செல்சி முகாமையாளர் பதவியிலிருந்து பிராங்க் லம்பார்ட் நீக்கம்

137
Image Courtesy - Getty Images

ப்ரீமியர் லீக் தொடரில் சமீக காலமாக செல்சி அணி வெளிக்காட்டி வரும் மோசமான பெறுபேறுகள் காரணமாக அவ்வணியின் முகாமையாளரான பிராங்க் லம்பார்ட்டை பதவியிலிருந்து நீக்குவதற்கு செல்சி அணியின் நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

கடந்த  2019 ஜூன் மாதத்தில் செல்சி அணியின் நிர்வாகம், செல்சி அணியின் முன்னாள் முகாமையாளரான  மரியோ சாரியை நீக்கிவிட்டு அப்பதவிக்கு அதேமாதமே  முன்னாள் இங்கிலாந்து மற்றும் செல்சி அணியின் வீரரான லம்பார்ட்டை நியமித்தது.

>>இலங்கையில் ஆரம்பமாகவுள்ள சுப்பர் லீக் கால்பந்து தொடர்

3 வருடகால ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கபட்ட லம்பார்ட், தனது முதல் பருவகாலத்திலேயே, செல்சியை ப்ரீமியர் லீக் தரவரிசையில் நான்காம் இடத்திற்கும், FA கப் தொடரின் இறுதிப் போட்டிக்கும் வழி நடத்தி சென்றார்.

செல்சி அணியின் ஜாம்பவான்களில் ஒருவராக கருதப்பட்ட லம்பார்ட், அவ்வணிக்காக 2001 இலிருந்து 2014 வரை 648 போட்டிகளை விளையாடி 211 கோல்களை அடித்துள்ளார். இன்று வரை செல்சிக்காக இவரே அதிக கோல்கள் அடித்த வீரராக பார்க்கப்படுகிறார். தான் வீரராக விளையாடிய 13 பருவகாலங்களில் 4 ப்ரீமியர் லீக் கிண்ணங்கள் மற்றும் 2012 இல் பெற்ற சம்பியன்ஸ் கிண்ணம் உள்ளடங்கலாக 11 கிண்ணங்களை செல்சி பெறுவதற்கு லம்பார்ட் முக்கிய காரணமாக இருந்தார்.

வீரராக ஓய்வு பெற்ற பின்னர் லம்பார்ட்,  2018-19 பருவக்காலத்தில் டேர்பி கவுண்டி கழகத்திற்கு முகாமையாளராக செயல்பட்டார். ஒரே ஒரு வருட கால முகாமைத்துவ அனுபவத்தினை பெற்ற லம்பார்ட்  அடுத்த வருடமே ப்ரீமியர் லீக்கின் பெரிய கழகங்களின் ஒன்றான செல்சிக்கு முகாமையாளராக நியமிக்கப்பட்டது அச்சமயத்தில் அனைவராலும் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது.

எனினும் அவரது சிறந்த கன்னி முகாமைத்துவ பருவகாலம், இரண்டாம் பருவகாலத்திலும் தொடரவில்லை. கடந்த மாதம் லீட்ஸ் அணிக்கெதிராக 3க்கு 1 என வென்று, ப்ரீமியர் லீக் தரவரிசையில் முதலிடத்தை பிடித்ததன் பின்பு, அடுத்து நடந்த 8 லீக் போட்டிகளில் 5 தோல்விகளை சந்தித்து, தற்போது ப்ரீமியர் லீக் தரவரிசையில் 9ஆம் இடத்திலிருக்கிறது செல்சி.

>>Video – ANFIELD இல் முடிந்தது LIVERPOOL இன் இராச்சியம் | FOOTBALL ULAGAM

இந்த பருவகால ஆரம்பத்தில் கிட்டத்தட்ட 200மில்லியன் பவுண்ட்களுக்கு மேல் செலவழித்து பல்வேறு புதிய வீரர்களை வாங்கினார் லம்பார்ட். எனினும் எந்த வீரர்களும் சொல்லுமளவிற்கு எந்த போட்டிகளும் பெரிதாக இதுவரையில் சோபிக்கவில்லை.

இந்த முடிவு குறித்து செல்சி அணி வெளியிட்ட அறிக்கையில், “இது மிகவும் கடினமான முடிவு ஒன்று. லம்பார்ட்டின் முகமைத்துவத்தில் அணி அடைந்த நல்ல மட்டங்களுக்கு நாம் எப்போதும் நன்றியுடன் இருப்போம். ஆனால், சமீபகாலமாக அணியின் பெறுபேறுகள், தரவரிசையில் இருக்கும் இடமும் எமது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. லம்பார்ட்டை போன்ற கழக ஜாம்பவானை நாம் இழப்பது என்பது கஷ்டமான ஒன்று தான், ஆனால் நீண்ட ஆலோசனைக்கு பிறகு இந்த பருவகாலத்தில் எமது பெறுபேறுகளில் மாற்றம் வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இந்த முடிவை எடுத்தோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

42 வயதான லம்பார்ட்டின் பதவி வெற்றிடத்திற்கு ஜேர்மன் நாட்டை சேர்ந்த, பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் முன்னாள் முகாமையாளராக தோமஸ் டுச்செல்லை செல்சி அணி எதிர்வரும் காலங்களில் நியமிக்கலாம் என பேசப்படுகிறது.

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<