இங்கிலாந்தை வீழ்த்தி உலகக் கிண்ணத்தில் 3ஆவது இடத்தை பிடித்த பெல்ஜியம்

268
Image Courtesy - FIFA

உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை தீர்மானிக்கும் போட்டியில் இங்கிலாந்து அணியை பெரிதாக நெருக்கடி இன்றி பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் பெல்ஜியம் அணி தனது உலகக் கிண்ண வரலாற்றில் சிறந்த பெறுபேறை பெற்றுக்கொண்டது. அந்த அணி 1986 உலகக் கிண்ணத்தில் நான்காவது இடத்தை பிடித்ததே இதுவரை சிறந்ததாக இருந்தது.

பெல்ஜியத்தை வீழ்த்தி பிரான்ஸ் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி

மறுபுறம் 1966 உலகக் கிண்ணத்தை வென்ற பின் உலகக் கிண்ணத்தில் தனது சிறந்த நிலையை பெற போராடிய இங்கிலாந்து அணி 1990 ஆம் ஆண்டு போன்றே மீண்டும் நான்காவது இடத்திற்கே தள்ளப்பட்டது.

அரையிறுதிப் போட்டிகளில் பிரான்ஸ் மற்றும் குரோஷியாவிடம் தோற்று உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை தவறவிட்ட சோகத்துடனேயே செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து அணிகள் சனிக்கிழமை (14) களமிறங்கின. ஞாயிற்றுக்கிழமை உலகக் கிண்ண இறுதிப் போட்டி நடைபெறவிருக்கும் நிலையில் அரங்கில் ஆசனங்கள் பல காலியாகி இருந்தன.

இந்நிலையில் போட்டி ஆரம்பித்து 4 ஆவது நிமிடத்திலேயே இங்கிலாந்து பாதுகாப்பு அரண் முறிந்ததை பெல்ஜியம் வீரர்கள் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டனர். பந்தை வேகமாக கடத்தி வந்த பெல்ஜியம் வீரர்கள் கடைசியில் நாசர் சாட்லி எதிரணி பெனால்டி எல்லைக்கு அருகில் இருந்து தோமஸ் மியுனியரிடம் வழங்க அவர் வேகமாக உதைத்து கோலாக மாற்றினார்.

பிரான்ஸிடம் தோற்ற அரையிறுதிப் போட்டியில் இடைநிறுத்தப்பட்ட மியுனியர் பெல்ஜியம் அணிக்கு வந்தது அந்த அணி முழுமை பெற்றதாக அமைந்தது.

மியுனியர் இம்முறை உலகக் கிண்ண போட்டியில் பெல்ஜியம் அணிக்காக கோல் பெறும் 10ஆவது வீரர் ஆவார். இதன் மூலம் உலகக் கிண்ண தொடர் ஒன்றில் ஒரு அணியில் அதிக வீரர்கள் கோல்பெற்ற சாதனையை பிரான்ஸ் (1982) மற்றும் இத்தாலியுடன் (2006) பெல்ஜியம் பகிர்ந்துகொண்டது.  

இதனைத் தொடர்ந்து பெல்ஜியம் அணி முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்தியதோடு இங்கிலாந்து வீரர்கள் சில வாய்ப்புகளை பெற்றபோதும் அதனை கோலா மாற்றும் சாமர்த்தியம் இல்லாமல் போனது. இங்கிலாந்து வீரர்கள் கோலை நோக்கி உதைத்த சில பந்துகள் எந்த நெருக்கடியும் இன்றி பெல்ஜியம் கோல்காப்பாளரின் கைகளுக்கு சென்றது.

மறுபுறம் பெல்ஜியம் அணியின் முன்கள வீரர் ரொமெலு லுகாகு முதல் பாதியில் சில வாய்ப்புகளை பெற்றபோதும் உலகக் கிண்ணத்தின் ஆரம்பத்தில் அவரிடம் இருந்த வேகம் தெரியவில்லை. ஆனால் அணித்தலைவர் ஏடன் ஹசார்ட் அடிக்கடி இங்கிலாந்து பின்கள வீரர்களுக்கு நெருக்கடி கொடுப்பதை காண முடிந்தது.

