பார்சிலோனா வீரருக்கு கொரோனா தொற்று

233

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், பார்சிலோனா கழகத்தின் பெயர் வெளியிடப்படாத வீரர் ஒருவருக்கு கொவிட்–19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் போட்டிப் பருவத்திற்கு முன்னரான பயிற்சியில் பங்கேற்ற ஒன்பது வீரர்களில் ஒருவருக்கே நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு எந்த நோய் அறிகுறியும் வெளிப்படவில்லை என்றும் அவர் தற்போது தமது வீட்டில் தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளார் என்றும் பார்சிலோனா கழகம் அறிவித்துள்ளது.

>>FIFA உலகக் கிண்ண, ஆசியக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஒத்திவைப்பு

இந்நிலையில் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் போட்டிக்காக போர்த்துக்கலின் லிஸ்போன் நகரை நோக்கி இன்று (12) பயணித்த பார்சிலோனா அணியின் எந்த மூத்த வீரர்களுடனும் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர் தொடர்புபடவில்லை என்று அந்தக் கழகம் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டிகள் நடைபெறவிருக்கும் நிலையில் அதில் பங்கேற்கும் அட்லெடிகோ மெட்ரிட்டில் இரு வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று வலென்சியா கழகத்தின் இருவரிடமும் இந்த வாரத்தில் நோய்த் தொற்று அடையாளம் காணப்பட்டது.

அன்கெல் கெரே மற்றும் காயமடைந்திருக்கும் பின்கள வீரர் சிமே விஸ்ஜல்கோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அட்லெடிகோ மெட்ரிட் தனது இறுதிக் கட்ட பயிற்சிகளை ஒத்திவைத்ததோடு லிஸ்போன் பயணத்தையும் ஒருநாள் ஒத்திப்போட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>10 வீரர்களுக்கு கொரோனா: பிரேசிலில் தடைப்பட்ட கால்பந்து போட்டி

கொரோனா வைரஸ் பொருந்தொற்று காரணமாக ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கின் இறுதி எட்டு அணிகளுக்குமான போட்டிகள் ஒரே கட்ட போட்டியாக லிஸ்போனில் மூடிய அரங்கில் நடைபெறவுள்ளது.

இதில் பார்சிலோனா அணி வரும் வெள்ளிக்கிழமை (14) பெயர்ன் முனிச்சை எதிர்கொள்ளவுள்ளதோடு அதற்கு முன்னர் அட்லெடிகோ மெட்ரிட் மற்றும்  RB லிப்சிக் அணிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நோய்த் தொற்று உள்ளாகி இருக்கும் பார்சிலோனா வீரருடன் தொடர்புபட்ட அனைவர் மீதும் மருத்துவ சோதனை நடத்தப்படவுள்ளதாக அந்தக் கழகம் குறிப்பிட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<