இலங்கையை வலுப்படுத்திய மஹேலவின் ஐந்து உபாயங்கள்

ICC T20 World Cup – 2021

198

ஐசிசி T20 உலகக் கிண்ணத்தில் சதம் அடித்த ஒரே இலங்கை வீரர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்ட மஹேல ஜயவர்தன, தற்போது ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெற்று T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில், மஹேல ஜயவர்தனவின் ஆலோசகர் பணியானது, நெதர்லாந்து அணிக்கு எதிராக நேற்று (22) சார்ஜாவில் நடைபெற்ற இலங்கை அணியின் தகுதிச் சுற்றின் கடைசி லீக் போட்டியுடன் நிறைவுக்கு வந்தது. இதனையடுத்து அவர் நாடு திரும்புவார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்தது.

முன்னதாக கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி இலங்கை அணியுடன் இணைவதற்கு முன், மஹேல ஜயவர்தன இந்தியக் பிரீமியர் லீக் (IPL) தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார்.

>> “மஹேலவின் வருகை இலங்கை அணிக்கு மிகப்பெரிய போனஸ்” – முரளி

அதற்கு முன் இங்கிலாந்தில் நடைபெற்ற அங்குரார்ப்பண The Hundred கிரிக்கெட் தொடரில் நொதர்ன் பிரேவ்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட அவர், அந்த அணிக்கு சம்பியன் பட்டம் வென்று கொடுக்கவும் முக்கிய காரணமாக இருந்தார்.

இதனிடையே, சுமார் நான்கு மாதங்களுக்கு கூடுதலாக உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் இருந்து வருகின்ற மஹேல, அதில் ஏற்பட்ட மனச்சோர்வு காரணமாக தற்போது இலங்கை அணியில் இருந்து வெளியேறி தனது குடும்பத்தாருடன் இணைந்துகொள்ள தீர்மானித்துள்ளார். இதற்கான அறிவிப்பை அவர் இலங்கை அணியுடன் இணைந்துகொள்வதற்கு முன்னரே இலங்கை கிரிக்கெட் சபைக்கும், தொழில்நுட்ப குழுவுக்கும் தெரியப்படுத்தியிருந்தார்.

”கடந்த ஜுன் மாதம் முதல் சுமார் 135 நாட்கள் தொடர்ச்சியாக நான் உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் இருந்துள்ளேன். தற்போது அதிலிருந்து வெளியேறுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்த விடயம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட்டின் தொழில்நுட்ப குழுவிடமும் கலந்துரையாடினேன். எனவே, நான் அணியிலிருந்து வெளியேறினாலும் தொடர்ந்து என்னுடைய உதவியை இலங்கை அணிக்கு வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளேன்.

ஒரு தந்தையாக இருப்பதால், என்னுடைய நிலைமையை அனைவராலும் புரிந்து கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன், நான் என் மகளையும், குடும்பத்தாரையும் நீண்ட நாட்களாகப் பார்க்கவில்லை. எனவே, தற்போது நிச்சயம் நான் வீடு திரும்ப வேண்டும் என நினைக்கிறேன்” என்று T20 உலகக் கிண்ணத்துக்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள இலங்கை ஊடகவியலாளர்களிடம் மஹேல ஜயவர்தன இவ்வாறு தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், மஹேல இலங்கை அணியுடன் இணைந்துகொள்ள முன் இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் வியூகங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் கடந்த மாதம் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடருக்கு முந்தைய குழு திட்டமிடல் கூட்டத்தில் வைத்து பல மாற்றங்களைச் செய்தார்.

>> இலங்கையின் மத்திய வரிசையை மாற்றிய மஹேல

இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் அணித்தலைவர், தசுன் ஷானக வரை T20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாத்தில் இடம்பெற்ற அனைவரும் ஒரு ஆலோசகராக மஹேலவிடம் இருந்து அதிக பயன்களைப் பெற்றுக்கொண்டனர் என்றால் மிகையாகாது.

