கால்பந்தில் நியாயமான வாய்ப்பு கிடைக்கவில்லை – உசைன் போல்ட்

204

தொழில்முறை கால்பந்து வீரராகும் எதிர்பார்ப்பு தோல்வி அடைந்திருக்கும் நிலையில் உள்ள அதிவேக ஓட்ட வீரர் உசைன் போல்ட், தமது திறமையை நிரூபிக்க அவுஸ்திரேலிய A லீக் தொடரில் தமக்கு நியாயமான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று குறைகூறியுள்ளார்.

இனி வேண்டுமென்று இருமினாலும் சிவப்பு அட்டை

எட்டு முறை ஒலிம்பிக் சம்பியனான ஜமைக்காவைச் சேர்ந்த போல்ட் மெய்வல்லுனர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின், கால்பந்து வீரராகும் தனது சிறுவயதுக் கனவை நிறைவேற்றும் எதிர்பார்ப்புடன் 2018 இல் சென்ட்ரல் கோஸ்ட் மரினர்ஸ் கால்பந்து கழகத்தில் இணைந்தார்.  

போட்டி பருவத்திற்கு முன்னர் இடம்பெற்ற நட்புறவுப் போட்டி ஒன்றில் அவர் இரண்டு கோல்களை பெற்றது உலகெங்கும் அவதானத்தை ஈர்த்திருந்தது.  

எனினும் அவரது திறமை பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக அயர்லாந்து முன்னாள் முன்கள வீரர் அன்டி கியோப், அவரது ஆட்டத்தை விமர்சித்திருந்தார். இந்நிலையில் ஒப்பந்தம் ஒன்றை பெறுவதற்கான பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது.   

இதனிடையே அவுஸ்திரேலியாவின் சென்னல் நைன் தொலைக்காட்சி வலையமைப்புக்கு போல்ட் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “எனக்கு நியாயமான வாய்ப்பு ஒன்று கிடைக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். 

எவ்வாறு செய்ய வேண்டும் என்று நான் நினைத்ததை என்னால் செய்ய முடியவில்லை. என்றாலும் அதில் நான் சிறந்து இருப்பதாக நான் நினைக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் மெய்வல்லுனர் அரங்கில் உசைன் போல்ட்?

“நீங்கள் தவறவிட்ட விடயங்களில் இது ஒன்றாகும். அதில் இருந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் உலக சாதனைக்குச் சொந்தக்காரரான 33 வயதுடைய போல்ட் இதற்கு முன்னதாக ஜெர்மனி, தென்னாபிரிக்கா மற்றும் நோர்வே கழகங்களிலும் தொழில்முறை கால்பந்து வீரராக முயற்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமது விளையாட்டு வாழ்வை மாற்றிக்கொள்ள முயற்சித்தது பற்றி வருந்துகிறீரா என்ற கேள்விக்கு, “இது வெற்றியளிக்காதபோது சில நேரங்களில் அது பற்றி நான் எண்ணி இருக்கிறேன். என்றாலும் அதனைச் செய்ய நான் விரும்பினேன். ஏனென்றால் கால்பந்து என்பது நான் விரும்பும் ஒன்று” என்று பதிலளித்தார்.

“உண்மையில் நான் சாதிக்க நினைத்தது அவ்வாறு நிகழவில்லை. ஆனால், நான் கூறியதுபோல், கடந்து செல்ல வேண்டிய ஒன்றாக அது உள்ளது” என்று போல்ட் கூறினார். 

மகளுக்கு மின்னல் என பெயரிட்ட உசைன் போல்ட்

போல்ட் மற்றும் அவரது காதலியான கசி பென்னட்டிற்கு இந்த ஆண்டு ஆரம்பத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. கால்பந்து வீரராக முடியாதபோதும் தாம் திருப்தியாக இருப்பதாக போல்ட் தெரிவித்தார்.

“தற்போது ஒரு தந்தையாக இருப்பது வித்தியாசமாக உள்ளது. அது சாதித்த உணர்வை தருகிறது. எனவே நான் மகிழ்ச்சியாக இருப்பதோடு இந்தப் பயணத்தைத் தொடர உற்சாகத்துடன் இருக்கிறேன்” என்று அந்தத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் போல்ட் மேலும் தெரிவித்தார். 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<