விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த 47ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் 3ஆவது மற்றும் கடைசி நாளான நேற்றைய தினம் (26) தமிழ் பேசும் வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தி யிருந்ததுடன், ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியிருந்தனர்.
பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் மத்திய மாகாணம் சார்பில் போட்டியிட்ட சபியா யாமிக், போட்டியை 12.25 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர் வென்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
முன்னதாக நேற்றுமுன்தினம் நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட சபியா, வெள்ளிப் பதக்கத்தை வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதனிடையே, ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் மத்திய மாகாண வீரர் குமார் சண்முகேஸ்வரன் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் போட்டித் தூரத்தை நிறைவுசெய்ய 31 நிமிடங்களும் 37.43 செக்கன்களை எடுத்துக் கொண்டார்.
ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் தென் மாகாணத்தைச் சேர்ந்த சப்ரின் அஹமட் 16.08 மீட்டர் தூரம் பாய்ந்து வெண்கலப் பதக்கம் வென்றெடுத்தார். அண்மைக்காலமாக உபாதைக்குள்ளாகியிருந்த அவர், நீண்ட இடைவெளியின் பிறகு தேசிய மட்டப் போட்டியொன்றில் வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.
இதேவேளை, 110 மீட்டர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட கிழக்கு மாகாண வீரர் ஏ.என்.எம் நாசிக் (15.53 செக்.) 8ஆவது இடத்தைப் பிடித்தார்.
- கோலூன்றிப் பாய்தலில் யாழ். வீராங்கனை டக்சிதா புதிய சாதனை
- ஜனிந்துவின் வரலாற்று சாதனை; பதக்கங்களை அள்ளிய தமிழ் பேசும் வீரர்கள்
- தேசிய மெய்வல்லுனரில் வடக்கிற்கு பெருமை சேர்த்தவர்கள்
ஓட்டுமொத்தத்தில் இம்முறை நடைபெற்ற 47ஆவது தேசிய விளையாட்டு போட்டிகளின் மெய்வல்லுனர் நிகழ்ச்சியில் தமிழ் பேசும் வீரர்கள் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை. அதிலும் குறிப்பாக அண்மைக்காலமாக தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்து வந்த கிழக்கு மாகாண மெய்வல்லுனர் அணி இந்த ஆண்டு மிகப் பெரிய பின்னடைவை சந்தித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி, இம்முறை தேசிய விளையாட்டுப் போட்டிகளின் மெய்வல்லுனர் நிகழ்ச்சியில் வட மாகாணம் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும், கிழக்கு மாகாணம் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்துக் கொண்டது.
இதில் வட மாகாணம் சார்பில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் நேநசராசா டக்சிதா தங்கப் பதக்கத்தையும், ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அருந்தவராசா புவிதரன் வெண்கலப் பதக்கத்தையும் வெல்ல, கிழக்கு மாகாணம் சார்பில் ஆண்களுக்கான தட்டெறிதலில் இஸட்.ரி.எம் ஆஷிக் வெண்கலப் பதக்கம் வென்றெடுத்தார்.
அதேபோல, மெய்வல்லுனர் போட்டியில் ஒட்டுமொத்த அணிகள் நிலையில் வட மாகாணம் 6ஆவது இடத்தையும், கிழக்கு மாகாணம் 8ஆவது இடத்தையும் பிடித்தது.
இதேவேளை, இம்முறை தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மலையகத்தைச் சேர்ந்த (மத்திய, ஊவா மாகாணம்) தமிழ் பேசும் வீரர்கள் பதக்கங்களை குவித்தனர். பெண்களுக்கான 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஆகிய போட்டிகளில் சபியா யாமிக், முறையே தங்கம், வெள்ளிப் பதக்கங்களை சுவீகரித்தார்.
ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டரில் குமார் சண்முகேஸ்வரன் வெள்ளிப் பதக்கத்தையும், சி. அரவிந்தன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
அதுமாத்திரமின்றி, வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த மொஹமட் சபான் ஆண்களுக்கான 200 மீட்டரில் வெள்ளிப் பதக்கத்தையும், தென் மாகாணத்தைச் சேர்ந்த சப்ரின் அஹமட் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
எனவே, இம்முறை நடைபெற்ற 47ஆவது தேசிய விளையாட்டு போட்டிகளின் மெய்வல்லுனர் நிகழ்ச்சியில் தமிழ் பேசும் வீரர்கள் 2 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்தனர்.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<