இதனிடையே, இலங்கை அணிக்கு தனது குறுகியகால சேவையை வழங்கிய மஹேல ஜயவர்தன, அதன்போது அவதானித்த ஐந்து முக்கிய அம்சங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தோல்வி பயம்

கிரிக்கெட் உலகில் புகழ்பெற்ற பயிற்சியாளரான மஹேல ஜயவர்தன விளங்குகிறார். அவர் இலங்கை அணியுடன் இணைந்துகொண்ட பிறகு இலங்கை வீரர்கள் அச்சமற்ற அணுகுமுறையுடன் விளையாடுகின்ற ஓரு மனநிலையை கட்டியெழுப்பியுள்ளார்.

அண்மைக்காலமாக T20 கிரிக்கெட்டில் போராடி வரும் இலங்கை அணி, ஓமான் அணிக்கு எதிரான இரண்டு அதிகாரப்பூர்வமற்ற T20 போட்டிகள், உலகக் கிண்ணத்துக்கு முன்னோடியாக நடைபெற்ற இரண்டு பயிற்சிப் போட்டிகள் மற்றும் உலகக் கிண்ண முதல் சுற்றில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகள் என மொத்தம் ஏழு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது.

‘வீரர்களுக்கு தமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு என்ன என்பதை தெளிவுபடுத்துவது தான் எனது முதல் குறிக்கோளாக இருந்தது. இலங்கை அணியின் பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடிய போது வீரர்களிடம் காணப்படுகின்ற தோல்வி பயம் தான் இலங்கை அணியின் பின்னடைவுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

T20 கிரிக்கெட்டில் விளையாடும் நீங்கள் தோல்வி பயம் இல்லாமல் விளையாட வேண்டும். இல்லையெனில், சில சூழ்நிலைகளை மாத்திரம் வைத்து எதிரணிக்கு மீண்டும் அழுத்தம் கொடுப்பது மிகவும் கடினம். இதைப் பற்றி நாங்கள் ஒவ்வொரு வீரரிடமும் தனிப்பட்ட முறையில் பேசியுள்ளோம். குறிப்பாக இலங்கையின் துடுப்பாட்ட வரிசை தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தினோம்.’

தரவு பகுப்பாய்வு

இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையை திட்டமிடுவதில் மஹேல ஜயவர்தன தரவு பகுப்பாய்வைப் பயன்படுத்தியதாக தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மற்றும் அணித்தலைவர் தசுன் ஷானக ஆகியோர் கடந்த வாரம் ஒப்புக்கொண்டனர்.

>> ICC Men’s T20 World Cup 2021 <<

T20 போட்டிகளில் ஆரம்ப வீரராக களமிறங்கும் அவிஷ்க பெர்னாண்டோ ஓட்டங்களைக் குவிப்பதில் தடுமாறி வந்த நிலையில், அவரின் துடுப்பாட்ட வரிசையை மஹேல 4ஆவது இலக்கத்திற்கு மாற்றினார். எனவே, ஓமான் அணியுடனான தொடரிலிருந்து 4ஆம் இலக்கத்தில் களமிறங்கிய அவிஷ்க, சிறப்பான முறையில் ஓட்டங்களைக் குவித்து இலங்கையை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றதுடன், தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை சிறப்பான முறையில் நிரூபித்துக்காட்டினார்.

‘நாங்கள் என்ன செய்தோம்  என்றால் தற்போது இலங்கை T20 அணியில் தனுஷ்க குணதிலக்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் இல்லாத காரணத்தால் மத்திய வரிசையை கொஞ்சம் பலப்படுத்த தீர்மானித்தோம்.

நீங்கள் ஒரு போட்டிக்குச் செல்லும்போது முன்வரிசை மாத்திரம் பலமாக இருப்பது பொருத்தமாக இருக்காது. வெவ்வேறு வீரர்கள் அந்த இடத்திற்கு வந்து வேகமாக ஓட்டங்களைக் குவிக்க வேண்டும். இதனால் அவிஷ்கவை வைத்து அணியில் ஏதாவது ஒரு மாற்றத்தை செய்ய வேண்டும் என்று நாம் நினைத்தோம்.

