நிந்தவூரினைச் சேர்ந்த அஸ்லம் சஜா இந்திய கபடி தொடரில்

80
 

இந்தியாவின் ப்ரோ கபடி லீக் தொடரின் ஒன்பதாவது பருவகாலத்திற்கான போட்டிகளில், பெங்கால் வோரியர்ஸ் அணிக்காக ஆடும் சந்தர்ப்பத்தை இலங்கையினைச் சேர்ந்த அஸ்லம் சஜா பெற்றிருக்கின்றார்.

>> மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற நெத்மி ; இறுதிப் போட்டியில் சாரங்கி!

அதன்படி கிழக்கு மாகாணத்தின் நிந்தவூர் பிரதேசத்தினை சேர்ந்த அஸ்லம் சஜா, பெங்கால் வோரியர்ஸ் அணிக்காக இந்திய நாணயப்படி 10 இலட்ச ரூபாய்களுக்கு (இலங்கை நாணயப்படி சுமார் 4.5 மில்லியன் ரூபாய்களுக்கு) ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்லம் சஜா 2022ஆம் ஆண்டுக்கான பங்கபந்து கிண்ண சர்வதேச கபடி தொடரில் இலங்கை தேசிய கபடி அணியின் உபதலைவராக செயற்பட்டிருந்ததோடு, நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட வீரராக தொடர்ச்சியாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற உலக கனிஷ்ட கபடி சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய அஸ்லம் சஜா, 2018ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை கபடி அணியில் இடம்பிடித்து விளையாடியிருந்தார்.

இறுதியாக, கடந்த ஆண்டு நடைபெற்ற பங்கபந்து கபடி சம்பியன்ஷிப்பிலும் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், குறித்த போட்டித் தொடரில் சிறந்த Raider இற்கான விருதையும் தட்டிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் அஸ்லம் சஜா  கல்முனை மதீனா பாடசாலையின் விளையாட்டுப் பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்றமையும் சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாகும்.

>> பெட்மிண்டன், கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிகளில் வெற்றிகளை குவித்த இலங்கை!

இந்திய பிரீமியர் லீக் T20 கிரிக்கெட் போட்டிகளை ஒத்தவிதத்தில், இந்தியாவில் கபடி விளையாட்டுக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ப்ரோ கபடி லீக் தொடரின் ஒன்பதாவது பருவகாலத்திற்கான போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் விளையாட்டு செய்திகளுக்கு <<