மாத்தறை சிடி கா.க – B பிரின்ஸ் 20’ & 73’

நிகம்பு யூத் வி.க – கமல் சில்வா 58’

இந்த தொடரின் முதல் வாரத்திற்கான மேலும் இரண்டு போட்டிகள் சனிக்கிழமையும், இரண்டு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<