அவிஷ்கவின் துடுப்பாட்டத்தில் ஒருசில பிரச்சினைகள் இருந்தன. மேலும் சில போட்டிகளில் பந்துவீச்சுக்கு முகங்கொடுப்பதில் அவர் தடுமாறி இருந்தார். எனவே, நாங்கள் அந்த இடத்தை எடுத்து அவருக்கு வித்தியாசமான ஒரு பாத்திரத்தை கொடுக்க விரும்பினோம். அதைச் செய்ய அவரிடம் திறமையொன்று இருப்பதை நான் உணர்ந்தேன். சில பந்துவீச்சு வகைகளுக்கு எதிரான அவரது கடந்தகால புள்ளி விபரங்களை நீங்கள் பார்க்கும்போது, சில பந்துவீச்சாளர்களுக்கு எதிராக திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.’

சூழ்நிலை பொருத்தங்கள்

T20 உலகக் கிண்ண தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 8 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

எனினும், வனிந்து ஹஸரங்க 5ஆவது இலக்கத்தில் களமிறங்கி 47 பந்துகளில் 71 ஓட்டங்களை அதிரடியாகக் குவித்து இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். அதுமாத்திரமின்றி, அவரது சகலதுறை ஆட்டத்தால் சுபர் 12 சுற்றுக்கு முதல் அணியாக இலங்கை தகுதிபெற்றது. ஆகவே, போட்டி முழுவதும் மிதக்கக் கூடியவராக இருக்கும் ஹஸரங்கவை 5ஆம் இலக்கத்தில் களமிறக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மஹேல ஜயவர்தன தான்.

‘T20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ஒரு சில ஓவர்களில் போட்டியை தலைகீழாக மாற்ற முடியும். இது 4 அல்லது 5 பந்துகளில் நடைபெறலாம். அயர்லாந்துடன் நடைபெற்ற போட்டியை உதாரணமாக எடுத்துக் கொண்டால், Power Play ஓவரின் கடைசி ஓவரான 6ஆவது ஓவரை சுழல் பந்துவீச்சாளர் சிமி சிங் வீசினார். இதில் வனிந்து 4 பௌண்டரிகளை அடித்து அயர்லாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

மேலும், இந்தப் போட்டியில் எமக்கு அயர்லாந்து அணி நெருக்கடியைக் கொடுப்பார்கள் என்பதை நாங்கள் அறிவோம். அதேபோல, அயர்லாந்தின் பந்துவீச்சை வனிந்துவால் எதிர்கொள்ள முடியும் என்பதையும் நாங்கள் அறிந்து வைத்திருந்தோம்.

குறிப்பாக, அவர்கள் வனிந்துவுக்கு எதிராக Power Play ஓவரில் ஒரு சுழல் பந்துவீச்சாளரை பந்துவீசச் செய்து தவறு செய்துவிட்டார்கள். அதை வனிந்துவும் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டார்.

எனவே, ஒரு T20 போட்டியில், அவ்வாறான சூழ்நிலைகளை நீங்கள் கட்டுப்படுத்தி, அந்த போட்டிகளுக்கு தயாராக இருப்பது மிகவும் முக்கியம். அவ்வாறான வீரர்களைத் தான் பயிற்சியாளர்களாக நாங்கள் தயார்படுத்தி வைக்க முயற்சி செய்ய வேண்டும்.’

வேகப் பந்துவீச்சாளர்கள்

துஷ்மந்த சமீர, லஹிரு குமார மற்றும் சாமிக கருணாரத்ன ஆகிய மூன்று வேகப் பந்துவீச்சாளர்களோடு நமீபியா மற்றும் அயர்லாந்துக்கு எதிரான போட்டிகளில் இலங்கை அணி விளையாடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. குறிப்பாக இந்த மூன்று வீரர்களும் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசி சிறந்த பெறுபேறுகளையும் பெற்றுக்கொடுத்தனர்.

WATCH – மஹேலவின் வழிகாட்டலில் Mass காட்டும் இலங்கை ஜோடி..!|Sports RoundUp – Epi 181

எனவே, பல்வேறு தடைகளுக்குப் பிறகு இலங்கையின் வேகப் பந்துவீச்சு முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக, காயமடைந்த சகலதுறை வீரர் லஹிரு மதுஷங்கவுக்குப் பதிலாக மாற்று வீரராக லஹிரு குமார அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

‘T20 போட்டிகளை எப்போதும் வெல்வது பந்துவீச்சாளர்கள் தான் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். எனவே, அந்த வாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்ட ஒரு பந்துவீச்சாளர்கள் இருப்பது மிகவும் முக்கியம். சிறப்பான துடுப்பாட்ட வீரர்களைக் கொண்டுள்ள அணிகளை கட்டுப்படுத்த ஒரே வழி விக்கெட்டுகளை எடுப்பதாகும்.

