உசைன் போல்டுக்கு கொரோனா தொற்று

201

ஒலிம்பிக் சம்பியனான அதிவேக ஓட்ட வீரர் உசைன் போல்டுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து நட்சத்திர கால்பந்து வீரர் ரஹீம் ஸ்டர்லிங் உட்பட விருந்தினர்களுடன் ஜமைக்காவில் தனது 34 ஆவது பிறந்த நாளை கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடி ஒருசில தினங்களிலேயே அவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. 

>>கால்பந்தில் நியாயமான வாய்ப்பு கிடைக்கவில்லை – உசைன் போல்ட்<<

வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கும் உசைன் போல்ட் சுய தனிமைப்படுத்தலில் கழிக்கவுள்ளதாக ஜமைக்காவின் வானொலி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

சில நாட்களுக்கு முன்னர் வைரஸ் சோதனை மேற்கொண்டபோதும் அவருக்கு நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமையே (23) உறுதி செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  

எனினும் போல்டின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பெரும் புள்ளிகள் பலரும் பங்கேற்றுள்ளனர். 

மன்செஸ்டர் சிட்டி நட்சத்திரம் ரஹீம் ஸ்டர்லிங், பயர் லெவர்குசன் அணி முன்கள வீரர் லியோ பெய்லி மற்றும் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயில் ஆகியோர் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றிருப்பதாக நம்பப்படுகிறது. 

>>பார்சிலோனா வீரருக்கு கொரோனா தொற்று<<

எனினும் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கில் இருந்து மன்செஸ்டர் சிட்டி வெளியேறிய நிலையில் ரஹீம் ஸ்டர்லிங்கின் இந்த கால்பந்து பருவம் முடிவுக்கு வந்தது. 2020/21 பருவத்தை தாமதிப்பதற்கு அந்தக் கழகம் அனுமதி அளித்துள்ளது.   

போல்ட் தமது பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோ காட்சிகளில் அவர் சிரித்தபடி விருந்தினர்களுடன் நடனமாடுவதை காணமுடிகிறது. தனது பெண் குழந்தையான ஒலிம்பியாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தமது சிறந்த பிறந்த நாள் கொண்டாட்டம் என்று பதிவிட்டிருந்தார்.   

எனினும் அவர் நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டிருந்தாரா என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. அவர் தனிமைப்படுத்தல் செயல்முறையை மேற்கொண்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.  

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கும் உலகின் முன்னணி விளையாட்டு வீரர்களில் ஒருவராக உசைன் போல்ட் உள்ளார். இதற்கு முன் டென்னிஸ் நட்சத்திரம் நொவக் ட்ஜோவிக்கிற்கு கடந்த ஜூனில் நோய்த் தொற்று ஏற்பட்டதோடு பல கால்பந்து நட்சத்திரங்களும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகினர்.  

>>கொரோனா வைரஸிலிருந்து தப்பித்த ஆர்ச்சர் பயிற்சிகளில்<<

ஜமைக்காவில் 1,413 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 16 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் அண்மைய தினங்களில் நோய்த் தொற்று வேகமடைந்துள்ளது. 

கடந்த ஜூலை மாதம் முழுவதும் அங்கும் 174 பேரிடமே கொரோன அடையாளம் காணப்பட்ட நிலையில் கடந்த நான்கு நாட்களுக்குள் மாத்திரம் 267 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் உலக சாதனைக்கு சொந்தக்காரரான போல்ட் எட்டு ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். உபாதைகளை அடுத்து 2017 ஆம் ஆண்டு தடகளப் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<