முதல் பாதி: பெல்ஜியம் 1 – 0 இங்கிலாந்து

இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்த விரைவிலேயே பெல்ஜியம் அணிக்கு மற்றொரு கோலை புகுத்துவதற்கு லுகாகுவுக்கு பொன்னான வாய்ப்பொன்று கிடைத்தது. எனினும் பெனால்டி எல்லைக்குள் வைத்து பரிமாற்றப்பட்ட பந்தை அவர் நழுவவிட்டார். இதனைத் தொடர்ந்து 60 ஆவது நிடத்தில் லுகாகுவுக்கு பதில் வீரராக டெரிஸ் மார்டன் களமிறங்கினார்.

இங்கிலாந்தின் கனவை தகர்த்து குரோஷியா முதல் முறை உலகக் கிண்ண இறுதியில்

மத்தியகள வீரரான கெவின் டி ப்ருய்ன் கோலை நோக்கி அடித்த பந்தை இங்கிலாந்து கோல்காப்பாளர் ஜோர்டன் பிக்போர்ட் ஒற்றைக்கையால் அபாரமாக தட்டிவிட்டார்.  எனினும் இங்கிலாந்து அணிக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பொன்றை பொல்ஜியம் பின்கள வீரர் கோல்கம்பத்திற்கு மிக அருகில் வைத்து தட்டிவிட்டார்.

இந்நிலையில் போட்டியின் 82 ஆவது நிமிடத்தில் செயற்பட்ட பெல்ஜிய அணித்தலைவர் ஹசார்ட் பொனால்டி எல்லையின் இடது மூலையில் இருந்து கெவின் டி ப்ருய்ன் கடத்திய பந்தை வேகமாக முன்னே கொண்டு சென்று வலைக்குள் புகுத்தினார். போட்டியில் மேலும் ஏழு நிமிடங்களே எஞ்சியுள்ள நிலையில் இந்த கோல் பெல்ஜியத்தின் வெற்றியை உறுதி செய்தது.

ஹசார்ட் கடைசியாக பெல்ஜியத்திற்காக விளையாடிய 25 போட்டிகளில் 25 கோல்கள் பெற உதவியுள்ளார். இதில் 12 கோல்கள் மற்றும் 13 உதவிகளை பெற்றுள்ளார்.

இங்கிலாந்து அணித் தலைவர் ஹெரி கேன் இந்த போட்டியில் அதிகம் சோபிக்கத் தவறியபோதும் உலகக் கிண்ணத்தில் அதிகபட்சம் 6 கோல்களை பெற்று தொடர்ந்து தங்கப் பாதணி போட்டியில் முன்னிலையில் உள்ளார்.

இந்த தோல்வியுடன் இங்கிலாந்து அணி உலகக் கிண்ண அரையிறுதி மற்றும் மூன்றாவது இடத்திற்கான போட்டியென அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோற்று ஏமாற்றம் அடைந்துள்ளது. அதேபோன்று அந்த அணி கடந்த ஐந்து போட்டிகளில் மூன்றில் தோற்றுள்ளது. இதற்கு முன்னர் மூன்று தோல்விகளை பெற இங்கிலாந்து அணி 28 போட்டிகளை எடுத்துக் கொண்டது.  

எவ்வாறாயினும் இங்கிலாந்து அணி உலகக் கிண்ணம் மற்றும் ஐரோப்பிய கிண்ணம் என இரண்டு பிரதான போட்டிகளையும் சேர்த்து அந்த அணி ஆடும் 100 ஆவது போட்டியாகவும் இது இருந்தமை குறிப்பிடத்தக்கது.  

முழு நேரம்: பெல்ஜியம் 2 – 0 இங்கிலாந்து

கொல் பெற்றவர்கள்

  • பெல்ஜியம் – தோமஸ் மியுனியர் 4′, ஏடன் ஹசார்ட் 82′

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க