60 போட்டிகளைக் கொண்ட ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரின் 30ஆவது போட்டி நேற்று பெங்களூர் சின்னஸ்வாமி மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் கவ்தம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணி விராத் கொஹ்லி தலைமையிலான பெங்களூர் ரோயல் செலேன்ஜர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியின் தலைவர் கவ்தம் கம்பீர் முதலில் பெங்களூர் ரோயல் செலேன்ஜர்ஸ் அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்புவிடுத்தார்.

இதற்கிணங்க லோகேஷ் ராஹுல் மற்றும் க்றிஸ் கெய்ல் ஆகியோர் பெங்களூர் அணியின் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினார்கள். போட்டியின் இரண்டாவது ஓவரில் மோர்கல் வீசிய பந்தில் சிக்ஸர் அடித்து ரசிகர்களை ஆரவாரப்படுத்திய கெயில் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த விராத் கொஹ்லி மற்றும் லோகேஷ் ராஹுல் ஜோடி சீரான வேகத்தில் விளையாடி ஓட்டங்களைக் குவித்தனர். ராஹுல் 32 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 52 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். பின்னர் வானவேடிக்கை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டி வில்லியர்ஸ் நான்கு ஓட்டங்களோடு சவ்லா வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

மீண்டும் ஒரு முறை சிறப்பாக ஆடிய கொஹ்லி 44 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய வொட்சன் 34 ஓட்டங்களையும் சச்சின் பேபி மற்றும் பின்னி அதிரடியாக விளையாடி தலா 16 ஓட்டங்களைக் குவிக்க பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுகளை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றது. கொல்கத்தா அணியின் பந்து வீச்சில் மோர்ன் மோர்கல் மற்றும் பியுஷ் சவ்லா ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார்கள்.

186 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் நயிட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான உத்தப்பா ஒரு ஓட்டத்தோடு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் தலைவர் கவ்தம் கம்பீர் 37 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார். பின்பு அடுத்தடுத்து நயிட் ரைடர்ஸ் அணியின் விக்கட்டுகள் சரிந்ததால் போட்டியின் போக்கு பெங்களூர் பக்கம் மேலோங்கிக் காணப்பட்டது. ஆனால் அதன் பின் 5ஆவது விக்கட்டுக்காக ஜோடி சேர்ந்த என்டர் ரசல் மற்றும் யூசுப் பதான் ஜோடி பவுண்டரி மற்றும் சிக்ஸர் மழைகளை பொழிந்து 94 ஓட்டங்களைப் பகிர்ந்து போட்டியை தம் அணிப்பக்கம் திருப்பினார்கள். அதிரடியாக ஆடிய ரசல் 24 பந்துகளில் 29 ஓட்டங்களைப் பெற்று களத்தை விட்டு வெளியேறினார். மறுபக்கம் விடாப்பிடியாக விளையாடிய யூசுப் பதான் 29 பந்துகளில் 60 ஓட்டங்களைக் குவித்து நயிட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற உதவினார். இறுதியில் கொல்கத்தா அணி 19.1 ஓவரில் 5 விக்கட்டுகளை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியைத் தோல்வி அடையச் செய்தது. பெங்களூர் அணியின் பந்து வீச்சில் சஹல் 2 விக்கட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியின் என்டர் ரசல் தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் கிரிக்கட் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்