எனவே, எம்மிடம் வேகப்பந்து அல்லது சுழல்பந்தில் அந்த திறன் இருக்க வேண்டும். போட்டிக்கு முன் நான் சமிந்த வாஸ் உடன் பேசினேன். அப்போது அவர் லஹிரு குமாரவின் முன்னேற்றம் தொடர்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் அவரிடம் உள்ள திறமைகளில், குறிப்பாக யோர்க்கரில் பந்துவீச கடுமையாக உழைத்தார். அவர் அதை செயல்படுத்துவதில் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

துஷ்மந்த சமீர கடந்த 12 மாதங்களில் நீண்ட தூரம் வந்துவிட்டார். அவரிடம் உள்ள திறமையைப் பார்க்கும் போது தற்போது கிரிக்கெட் உலகில் உள்ள தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

நாங்கள் விளையாடியது 20 ஓவர்கள் போட்டியாக இருந்தாலும் எதிரணி வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடிந்தது. குறிப்பாக, சாமிக்க கருணாரத்னவும் சிறப்பாக பந்துவீசுவதால், அவருக்கு விளையாட இரண்டு வித்தியாசமான பாத்திரங்களை வழங்கியுள்ளோம். தற்போது புதிய பந்துடன் கூட அவருக்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம்’

தலைமைத்துவ அணி

கிரிக்கெட் உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான மஹேல ஜயவர்தன, இலங்கை அணி உருவாக்கிய தலைசிறந்த தலைவர்களில் ஒருவராகவும் விளங்குகிறார். ஒரு மூலோபாய தலைவரான அவர் தற்போது புதிய தலைமுறைக்கு பயிற்சியாளர் மற்றும் வழிகாட்டியாக தனது அறிவை வழங்கி வருகிறார். இந்நிலையில், தசுன் ஷானகவின் தலைமைத்துவம் தொடர்பிலும் மஹேல சிறப்பு கவனம் செலுத்தியுள்ளார்.

INSERT IMAGE – sri lanka-5

”தசுன் ஷானகவிற்கு இலங்கை அணியின் நிலைமைகளை நன்கு கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். அவர் ஒரு இளம் மற்றும் அனுபவமற்ற தலைவர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு நிறைய ஆதரவு தேவை. இதன்காரணமாக நாங்கள் அணிக்குள் ஒரு தலைமைத்துவ குழுவொன்றை உருவாக்கினோம்.

போட்டியின் போது அவருக்குத் தேவையான ஆதரவை வழங்க அவர்கள் வேலை செய்கிறார்கள். போட்டியொன்றின் திட்டங்களை நினைவில் கொள்வது கடினம். இந்தக் குழு அவருக்கு உதவும். இது அவருக்கு கொஞ்சம் நம்பிக்கையை அளிக்கிறது. எதிரணி வெவ்வேறு திட்டங்களைக் கொண்டிருக்கலாம். மேலும், ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கும் துடுப்பாட்ட வீரர்கள் தனித் திட்டங்களை உருவாக்கலாம். இது எங்கள் திட்டங்களில் இல்லாமல் இருக்கலாம்.

அத்தகைய நேரத்தில்தான் தசுன் ஷானக ஒரு தலைவராக முதிர்ச்சியடைய வேண்டும். இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து பேசுவோம். அவர் நாளுக்கு நாள் நிறைய முன்னேறி வருகிறார்” என மஹேல ஜயவர்தன தெரிவித்தார்.

இம்முறை T20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் கடைசி லீக் போட்டிகளில் மிகவும் சிறந்த திறமையை வெளிப்படுத்திய இலங்கை அணி தோல்விகள் இன்றி சுபர் 12 சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.

இறுதியாக நெதர்லாந்து அணியை 44 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்திய இலங்கை வீரர்கள் 8 விக்கெட்டுக்களினால் சாதனை வெற்றி பெற்று பலமான அணியாக அடுத்த சுற்றில் போட்டியிடவுள்ளது.

 >> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<