பாகிஸ்தான் மகளிர் T20 லீக்கில் களமிறங்கும் சமரி அத்தபத்து

219

பாகிஸ்தானில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்ற பாகிஸ்தான் சுபர் லீக் (PSL) தொடரின் ஓர் அங்கமாக அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகளிருக்கான T20 கண்காட்சி போட்டித் தொடரில் Super Women அணிக்காக இலங்கையின் அதிரடி வீராங்கனை சமரி அத்தபத்து விளையாடவுள்ளார்.

அமேசன் (Amazon) மற்றும் சுபர் வுமண் (Super Women) ஆகிய இரண்டு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டித் தொடரில் 3 ஆட்டங்கள் ராவல்பிண்டியில் இம்மாதம் 8, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.

இதில் 8ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ள முதலாவது கண்காட்சி T20 போட்டி சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாகவும், 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது கண்காட்சிப் போட்டி மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிஸ்மாஹ் மஹ்ரூப் அமேசன் அணியின் தலைவியாகவும், நிதா தார் சுபர் வுமண் அணியின் தலைவியாகவும் செயல்படவுள்ளனர்.

அத்துடன், இந்த 2 அணிகளிலும் பாகிஸ்தான் வீராங்கனைகளைப் போல சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் முன்னணி வீராங்கனைகளாக வலம் வருகின்ற 10 பேர் ஆடவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இலங்கையின் சமரி அத்தபத்து, பங்களாதேஷின் ஜஹனாரா அலம், நியூசிலாந்தின் லீஆ தகுஹு, இங்கிலாந்தின் லோரன் வின்பீல்ட் ஹில், மையா பொச்சியர் மற்றும் டெம்மி பியோமொண்ட் மற்றும் அவுஸ்திரேலியாவின் டெஸ் பிளிண்டொப் உள்ளிட்ட வீராங்கனைகளும் இந்த கண்காட்சி T20 போட்டியில் விளையாடவுள்ளனர்.

இதில் இந்தியாவில் தற்போது நடைபெற்று வருகின்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இடம்பிடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியும், உலகின் பல்வேறு T20 லீக் தொடர்களில் ஆடிய அனுபவத்தைக் கொண்டவருமான சமரி அத்தபத்து, நிதா தார் தலைமையிலான சுபர் வுமண் அணிக்காக விளையாடவுள்ளார்.

இதேநேரம், குறித்த இரு அணிகளுக்கும் 36 வீராங்கனைகள் பெயரிடப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் இரு அணிகளாக சமமாக பிரிக்கப்பட்டு ஒரு போட்டியில், அணிகள் அதிகபட்சமாக 4 மற்றும் குறைந்தபட்சம் 3க்கு உட்பட்ட வெளிநாட்டு வீரர்களை விளையாடலாம்.

முன்னதாக பாகிஸ்தான் சுபர் லீக் தொடருடன் மகளிருக்கான சுபர் லீக் தொடரொன்றை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் சபை திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த முயற்சி எதிர்பார்த்தளவு வெற்றியைக் கொடுக்க தவறியது. எவ்வாறாயினும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் நான்கு அணிகள் பங்கேற்கும் மகளிருக்கான புதிய T20 லீக் தொடரொன்றை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<