பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சயீப் ஹஸனுக்கும், பங்களாதேஷ் பயிற்றுவிப்பாளர் நிக் லீ இற்கும் கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) அறிவித்திருக்கின்றது.
பந்தின் மீது சனிடைசர் தடவிய ஆஸி. வீரர் இடைநீக்கம்
இந்த இருவருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதனை அடுத்து முன்னெச்சரிக்கையாக இருக்கும் நோக்குடன் இலங்கை அணியுடன் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்காக செம்டம்பர் 27 ஆம் திகதி இலங்கை பயணமாகவுள்ள பங்களாதேஷ் குழாத்தில் அடங்குகின்ற 24 அங்கத்தவர்களினுடைய (17 வீரர்கள்+7 அணி உத்தியோகத்தர்கள்) பரிசோதனை மாதிரிகளை எடுத்து கொவிட்-19 வைரஸ் தொற்று தொடர்பில் பரீட்சிப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் மருத்துவக் குழாம் அறிவித்திருக்கின்றது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் விஷேட பயிற்றுவிப்பாளர்களில் ஒருவரான நிக் லீ இற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி டுபாயில் வைத்து கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டிருந்தது. பின்னர், 10 நாட்கள் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த நிக் லீ நோய்த்தொற்று ஏற்படாதவராக இனங்காணப்பட்டிருந்தார். இதனால் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி பங்களாதேஷ் வந்த நிக் லீ, அங்கே 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நேற்று (7) கொவிட்-19 வைரஸ் தொற்று பரிசோதனைக்கு முகம்கொடுத்திருந்தார். நிக் லீ இற்கு நேற்றைய பரிசோதனையின் போதே கொவிட்-19 வைரஸ் தொற்று மீண்டும் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
”அணியின் முகாமைத்துவக் குழுவிற்கு ஆலோசனைகளை வழங்க முன்னர் எங்களது நிபுணர்கள் லீ இனுடைய கொவிட்-19 வைரஸ் தொற்று பற்றிய விசாரணைகளை மேற்கொண்டு அவருக்கு புதிதாகவா அல்லது ஏற்கனவே இருந்த பழைய வைரஸ் மீண்டும் வந்திருக்கின்றதா? என்பது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.” என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் விளையாட்டு மருத்துவ அதிகாரி தேபாஷிஸ் சௌத்திரி குறிப்பிட்டிருந்தார்.
இதேநேரம், இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடருக்கு முன்னர் பங்களாதேஷ் அணி வீரர்கள், அணி உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலாக 37 பேர் வரை கொவிட்-19 வைரஸ் தொடர்பான பரிசோதனைகளுக்கு முகம்கொடுக்க காத்திருக்கின்றனர் என பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களில் ஒருவரான மின்ஹாஜ் ஆப்தின் தெரிவித்திருக்கின்றார்.
இதேநேரம், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கொவிட்-19 தொற்று பற்றிய முன்னெச்செரிக்கை ஒன்றின் காரணமாக தமது அணி வீரர்கள் தனியாக பயிற்சிகள் பெறுவதனை இரத்து செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
டெல்லி கெப்பிடல்ஸ் அணியில் ஒருவருக்கு கொரோனா தொற்று
எனினும், நாளை (9) தொடக்கம் ஷேர்-ஈ-பங்களா மைதானத்தில் வீரர்கள், பயிற்சியாளர்கள் என இரு வகுப்பினரும் பயிற்சிகளில் ஈடுபடவிருக்கின்றனர்.
மறுமுனையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான சயீப் ஹஸன் பற்றி கருத்து வெளியிட்டிருக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, சயீப் ஹஸனுக்கோ அல்லது வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் வேறு ஒரு வீரருக்கோ அணியில் வாய்ப்பு இல்லாமல் போகாது எனக் குறிப்பிட்டு, குறித்த வீரர்கள் தொடர்பில் கரிசனையுடன் மீண்டும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கின்றது.
அதேவேளை இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடருக்கு முன்னர் இம்மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகுகின்ற வதிவிடப்பயிற்சி முகாமில் பங்கெடுக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, இலங்கை வருவதற்கு முன்னதாக நான்கு அவத்தைகளில் கொவிட்-19 வைரஸ் தொற்று பரிசோதனைகளை மேற்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<