9ஆவது ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரின் 42ஆவது போட்டி நேற்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்றது.

டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரயிசஸ் ஹைதராபாத் அணி ஜே.பி டுமினி தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைவர் ஜே.பி டுமினி முதலில் சன் ரயிசஸ் ஹைதராபாத் அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்புவிடுத்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சன் ரயிசஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 146 ஓட்டங்களைப் பெற்றது. சன் ரயிசஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான டேவிட் வோர்னர் 30 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 46 ஓட்டங்களையும், ஷிகர் தவான் 37 பந்துகளில் 34 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்கள் இருவரைத் தவிர கேன் விலியம்சன் 27 ஓட்டங்களைப் பெற்றார்.

குசல் பெரேராவிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

மற்ற வீரர்கள்  சொற்ப ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தனர்.டெல்லி அணியின் பந்துவீச்சில் அமித் மிஸ்ரா மற்றும் நேதன் கொல்டர் நைல் ஆகியோர்  தலா இரண்டு விக்கட்டுக்களைக் கைப்பற்றினர்.

இதன் பிறகு 147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் டெல்லி அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் களமிறங்கினார்கள். ஆரம்பத்  துடுப்பாட்ட வீரர் அகர்வால் ஆரம்பத்திலே 10 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தாலும், டி கொக் நிதானமாக விளையாடி ஓட்டங்களைப் பெற்றார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய கருன் நாயர் 20 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

பின்னர் நடுவரின் தவறான கணிப்பால் சிறப்பாக ஆடி வந்த டி கொக் துரதிர்ஷ்டவசமான முறையில் 31 பந்துகளில் 44 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார். இதனையடுத்து பாண்ட்டும், சாம்சனும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் சீராக ஓட்டங்களைப் பெற்றனர்.

இதனால் டெல்லி அணி எளிதில் வெற்றி இலக்கை எட்டியது. இறுதியில்  18.1 ஓவர்களில் 3 விக்கட்டுகள் இழப்பிற்கு 150 ஓட்டங்களைப் பெற்று டெல்லி அணி  வெற்றியை ருசித்தது. சாம்சன் 26 பந்துகளில் 34 ஓட்டங்களோடும்  பாண்ட்  26 பந்துகளில் 39 ஓட்டங்களோடும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சன்  ரயிசஸ் அணியின் பந்துவீச்சில் ஹென்ரிக்ஸ் 2 விக்கட்டுகளை வீழ்த்தினார். இந்தப்  போட்டியின் ஆட்ட நாயகனாக டெல்லி அணியின் க்றிஸ் மொரிஸ் தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்