மார்ச் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரர் யார்?

115
Bhuvneshwar Kumar

சர்வதேச கிரிக்கெட் சபையின், மாதாந்த சிறந்த கிரிக்கெட் வீரர்களை தெரிவுசெய்யும் முகமாக  இந்தியாவின் புவனேஷ்வர் குமார், ஜிம்பாப்வேயின் சீன் வில்லியம்ஸன் மற்றும் ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

மாதாந்தம் சிறப்பாக பிரகாசிக்கும் வீரர்களை கௌரவப்படுத்தும் நோக்கில், சர்வதேச கிரிக்கெட் வாரியம் மாதத்துக்கான சிறந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றது.

>> செய்த தவறுகளை திருத்த எதிர்பார்க்கும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

பத்திரிகையாளர்கள், முன்னாள் வீரர்கள், ஒளிப்பரப்பாளர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவொன்று மாதத்துக்கான சிறந்த வீரர்களை தெரிவுசெய்வார்கள் என்பதுடன், ரசிகர்களின் 10 சதவீத வாக்கு பதிவும் வீரர்களை தெரிவுசெய்ய உதவுகிறது.

அந்தவகையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷீட் கான் இந்த மாதத்தின் சிறந்த வீரர்களில் ஒருவராக பரிந்ரைசெய்யப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி தோல்வியுற்ற போதும், ரஷீட் கானின் அபார பந்துவீச்சின் உதவியுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்தியது.

அதேநேரம், இதற்கு அடுத்தப்படியாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 3-0 என வெற்றிபெற்றதுடன், இந்த மூன்று போட்டிகளில் ரஷீட் கான் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.

அதேநேரம், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 T20I போட்டிகளில் விளையாடிய இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் இம்மாதத்தின் சிறந்த வீரர்கள் பட்டியலில் ஒருவராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். 3 ஒருநாள் போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர், T20I போட்டிகளில் சிறந்த ஓட்ட விகிதத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அத்துடன், இந்திய அணி தொடரை கைப்பற்றுவதற்கும் முக்கிய காரணமாக இருந்தார்.

இவர்கள் இருவருக்கும் அடுத்தப்படியாக ஜிம்பாப்வே அணியின் ஷீன் வில்லியம்ஸ் மூன்றாவது வீரராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர், டெஸ்ட் தொடரில் 264 ஓட்டங்களை குவித்ததுடன், 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். அதேநேரம் T20I தொடரில் 128.54 என்ற ஓட்ட வேகத்தில் 45 ஓட்டங்களையும் இவர் பெற்றிருந்தார். இதன் காரணமாக இவர், இம்மாதத்தின் சிறந்த வீரர்களில் ஒருவராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சிறந்த மகளிர் வீராங்கனைக்காக இந்தியாவின் ராஜேஸ்வரி கயகவாட், தென்னாபிரிக்காவின் லிஷில் லீ மற்றும் இந்தியாவின் பூனம் ரௌட் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<