ICC சிறந்த வீரர் விருதிற்கு முதல் தடவை அமெரிக்க வீரரின் பெயர்

ICC Player of the Month - September

369

செப்டம்பர் மாதத்துக்கான ஐ.சி.சி இன் சிறந்த வீரர் விருதுக்காக பங்களாதேஷின் நஸும் அஹ்மட், நேபாளத்தின் சந்தீப் லமிச்சேன் மற்றும் அமெரிக்காவின்  ஜஸ்கரன் மல்கோத்ரா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) சார்பில் இந்த ஆண்டு முதல், ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீர வீராங்கனைக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

இதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் சிறப்பாக செயல்பட்ட மூன்று வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.

இதில் அமெரிக்கா அணிக்காக விளையாடி வருகின்ற இந்திய வம்சாவளி வீரரான 31 வயதுடைய ஜஸ்கரன் மல்கோத்ரா, ஓமானில் கடந்த மாதம் நடைபெற்ற பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான ஐசிசி இன் உலகக் கிண்ண லீக் 2ஆவது பிரிவு போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி புதிய சாதனை படைத்தார்.

இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த 4ஆவது வீரரக இடம்பிடித்தார்.

அதுமாத்திரமின்றி, ஐசிசியின் உலகக் கிண்ண லீக் தொடரில் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர், 261 ஓட்டங்களைக் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சண்டிகரில் பிறந்த இவர், ஹிமாச்சல பிரதேச 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடி உள்ளார்.

இவரை தவிர, கடந்த மாதம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான T20i தொடரில் பந்துவீச்சில் மிரட்டிய பங்களாதேஷின் நஸும் அஹமட், 8 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன், அந்த அணிக்கு தொடர் வெற்றியைப் பெற்றுக்கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

இதில் நான்காவது T20i போட்டியில் 10 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி தனது அதிசிறந்த T20i பந்துவீச்சுப் பிரதியையும் பதிவுசெய்தார்.

இதனிடையே, இவர் கடந்த மாதம் நடைபெற்ற ஐ.சி.சி இன் உலகக் கிண்ண லீக் 2ஆவது பிரிவு போட்டியில் 18 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தினார். இதில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான போட்டியில் 11 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தியிருந்தார்.

இதேவேளை, சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் இங்கிலாந்தின் ஹீதர் நைட், சார்லீ டீன் மற்றும் தென்னாபிரிக்காவின் லிசெல்லி லீ ஆகிய மூவரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இதில் இருந்து விருதுக்குரிய வீர வீராங்கனையை முன்னாள் வீரர்கள், பத்திரிகையாளர்கள், ஒளிபரப்பு நிறுவனங்கள் உள்ளிட்டோர் அடங்கிய ஐ.சி.சி வாக்கு அகடமியினர் மற்றும் ரசிகர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<