சம்பியன்ஸ் லீக் 2022 நாளை ஆரம்பம்

Champions League 2022

277

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் சம்பியன்ஸ் லீக் தொடர் நாளை வெள்ளிக்கிழமை (03) ஆரம்பமாகும் என இலங்கை கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சுபர் லீக் தொடரை அடுத்து இலங்கையின் மிகப் பெரிய தொடராக உள்ள சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் கடந்த மூன்று வருடங்களாக இலங்கையில் இடம்பெறவில்லை. இந்நிலையில் 3 வருட இடைவெளியின் பின்னர் இந்த தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது.

புதிய அணிகளின் உள்வாங்களுடன் இடம்பெறும் இம்முறை தொடர் கடந்த மே மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தது. எனினும், நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக போட்டிகள் பிற்போடப்பட்டது.

இந்நிலையில் நாளை முதல் இடம்பெறும் இந்த தொடரின் முதல் வாரத்திற்கான போட்டி அட்டவணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, முதல் வாரப் போட்டிகள் கொழும்பு சுகததாஸ அரங்கு, குருனாகலை மாலிகாபிடிய அரங்கு, மற்றும் மாத்தறை கொடவில விளையாட்டரங்கு ஆகிய மைதானங்களில் இடம்பெறவுள்ளன.

இதன்படி, வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு மாலிகாபிடிய அரங்கில் கம்பளை கிறிஸ்டல் பெலஸ் மற்றும் பாணதுறை நியூ ஸ்டார் அணிகள் மோதவுள்ளன. அதேநேரம் சுகததாஸ அரங்கில் ஆரம்பமாகும் அடுத்த போட்டியில் இலங்கை போக்குவரத்து சபை (SLFB) அணி மற்றும் மொறகஸ்முல்ல அணிகள் விளையாடவுள்ளன. இதே தினத்தில் கொடவில மைதானத்தில் இடம்பெறவுள்ள போட்டியில் மாத்தறை சிட்டி மற்றும் நிகம்பு யூத் அணிகள் மோதவுள்ளன.

அதன் பின்னர் சனிக்கிழமை இடம்பெறும் ஒரு போட்டியில் ஜாவா லேன் அணியும் இலங்கை பொலிஸ் அணியும் சுகததாஸ அரங்கில் மோதும். அதேவேளை, அதே தினத்தில் பெலிகன்ஸ் மற்றும் சுபர் சன் அணிகளுக்கு இடையிலான போட்டி மாலிகாபிடியவில் இடம்பெறும்.

ஞாயிற்றுக்கிழமை மாலிகாபிடியவில் இடம்பெறும் போட்டியில் மாவனல்லை செரண்டிப் அணியும் யாழ்ப்பாணம் சென் மேரிஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தம் அதேவேளை, குறித்த தினத்தில் சொலிட் மற்றும் சோண்டர்ஸ் அணிகள் சுகததாஸ அரங்கில் மோதும்.

லீக் முறையில் இடம்பெறும் இந்த தொடரில் பங்கு கொள்ளும் அனைத்து அணிகளும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். எனவே, 14 அணிகளுக்கும் தலா 13 போட்டிகள் உள்ளன. தொடரின் முதல் வாரத்திற்கான போட்டி அட்டவணை மாத்திரமே தற்போது வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<