நிதர்சனின் கோலுடன் நேபாளம் அணியை சமப்படுத்திய இலங்கை

AFC Cup 2023

195

கட்டாரில் செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற நேபாளம் அணிக்கு எதிரான உத்தியோகபூர்வமற்ற நட்புறவுப் போட்டியை இலங்கை கால்பந்து அணி 1-1 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் முடித்துள்ளது.

இந்த மாதம் உஸ்பகிஸ்தானில் இடம்பெறவுள்ள ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் (AFC) ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்கான இலங்கை உத்தேச குழாம் கட்டாருக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

கடந்த வாரம் கட்டாருக்கு சென்ற இலங்கை வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் குழாம், அங்கு தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நேபாளத்துடனான பயிற்சிப் போட்டியில் விளையாடியது.

எந்தவொரு கோலும் பெறப்படாத நிலையில் போட்டியில் முதல் பாதி நிறைவுற்றது. எனினும், இந்த பாதியில் இலங்கையின் பின்கள வீரர் ஷலன சமீர தலையில் ஏற்பட்ட உபாதையின் காரணமாக களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமை இலங்கை அணிக்கு பெரிய இழப்பாக இருந்தது.

போட்டியில் அதிக நேரம் பந்தை நேபாள வீரர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், இலங்கை அணிக்கு மாற்று வீரராக களம் வந்த மரியதாஸ் நிதர்சன் போட்டியின் 80ஆவது நிமிடத்தில் போட்டியின் முதல் கோலைப் பெற்று இலங்கையை முன்னிலைப்படுத்தினார்.

எனினும், போட்டியின் 90 நிமிடங்கள் கடந்த நிலையில் இலங்கை பின்கள வீரர் அபீல் மொஹமட் மேற்கொண்ட முறையற்ற ஆட்டம் காரணமாக நேபாள அணிக்கு பெனால்டி உதைக்கான வாய்ப்பு கிடைத்தது. அதனை அவ்வணி வீரர்கள் கோலாக்க, போட்டி நிறைவில் ஆட்டம் தலா ஒரு கோலுடன் சமநிலையடைந்தது.

ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டிகள் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணி போட்டிகளை நடாத்தும் உஸ்பகிஸ்தான், தாய்லாந்து மற்றும் மாலைதீகள் அணிகளுடன் குழு C இல் இடம்பெற்றுள்ளது. இலங்கை இறுதிக் குழாம் கட்டாரில் பயிற்சிகளை முடித்துக்கொண்டு அங்கிருந்து நேராக உஸ்பகிஸ்தானுக்கு பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<