அர்ஜூன ரணதுங்க தலைமையிலான இடைக்கால குழுவிற்கு நீதிமன்ற தடை

Sri Lanka Cricket

591

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாக குழுவிற்கு நீதிமன்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

இலங்கை கிரிக்கெட் சபைக்கான இடைக்கால குழு நியமனம்

இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பணிப்புரையின் பேரில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க தலைமையிலான இடைக்கால நிர்வாகக் குழு நேற்று (06) தெரிவு செய்யப்பட்டிருந்தது. அந்தவகையில் இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்காலத்தலைவராக அர்ஜூன ரணதுங்க தெரிவு செய்யப்பட்டிருந்தார் 

 

இந்த நிலையில் இலங்கை கிரக்கெட் சபையின் தலைவராக காணப்பட்டிருந்த ஷம்மி சில்வா வழங்கிய மனுவிற்கு அமைய இடைக்கால நிர்வாகக் குழுவின் செயற்பாடுகளுக்கு நீதிமன்றம் 14 நாட்கள் தடை உத்தரவினை வழங்கியிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது. 

இதேநேரம் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் இடைக்கால நிர்வாகம் ஒன்றினை நியமனம் செய்தது தொடர்பில், இலங்கையின் ஜனாபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அறிவிக்காத நிலையில் இந்த குழு தொடர்பில் ஆராய ஜனாதிபதி தரப்பில் விசேட அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும் 

இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் உட்பட அண்மைய கிரிக்கெட் தொடர்களில் வெளிக்காட்டிய மோசமான ஆட்டத்தினைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் சபை மீது அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<