வெற்றிகளை குவித்த ஜாவா லேன், மாத்தறை சிடி; சோபிக்க தவறிய செரண்டிப்

Champions League 2022

116
 

சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஞாயிற்றுக்கிழமை (14) நடந்த 9ஆம் வாரத்திற்கான போட்டிகளில் ஜாவா லேன், மாத்தறை சிடி அணிகள் வெற்றிகளை பெற்று இந்த தொடரின் கிண்ணத்தை கைப்பற்றும் மோதலில் இன்னும் தங்களை தக்க வைத்துக்கொண்டிருக்கும்  நிலையில், செரண்டிப் அணி முக்கிய போட்டியில் வெற்றி பெறத் தவறியது.

நிகம்பூ யூத் வி.க எதிர் ஜாவா லேன் வி.க

சுகததாச அரங்கில் இடம்பெற்ற ஆட்டத்தில் ஜாவா லேன் அணி  5க்கு 1என நிகம்பூ யூத் அணியை இலகுவாக வீழ்த்தியது. போட்டியின் 9ஆவது நிமிடத்தில் ஜாவா லேன் அணிக்கு கிடைத்த கோணர் வாய்ப்பின்போது உள்வந்த பந்தை அவ்வணியின் தலைவர் மொஹமட் அலீம் கோலாக மாற்றினார்.  தொடர்ந்து நவீன் ஜூட் ஜாவா லேன் அணிக்கு இரண்டாவது கோலை அடிக்க, முதலாம் பாதி நிறைவில் ஜாவா லேன் அணி 2க்கு 0 என முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதியின் 52ஆவது நிமிடத்தில் வெளிநாட்டு வீரர் ஒலவாலே பெனால்டி கோலை அடிக்க, 68ஆவது நிமிடத்தில் நவீன் தனது இரண்டாவது கோலை அடித்தார். இந்த நிலையில, 70 ஆவது நிமிடத்தில் நிகம்பூ யூத் அணிக்காக நிலுக்க ஜனித் அபாரமான பிரீ கிக் கோலொன்றினை அடித்தார். எனினும் போட்டியின் 90+1ஆவது நிமிடத்தில் நவீன் ஜாவா லேன் அணிக்காக தனது 3ஆவது கோலையும் அடித்து ஹெட்ரிக் கோலைப் பதிவு செய்தார்.

இதனால் போட்டி நிறைவில் நிகம்பூ யூத் அணியை 5க்கு 1 என இலகுவாக வீழ்த்தியது ஜாவா லேன். இந்த வெற்றியினால் ஜாவா லேன் அணி புள்ளிப் பட்டியலில் தொடர்ந்தும் முதல் இடத்தில் நீடிக்கின்றது.

முழு நேரம்: நிகம்பூ யூத் வி.க 1 – 5 ஜாவா லேன் வி.க

செரண்டிப் கா.க எதிர் SLTB வி.க

கண்டி போகம்பரை அரங்கில் இடம்பெற்ற செரண்டிப் மற்றும் SLTB அணிகளுக்கு இடையிலான போட்டி 2க்கு 2 என சமனில் நிறைவடைந்தது. ஆட்டத்தின் 7ஆம் நிமிடத்தில் SLTB அணிக்காக சண்முகராஜா சஞ்சீவ் முதல் கோலை அடித்தபோதும், 16ஆவது நிமிடத்தில் செரண்டிப் அணிக்காக அனுபவ வீரர் மொஹமட் இஸ்ஸதீன் ஒரு கோலடித்து, கோல் எண்ணிக்கையை சமன் செய்தார்.

>> நட்சத்திர வீரர்களால் போட்டி முடிவுகளை மாற்றிய அணிகள் | FOOTBALL ULAGAM

பின்னர் சமநிலையுடன் ஆரம்பித்த இரண்டாம் பாதியில் 54ஆவது நிமிடத்தில் விஜேகுமார் விக்னேஷ் செரண்டிப் அணிக்கு கோலடித்து அவ்வணியை முன்னிலை படுத்தினார்.  இந்த நிலையில் விஜேசுந்தரம் யுகேஷ் SLTB அணிக்கு 61ஆவது நிமிடத்தில் கோலடித்து போட்டியை 2க்கு 2 என சமன் செய்தார்.

இந்த சமநிலை முடிவினால் முதலாம், இரண்டாம் இடங்களில் இருக்கும் அணிகளை விட 3 புள்ளிகள் வித்தியாசத்தில் செரண்டிப் அணி சம்பியன்ஸ் லீக் புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

முழு நேரம்: செரண்டிப் கா.க 2 – 2 SLTB வி.க

சோண்டர்ஸ் வி.க எதிர் மாத்தறை சிடி க

சுகததாச அரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது போட்டியாக இடம்பெற்ற விறுவிறுப்பான ஆட்டமொன்றில், சோண்டர்ஸ் அணிக்கு எதிராக 2க்கு 1 என வெற்றியை பதிவு செய்தது மாத்தறை சிடி.  போட்டியின் 24ஆவது நிமிடத்தில் B பிரின்ஸ் மாத்தறை சிடி அணிக்கு கோலடித்து அவ்வணியை 1க்கு 0 என முதலாம் பாதியில் முன்னிலை படுத்தினார்.

தொடர்ந்து இரண்டாம் பாதியில்,  49ஆவது நிமிடத்தில் லார்பி பிரின்ஸ் மேலும் ஒரு கோலை அடிக்க, மாத்தறை சிடி  2க்கு 0 என முன்னிலை பெற்றது. 81ஆவது நிமிடத்தில் மாத்தறை சிடி அணியின் ருசிரு லக்மால் ஒரு ஓன் கோலை அடிக்க, நிறைவில் 2க்கு 1 என மாத்தறை சிடியின் முன்னிலையுடன் போட்டி நிறைவுக்கு வந்தது.

முழு நேரம்: சோண்டர்ஸ் வி.க 1 – 2 மாத்தறை சிடி க

   >> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<