ஆசியக் கிண்ணத்தில் இருந்து விலகும் துஷ்மந்த, வனிந்து

Asia Cup 2023

278
Chameera, Hasaranga

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர மற்றும் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க ஆகிய இருவரும் அடுத்த வாரம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஆரம்பமாகவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.  

அண்மையில் முடிவுற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் சம்பியன் பட்டம் வென்ற பிலவ் கண்டி அணிக்காக 4 போட்டிகளில் மாத்திரம் துஷ்மந்த சமீர விளையாடியிருந்தார். எனினும், துரதிஷ்டவசமாக தோள்பட்டை காயத்திற்கு உள்ளாகிய அவருக்கு எஞ்சிய போட்டிகளில் ஆட முடியாமல் போனது. 

இந்த நிலையில், இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண தொடருக்கு தயாராகும் வகையில் ஆசிய கிண்ணத் தொடரில் இருந்து துஷ்மந்த சமீர விலகியுள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக ஆசியக் கிண்ணத்துக்காக பெயரிடப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் மேலதிக வீரர்களில் இடம்பெற்ற வேகப் பந்துவீச்சாளர் கசுன் ராஜித இலங்கை அணியில் இணைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

இலங்கை அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளராக துஷ்மந்த சமீர விளங்கினாலும், அண்மைக்காலமாக தொடர்ந்து உபாதைகளுக்கு முகங்கொடுத்து வருவது இலங்கை அணிக்கு மிகப் பெரிய பின்னடைவைக் கொடுத்துள்ளது. இறுதியாக கடந்த ஜுன் மாதம் ஜிம்பாப்வேயில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் ஆரம்பமாவதற்கு முன் நடைபெற்ற பயிற்சிப் போட்டிகளில் ஆடிய அவர், அதன்பிறகு நடைபெற்ற வலைப் பயிற்சியின் போது உபாதைக்குள்ளாகினார். இதனால் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் இருந்து வெளியேறினார்.   

கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரின் போது உபாதைக்குள்ளாகிய துஷ்மந்த சமீர, உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறினார். இதன் காரணமாக, 2022 ஒக்டோபர் மாதம் முதல் இலங்கை அணி விளையாடிய 32 போட்டிகளில் 30 போட்டிகளில் அவர் விளையாடவில்லை. தற்போது மீண்டும் உபாதைக்குள்ளாகி ஆசியக் கிண்ணத்தையும் தவறவிடவுள்ளார்.   

இதனிடையே, இம்முறை LPL தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியின் போது பிலவ் கண்டி அணியை வழிநடத்திய வனிந்து ஹஸரங்கவிற்கு வலது தொடை தசையில் காயம் ஏற்பட்டது. எவ்வாறாயினும், குறித்த போட்டியில் காயத்துடன் ஆடிய அவர், பிலவ் கண்டி அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். ஆனாலும், தேர்வாளர்களின் கோரிக்கைக்கு அமைய LPL இறுதிப் போட்டியில் அவர் விளையாடவில்லை 

இந்த ஆண்டு LPL தொடரில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என சகலதுறையிலும் பிரகாசித்த வனிந்து ஹஸரங்க, தொடர் நாயகன் உள்ளிட்ட 4 முக்கிய விருதுகளை வென்றதுடன், அவர் தலைமையிலான பிலல் கண்டி அணி சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது 

எவ்வாறாயினும், இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண தொடருக்கு தயாராகும் வகையில் ஆசிய கிண்ணத் தொடரில் இருந்து வனிந்து ஹஸரங்க விலகியுள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக இந்த ஆண்டு ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான வலது கை லெக்ஸ் பின் சுழல் பந்துவீச்சாளர் துஷான் ஹேமந்த இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    

இதேவேளை, இம்முறை ஆசியக் கிண்ணத் தொடருக்காக பெயரிடப்பட்டுள்ள தசுன் ஷானக தலைமையிலான 15 பேர் கொண்ட அணியில் முன்னணி வீரர் குசல் பெரேரா சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இலங்கை அணியில் இடம்பெறாமல் இருந்த அவர், அண்மையில் நிறைவடைந்த எல்பிஎல் தொடரில் தம்புள்ள ஓரா அணிக்காக ஆடியிருந்தார். 

எவ்வாறாயினும், குசல் பெரேரா கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் அவர் ஆசியக் கிண்ணத்தில் விளையாடுவாரா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.     

அதே நேரம், இளம் சகலதுறை துனித் வெல்லாலகே மற்றும் வேகப் பந்துவீச்சாளர் லஹிரு குமார ஆகியோர் ஆஈpயக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த 2 வீரர்களும் கடந்த ஜுன் மாதம் ஜிம்பாப்வேயில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான இலங்கை குழாத்தில் இடம்பெறவில்லை.    

இந்த ஆண்டு ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் பங்களாதேஷை சந்திக்கவுள்ளது. இந்தப் போட்டி எதிர்வரும் 31ஆம் திகதி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது 

ஆசியக் கிண்ணத்துக்கான இலங்கை குழாம்  

தசுன் ஷானக (தலைவர்), பெத்தும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, தனன்ஜய டி சில்வா, சதீர சமரவிக்ரம, துஷான் ஹேமந்த, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, கசுன் ராஜித, லஹிரு குமார, டில்ஷான் மதுசங்க, மதீஷ பத்திரன 

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<